‘ஆனா ரூனா’ என்று அனைவரும் அன்புடன் அழைக்கும் அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் அடையாறு அருணாசலம் (77) மே 23, பிற்பகல் 4 மணியளவில் முடிவெய்தினார். ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, தலைநகர் சென்னையில் தமிழிசை விழாக்களை தனது சொந்த பொருள் செலவில் நடத்திய பெருமைக்குரியவர். தமிழிசை பாடகர்கள் பலரையும் அடையாளம் கண்டு மேடையேற்றினார். ‘மியுசிக் அகாடமி’களும், ‘சபா’க்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கதவு திறந்த காலத்தில் பெரியார் பெயரிலேயே தமிழிசை விழாக்களை நடத்திக் காட்டியவர் ‘ஆனா ரூனா’.

தான் முன்னின்று தொடங்கிய ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ வழியாக தமிழ் வழிக்கல்விக்காக பரப்புரைகள் தெருமுனைக் கூட்டங்கள், பேரணிகளை தனது சொந்த செலவில் நடத்தி தமிழகத்தின் மய்ய நீரோட்டத்துக்கு தமிழ் வழிக் கல்வி பிரச்சினையை கொண்டு வந்தது அவரது தீவிர முயற்சிகளாகும். அதன் காரணமாகத்தான் தமிழ் வழிக் கல்வி குறித்து ஆராய அன்றைய தி.மு.க. ஆட்சி நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. ‘நந்தன் வழி’ பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அதன் ஆசிரியர். அரசு வருவாய்த் துறையில் பணியாற்றிய அவர், விருப்ப ஓய்வு பெற்று, சிறு வணிக நிறுவனமாக தொடங்கிய ‘அடையாறு மாணவர் நகலகம்’ பல கிளைகளைப் பெற்று விரிவடைந்து, பெரும் நிறுவனமாக மலர்ந்துள்ளது. பல நூறு இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற்றனர். அதில் பயிற்சி பெற்ற பலர் இப்போது தமிழகம் முழுதும் நகலகங்களை நடத்துகிறார்கள். அவரிடம் உதவிகள் பெற்றவர்கள் எண்ணிக்கை ஏராளம். தாமாக முன் வந்து உதவிக் கரங்களை நீட்டுவதும், மற்றவருக்கு உதவுவதில் பேரின்பம் அடைவதும் மிகப் பெரும் பண்பாகும்; அந்தப் பண்பு அவரிடம் இருந்தது.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மே 23 அன்று கிராமிய இசை, ‘கர்நாடக’ இசை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவரான புஷ்பவனம் குப்புசாமி, சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் அவரைக் காண வந்திருந்தார். பேச முடியாத நிலையில் படுக்கையில் இருந்த ‘ஆனா ரூனா’வின் அருகில் நின்று, ‘கிழவனல்ல; அவன் கிழக்கு திசை’ என்ற பெரியார் பற்றிய பாடலையும், ‘நல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்’ என்ற பாடலையும் தமிழிசைப் பாடல்களையும் ‘ஆனா ரூனா’ பற்றிய ஒரு பாடலையும் உணர்ச்சி மேலிட சுமார் 45 நிமிடம் பாடினார். பேச இயலாத ‘ஆனா ரூனா’வின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அடுத்த 10 நிமிடங்களிலேயே விடைபெற்றுக்கொண்டார். அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் புஷ்பவனம் பாடும் அந்த இறுதி நேர காட்சிகள் தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மனிதனின் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது ஒருவர் பொதுத் தொண்டில் தன்னை இணைத்துக் கொள்வதுதான் என்று தந்தை பெரியார் கூறுவார். பெரியார் காட்டிய வழியில் பயணித்ததே அவரது பெருமை.‘ஆனா ரூனா’க்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!

குறிப்பு: கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தோழர்களுடன் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Pin It