தரமான தமிழ்த் திரைப்படங்களைத் தந்து வரும் பிரகாஷ் ராஜ்-ராதா மோகன் கூட்டணியில் வெளி வந்திருக்கிறது “கௌரவம்” திரைப்படம். தமிழ்நாட்டில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் விவாதிக்கவே ஒதுங்கி நிற்கும் ஒரு பிரச்சினையை படத்தின் மய்யக் கருவாக்க துணிவுடன் முன் வந்திருக்கும் இந்தக் குழுவினரின் சமூகப் பார்வையை மனம் திறந்து பாராட்டியாக வேண்டும்.

பொறியாளர் பட்டம் பெற்று வெளிநாட்டுக்கு வேலை தேடிப் போக விரும்பாமல் சொந்த மண்ணிலே ஒரு தொழிலைத் தொடங்கி, பலருக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்ட சென்னை நகரத்தைச் சார்ந்த ஒரு மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த இளைஞன். தன்னுடன் படித்த சண்முகம் என்ற பொறியியல் பட்டதாரியை பழைய நினைவு களோடு சந்திக்க அந்த கிராமத்துக்குப் போகிறான். நண்பன் ஒரு ‘தலித்’ என்பது அவனுக்குத் தெரியும். “இரட்டைக் குவளை”களைக் கொண்டுள்ள தேனீர்க் கடையில் உட்கார்ந்து கிரிக்கெட், அரசியலை விவாதித்துக் கொண் டிருக்கும் உள்ளுர் ஆதிக்க சாதி “பெரிசு”களிடம் சண்முகம் வீடு பற்றி விசாரிக்கும்போது ‘பெரிசுகள்’ முகம் கடுகடுக்கிறது. “அப்படிப்பட்ட தேடுதல்களோடு வெளியூர்காரனாகிய நீ இங்கே வராதே; இந்த கிராமம் நான்கு புறமும் ‘சுடுகாடுகள்’ கொண்டது. உடனே ஊருக்கு கிளம்பு” என்று விரட்டும் தொனியில் பேசும்போது அதே தேனீர்க்கடையில் வெளியே நின்று ‘பிளாஸ்டிக்’ குவளையில் சண்முகத்தின் உறவினரான தேனீர் குடித்துக் கொண்டிருந்த மாசி என்ற தலித் இளைஞர் இதை கவனிக்கிறார். அவரே சண்முகம் வாழ்ந்த சேரிக்கு அழைத்துச் செல்கிறார். உள்ளூர் பெரும் புள்ளியான ஆதிக்கசாதி பசுபதியின் மகளை சண்முகம் காதலித்து ஊரைவிட்டே ஓடிப் போன செய்தி கிடைக்கிறது. அவர்களின் கதி என்ன வென்றே தெரியவில்லை என்று சண்முகத்தின் தந்தை நண்பனிடம் கதறியழுகிறார்.

“எப்படியாவது எனது மகனை தேடிக் கொடுக்க மாட்டாயா?” என்று அந்த இளைஞனின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். தந்தையின் கண்ணீரால் மனம் பதைத்த அந்த இளைஞன், சண்முகத்தைக் கண்டுபிடிப்பதற்கு சபதம் ஏற்று சென்னை திரும்பி தனது மற்றொரு ‘பார்ப்பன’ சக நண்பனோடு அந்த கிராமத்துக்கு திரும்பி அங்கேயே கூடாரமடித்து நண்பனோடு சண்முகத்தை தேடத் தொடங்கு கிறார். அதே ஊரில் தொழிற்சங்கத் தலைவராக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தோழர் (நடிகர் நாசர்) ஒருவரை சந்திக்கிறார். கல்கத்தாவில் தொழிற்சங்கப் பணிகளுக்காக சென்றிருந்தபோது ஒரு வங்காளிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு அந்த வங்காளிப் பெண் மரணமடைந்து விட்டார். அந்தப் பெண் யாழினி, ஒரு வழக்கறிஞர். சண்முகத்தைத் தேடும் பணியில் அவர்களின் நண்பர் குழுவோடு வழக்கறிஞர் யாழினியும் இணைந்து கொள்கிறார். காவல் நிலையம், திருமணப் பதிவு நிலையம் என்று தேடுதல் விசாரணையை இந்த ‘இளைஞர் அணி’ தீவிர மாக்கும் நிலையில் உள்ளூர் ஆதிக்க சாதி குடும்பம் இவர்களை அச்சுறுத்தி குடியிருப்புகளுக்கு தீ வைத்து மிரட்டுகிறது. சவாலை எதிர்கொள்ள உறுதி ஏற்கும் இந்த இளைஞர் குழு தங்களோடு படித்த பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சக மாணவர்களையும் மாணவிகளையும் மின்னஞ்சல், இணையதளம் வழியாக தங்களின் இந்த நீதி கேட்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறது. பெரும் பொறியியல் பட்டதாரிப் படையே கிராமத் துக்கு திரண்டு வருகிறது. பக்கத்து கிராமத்தைச் சார்ந்த இளைஞர்களும் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஒன்றுபட்ட இளைஞர்களின் தீவிரமான செயல்பாடுகளால் உண்மைகள் அம்பல மாகின்றன. தலித் சண்முகமும் ஆதிக்கசாதிப் பெண் ராஜேஸ்வரியும் ஒருவரை யொருவர் விரும்பி காதலித்து ஊரை விட்டே வெளியேற முயற்சிக்கும் போது அவர்களை ஆதிக்க சாதி குடும்பத்தினரே குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்து கிராமத்தில் புதைத்த உண்மைகளை இந்த இளைஞர் படை அம்பலப்படுத்துவதுதான் கதை.

படத்தின் கருவாக எடுத்துக் கொண்ட ஜாதி பிரச்சினை சமூகத்தில் பதட்டத்தை வெடிக்கச் செய்யக் கூடியது என்ற கவலையோடும் எச்சரிக்கையோடும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். ‘சண்முகம்-ராஜேசுவரி’ காதலர்கள் ஜாதிவெறிக்கு பலியானா லும் அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறியும் நிகழ்வுகளை துப்பறியும் பாணியில் விறுவிறுப்பாக இயக்குனர் நகர்த்திச் சென்றிரு கிறார். தீண்டாமைக்கு எதிரான கருத்துகள் மிகவும் அளவோடு அதே நேரத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ‘பிரச்சாரப் படம்’ என்ற முத்திரை விழுந்து விடாமல், இயக்குனர் எச்சரிக்கை காட்டியிருக்கிறார். திரைப்பட அரங்கிற்கு திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்கள் திரைப்பட ரசனையுடன் வருகிறவர்கள். எனவே நல்ல கருத்துகளை சரியான திரைப்பட வடிவத்தில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும்போது தான் முன் வைக்கப்படும் கருத்தும் வெற்றி பெற முடியும். அந்த வகையில் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஜாதி வெறியை எதிர்த்து நண்பனுக்காகப் போராடும் இந்த பொறியியல் பட்டதாரி இளை ஞர்கள், நவீன வாழ்க்கை முறைக்கு பழகியவர் களாகவும், இளைய தலைமுறை யினராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பழமையான ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக நவீன நாகரீக இளைய சமூகம் போராடுவதாக திரைக்கதை அமைக்கப்பட் டுள்ளது.  (இதே கண்ணோட்டத்தில் தான் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்களையும் நடத்தி வருகிறது)

படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் - ஆதிக்க ஜாதிக் குடும்பத்தைச் சார்ந்த பெண்களே இத்தகைய படுகொலைகளை ஆதரிக்காமல் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க உதவ முன் வருவதாகும். ஆதிக்க ஜாதி ஆண்களிடம்தான் இத்தகைய கொலை வெறி தலைதூக்கி நிற்கிறதே தவிர, அவர்கள் ஆதிக்கத்தின் கீழ் ஆட்பட்டுக் கிடக்கும் பெண்களிடம் அத்தகைய மனநிலை கிடையாது என்பதையும் ஜாதிகளைவிட, இந்தப் பெண்களிடம் பாசமும் மனித நேயமும் தான் உள்ளார்ந்த உணர்வாக இழையோடிக் கொண்டிருக்கிறது என்பதையும் துல்லியமாக உணர்த்தியுள்ளனர். அதே நேரத்தில் தீண்டப்படாத சேரி வாழ் மக்களேகூட தங்களுக்குக் கீழான ஜாதியை ஒதுக்கி வைப்பதையும் நாசூக்காக தொழிற்சங்கத் தலைவர் நடத்தும் உரையாடல்கள் வழியாக இடித்துரைக்கப் பட்டுள்ளது.

படம் பார்ப்போர் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து நிற்பவர் கதாநாயகனுக்கு (நடிகர் கிரிஷ்) உதவி செய்யும் சேரி வாழ் இளைஞர் மாசி; இயல்பாக அவர் உச்சரிக்கும் நறுக்கான வசனங்கள் ஜாதி வெறிக்கு விழுகிற சாட்டை அடி.

பள்ளிக் கூடத்திலே ஆசிரியர் ஜாதியைச் சொல்லி திட்டியபோது ‘சிலேட்டை’ எடுத்து ஆசிரியர் மண்டையில் அடித்துவிட்டு டிக்கட் எடுக்காமல் சென்னைக்கு ஓடி, சில ஆண்டுகளுக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பியவர் மாசி. இந்த கிராமத்து டீ கடையிலேதான் அவமானப்பட்டு டீ குடிக்கிறோம். சென்னையிலே எங்களை என்னா ஜாதின்னு எவனும் கேட்க மாட்டான் சார். சரவண பவன் ஓட்டலிலே போய் சாப்பிட்டுவிட்டு, பில்லை யும் டிப்சையும் கொடுத்துவிட்டு வந்துகிட்டே இருப்போம் சார். எங்களுக்கு முதலில் சென்னை; பிறகு தான் சார் அன்னை என்று அவர் கூறும்போது கிராமங்களின் “பெருமை” ஜாதியில் தான் வாழ்கிறது என்ற உண்மை உணர்த்தப்படு கிறது.

இந்த கிராமத்துக்குள்ளே காரிலே போக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிவிட்டீர்கள். நீங்கள் போட்டிருக்கிறது போல ஒரு கூலிங்கிளாஸ் போடணும்னு ஆசை என்று மாசி தனது ஆசையை நண்பர்களிடம் வெளிப்படுத்தியவுடன் நண்பன் தனது கூலிங் கிளாசை கழற்றித்தரும் காட்சியும், நீதிக்குப் போராடும் இளைஞர்கள் ஜாதி எதிர்ப்புப் பதாகைகளை தாங்கி வருவதும், காதலர்களின் பிணங்களின் படத்தில், இந்தப் பிணம் என்ன ஜாதி என்று எழுதி வைத்திருப்பதும், ‘நாம் ஒன்று சேரும் நேரம் புது சக்தி வந்து சேரும்’ என்று இளைஞர்கள் எழுச்சிப் பாடலைப் பாடும் காட்சியில் ‘கருப்பு சட்டை-நீல நிற ஜீன்ஸ் பேன்ட்’ அணிந்திருப்பதும், காலத்திற்கேற்ற நுணுக்கமான சித்தரிப்புகள். மகனைப் பறி கொடுத்த சண்முகத்தின் தந்தையாக நடிக்கும் பாத்திரம் உள்ளத்தைத் தொடுகிறது. இறுதி காட்சியில் ‘என்னுடைய சாவுக்கும் நீ தான் எனது மகனுக்கு பதிலாக வரவேண்டும்’ என்று கதாநாயகனிடம் கூறும்போது நெகிழ வைக்கிறார்.

சண்முகம் கொலை செய்யப்பட்ட உண்மை அறிந்து, தலித் கிராமமே சோகத்தில் மூழ்கும்போது, மாசி குடித்துவிட்டு பேசுவதாக வரும் காட்சி, சேரி மக்களின் வலியை ஆணி அடித்ததுபோல் சுருக் கென்று பதிய வைக்கிறது. கொடுமைகளை எத்தனை காலம் தாங்கிக் கொள்வது? நாங்கள் அடித்தால் மட்டும் ரத்தம் வராதா? என்று கோபத் தின் உச்சியில் பேசுவதும், சாதிக் கலவரத்தால் பாலுறவு வன்முறைக்கு உள்ளான தமிழரசி என்ற தலித் பெண்ணை 7 ஆண்டுகளாக எவருமே திருமணம் செய்ய முன் வராமல் இருப்பதை சுட்டிக் காட்டி கதறுவதும், கல் மனiதையும் கரைய வைக்கும் காட்சி. உங்களில் ஒருவர் ஏன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை? என்று கோபத்துடன் கதாநாயகன் திருப்பிக் கேட்கும்போது, அந்தப் பெண் சம்மதித்தால் நான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று மாசி கூறுகிறார். இதில் பெண்ணின் சம்மதம் நிபந்தனையாக்கப்படுகிறது. அதேபோல், “ராஜேசுவரி என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; அவளை வேறு ஒரு சாதிக்காரன் திருமணம் செய்து விட்டால், அவனை உயிரோடு விடுவேனா?” என்று உறவுக்காரன் கதாநாயகனிடம் மிரட்டும்போது, “நீ விரும்பினால் போதுமாடா? அந்தப் பெண் விரும்ப வேண்டாமா?” என்று கதா நாயகன் பதிலடி தருவதும் பெண்ணுரிமைக்கான ‘பஞ்ச்’.

“என் மகள் விரும்பியவனை திருமணம் செய்து கொள்வது குற்றமா? அதற்காக அவளை கொலை செய்வீர்களா? பாவிகளே! உன் கவுரவம் போகிறது என்றால், நீ சாக வேண்டியது தானே?” என்று ராஜேசுவரியின் தாய் தனது கணவரிடம் ஆவேசத்துடன் கேட்பது, ஜாதி வெறிக்கு விழும் சாட்டையடி!

“பாரதி ராஜா காட்டிய கிராமத்தில் இத்தகைய கிராமங்களை நாங்கள் பார்க்கவில்லையே” என்று கதாநாயகன் கூறும் ஒற்றை வரி இயக்குனர் சிகரங்களுக்குள் மறைந்துள்ள ஜாதி வெறியை கிழித்துப் போட்டு விடுகிறது.

ஜாதி-தீண்டாமைக்கு எதிராக மக்களை சிந்திக்கச் செய்ய வேண்டிய இந்த படம் உணர்ச்சி அலைகளை உசுப்பிவிடக் கூடாது என்ற கவலையோடு இயக்குநர் ராதா மோகன் காட்சிகளை செதுக்கியிருக்கிறார். அதன் காரணமாகவே பாத்திரங்கள் பேசும் கருத்துகள் எல்லை மீறாது நியாயங்களை மட்டும் பேசுகின்றன. கூர்மையான வசனங்களை பாத்திரங்களின் இயல்புக்கேற்ப பேச வைத்திருக்கிறார் உரையாடலை எழுதிய விஜி. எவ்வளவு பாராட்டி னாலும் தகும். பிரகாஷ்ராஜ் அழுத்தமான நடிப்பின் வழியே தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

கவுரவம் - வாழும் முறையிலிருந்து வருகிறதே தவிர, ஜாதியிலிருந்து வரவில்லை என்பதே படம் கூறும் சேதி!

தமிழ்த் திரைப்படத் துறைக்கு ‘கவுரவம்’ சேர்த்துள்ளனர் பிரகாஷ்ராஜ் குழுவினர். கிராத்தின் அழகை கவிதையாக படம் பிடித்துள்ளார் ஒளிப் பதிவாளர். அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

அடக்கப்பட்டவர்களின் வலியை மனித உறவுகள் வழியாக நெகிழ்ச்சியுடன் பேச வைத்திருக்கிறது “கௌரவம்”. பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய படம். - இரா

Pin It