நவரத்தினங்களில் ஒன்றாக கருதப்படுவது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். இந்த பொதுத் துறை நிறுவனம், ஆண்டுக்கு 1500 கோடி நிகர லாபம் ஈட்டித் தரும் - தமிழ்நாட்டின் சொத்து. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை புறக்கணித்து, இந் நிறுவனத் தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் விபரீத முடிவை மன்மோகன் சிங் ஆட்சி எடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே இரண்டு முறை நடுவண் அரசு இந்த முயற்சிகளில் இறங்கி, தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைத்தது. இந்தப் பங்கு விற்பனையை நிறுத்தக் கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா முன் வைத்த கோரிக்கையை செவிமெடுக்க மறுத்த நிலையில், ஒரு கட்டத்தில் அப்படி பங்குகளை விற்றே தீருவது என்பதில் நடுவண் அரசு உறுதியாக இருக்குமானால், தமிழக அரசின் தொழில் முதலீட்டுக் கழகமே அதை வாங்கிக் கொள்ளத் தயார் என்று கடிதம் எழுதினார்.  ‘உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனராக’ டில்லி அரசு இதில் திட்டவட்டமாக பதில் அளிக்காமல் விழிக்கிறது.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை வேகம் வேகமாக வெளியாருக்கு விற்பனை செய்யும் முடிவு பாரதிய ஜனதா ஆட்சி காலத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1992-லேயே பங்குகளை விற்பதற்காக (னுளைinஎநளவஅநவே) ஒரு தனித் துறையே உருவாக்கப்பட்டு, அருண்ஷோரி என்ற பார்ப்பனர், அதன் அமைச்சராக்கப்பட்டார். துணை பிரதமர் அத்வானி தலைமையில் இதற்கென்றே உயர் அமைச்சரவைக் குழு ஒன்றும் செயல்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களான மாடர்ன் ஃபுட்ஸ் எண்ணெய் நிறுவனமான அய்.பி.சி.எல். துறைமுகத்தோடு தொடர்புடைய கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு உரிமையான ஓட்டல்கள் என்று தொடர்ந்தது, அடுத்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் காப்பீட்டுத் துறை, வங்கித் துறை, தகவல் தொடர்புத் துறை என்று பொதுத் துறை பங்குகள் விற்பனை விரிவடைந்தது. முதலில், நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதாகக் கூறினார்கள். பிறகு இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளையும் அடிமாட்டு விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டார்கள். ரிசர்வ் வங்கியில் தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அரங்கராசன் என்ற பார்ப்பனர் தலைமையில் அமைச்சரவைக்கு ஆலோசனை கூற ஒரு குழுவே இதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பார்ப்பன நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச சந்தைக்குத் திறந்துவிடும், ஆபத்தான பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதன் தொடக்கம் நடுவண் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் பங்குகள் விற்பனைக்குக் காரணங்களாகிவிட்டன.

1. அய்.எம்.எப். என்ற சர்வதேச நிதி நிறுவனம், கடன் வாங்குதலைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதை ஏற்றுக் கொண்டு, நீண்டகால அடிப்படையில் நீடித்து நிலைக்கும் உற்பத்திகளை வழங்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பதற்காக திட்டங்கள் வெட்டப்பட்டன. திட்டங்கள் குறைந்ததால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்தது.

2. அதே நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று பணக்கார சுரண்டும் நாடுகளும் அதன் நிறுவனங்களும் வலியுறுத்தியதை அரசு ஏற்றது.

3. முதலீட்டுக் குறைப்பு, இறக்குமதி வரிக் குறைப்பு எனும் இரட்டை நடவடிக்கைகளால் அரசு வருமானம் குறைந்து, பற்றாக்குறைக்காக கடன் வாங்கும் நிலை உருவானது. வாங்கிய கடன் நீடித்த முதலீடுகளுக்கு செலவிடப்படாமல், நடைமுறைச் செலவுகளை ஈடுகட்டுவதற்கே பெருமளவில் செலவிடப்பட்டது.

இப்போது இந்தியாவில் குறுகிய கால வெளிநாட்டுக் கடன் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி. அதை இன்னும் 9 மாதங்களில் செலுத்தியாக வேண்டும். இந்தியாவை சுரண்டுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் ‘நடைபாவாடை’ விரித்து அழைத்து வந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த கடனே இதில் பெரும் பகுதியாகும். அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன்களை வழங்குவதில், தாராளம் காட்டியதை நம்பி, கடனை வாங்கிக் குவித்தார்கள். ஆனால், அமெரிக்க ரிசர்வ் வங்கி விரித்த வலையில் சிக்கியவர்கள், இப்போது அதே அமெரிக்க வங்கி விதிகளைக் கடுமையாக்கியதால்பொருளாதாரம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது.

கடன் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு பொதுத் துறையில் முதலீடுகளை குறைத்தார்கள். இப்போது அடுத்த கட்டமாக இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையே விற்கத் தொடங்கிவிட்டனர். இந்திய தேசிய பார்ப்பன ஆட்சி, மண்டல் பரிந்துரை அமுலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, (பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் சரியப் போகிறது என்ற அச்சத்தில்) பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசினார்கள். அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி, தங்கள் பார்ப்பன மேலாதிக்கத்தை நீட்டிக்க திட்டமிட்டதன் விளைவே இந்த நெருக்கடி களுக்கான அடிப்படைக் காரணம். இந்த நிலையில் இந்திய தேசிய பார்ப்பன பன்னாட்டு சுரண்டல் பொறிக்குள் தமிழர்கள் ஏன் சிக்கித் தவிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் காலம் வந்துவிட்டது. நெய்வேலி பங்கு விற்பனை தமிழர்களுக்கு தரும் செய்தி இதுதான்!

Pin It