kamala harrishஅமெரிக்கா முதல்முதலாக ஒரு பெண் அதிபராகும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவில்லை. கமலாவின் தோல்வி தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைக் கலங்க வைத்து விட்டது. கமலா தாய் வழி பார்ப்பன மரபில் வந்தவர். மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் அவரது பூர்வீகம். கமலாவின் தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த கருப்பர் டொனால்டு ஹாரிஸ். ஆனாலும் கமலாவை பார்ப்பனியம் சொந்தம் கொண்டாடியது. குல தெய்வம், தாலி, இராமாயணம் மற்றும் சாஸ்திர சடங்குகளில் பேத்திக்கு நம்பிக்கை உண்டு என்று பூரிக்கிறார் தாய் வழிப் பாட்டி இராஜம். என்னதான் கருப்பர் – பார்ப்பனர் இனக் கலப்பு நடந்தாலும் கடல் தாண்டக்கூடாது, மாற்று வர்ணம் கலக்கக்கூடாது என்ற ’பிராமண தர்மங்கள்’ மீறப்பட்டாலும் அதிகாரம் அடையாளம் ஆகும் போது ‘கமலா எங்கள் வீட்டு மாட்டுப் பொண்ணு’ என்பதில் அவர்களுக்கு குதூகலம். ’இந்துத்துவா’ டிரம்பிடம் கலப்பு இனப் பெண் ஒருவர் தோல்வியடைந்தார் என்பது நமக்கும் வருத்தம் தான். இது மானுடப் பார்வை. மீறுவது தர்மமாக இருந்தாலும் அது ’நம்மாத்து’ குழந்தை தானே என்றே அவாள்கள் பார்ப்பனர்கள் பார்க்கிறார்கள். இது தான் பார்ப்பனியத்தின் இரட்டை வேடம்

• • • • • • • • • • • • • •

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு (நவம்பர் 3) ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவில் திருமணப் புரோகிதங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறதாம். வைதீக முறையை மீறி நடக்கும் திருமணங்களுக்கும் புரோகிதர்கள் வந்து விட்டார்கள். அமெரிக்காவில் ’ஓர் பால்’ (same sex) திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. 2015இல் அமெரிக்கா இதற்கு சட்ட ஏற்பு வழங்கியுள்ளது. சப்ன பாண்டியா என்ற பார்ப்பனப் பெண் இந்த ஓர் பால் திருமணங்களை வேத முறைப்படி மந்திரம் ஓதி நடத்தி வருகிறார். சக புரோகிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். திருநங்கை திருமணங்களையும் இவர் வேத முறைப்படி நடத்தி வருகிறார். பெண் புரோகிதர் சப்ன பாண்டியாவும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்தை நடத்தி வைக்க புரோகிதர்கள் மறுத்து விட்டார்களாம்.

நியூயார்க் நகரைச் சேர்ந்த சுஷ்மா திவிவேதி என்ற பார்ப்பன பெண் தமது தாத்தாவின் வழியாக திருமண மந்திரங்களைக் கற்றுக்கொண்டு புரோகிதம் செய்கிறார். பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்ற தடையை இவர் உடைத்தெறிகிறார். அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தொடர்ந்து பேசுகிறார். குடும்பங்கள் அங்கீகரிக்க மறுக்கும் திருமணங்களை நடத்தி வைக்க பல புரட்சி புரோகிதர்கள் வந்து விட்டார்கள். இவர்கள் தங்களுக்குள்ளாக புலனம் (whatsapp) ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். மதம் கடந்து, கடல் கடந்து, ஆண், பெண் பால் கடந்து வேத மந்திரங்கள், ”மாங்கல்ய தந்துனானேன மம ஜீவன ஹேது நா” காதைத் துளைக்கிறது.

மணமகளுக்கு முதல் மனைவி உரிமைக் கோரும் சோமனும், கந்தர்வனும், அக்னியும் நிச்சயமாக விழிபிதுங்கி நிற்பார்கள். இவ்வளவையும் மீறி வைதீகம் கமலாவையும் கட்டிப்படிக்கும். அமெரிக்கப் புரோகிதத்துக்கும் முத்தம் கொடுக்கும்.

- விடுதலை இராசேந்திரன்