மய்ய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டே வருகிறது. அதை எதிர்த்து போராடாத ஜாதித் தலைவர்கள், தாழ்த்தப்பட் டோருக்கு எதிராக போராடக் கிளம்புவது என்ன நியாயம்? என்று ஈரோட்டில் டிசம்பர் 24 அன்று நடந்த மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார். (சென்ற இதழ் தொடர்ச்சி)

நம் நாட்டில் திருக்குறளையும் பேசுவார்கள்; மனுவாதியாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் பற்றி என்னுடைய தொலைக் காட்சி நேர்காணலில் சொன்னேன். தமிழ்த்  தேசியம் என்றால் என்னய்யா? தமிழர்களுக்கு உரிமை வேண்டும்; தமிழக உரிமைக்காக போராட வேண்டும் என்பது தானே? நான் இரட்டைக் குவளையைப் பற்றி ஒட்டன்சத்திரத்திலுள்ள வாகரை என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் பேசினேன். அப்போது ஒருவன் (ஜாதியவாதி) பேசினான், ‘நீ என்ன தி.க.காரன் தானே? நீ அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதைப் பற்றிப் பேசு. இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசு. இரட்டைக் குவளையை உடைக்கச் சொல்லி என்றைக்கு பெரியார் சொன்னார்?’ என்றான். அப்படித்தான் அவனிடம் நாம் ‘அறிமுகம்’ ஆகித் தொலைத்திருக்கிறோம். அடுத்த கூட்டத்தில் காவிரி நீர் உரிமைக்குப் பேசு என்றான். அப்போது நான் சொன்னேன், ‘சரிய்யா தமிழ்த் தேசியம்-காவிரி நீர் உரிமைக்குப் பேசுகிறேன். கர்நாடகக்காரனிடம் சண்டை போடுவோம். சரி; ஏண்டா உள்ளூரில் இருக்கின்ற தாழ்த்தப்பட்டோருக்கு தண்ணீர் போவதற்கு போடப்பட்ட குழாயை மூன்றுமுறை உடைத்து விட்டாயே? நீ போய் கர்நாடகக்கார னிடம் தண்ணீர் கேட்க உனக்கு என்ன யோக்கி யதை இருக்கிறது என்று கேட்டேன். (பலத்த கைத்தட்டல்) அந்த ஊராட்சி மன்றத் தலைவரான தாழ்த்தப்பட்டவர் தன் பகுதிக்கு குடிநீர் எடுத்துச் செல்ல முயன்றபோது மூன்று முறை அந்தக் குடிநீர் குழாயை உடைத்தனர், ஆதிக்க ஜாதியினர்.

அந்த ஊரில் தான் சொன்னோம், இவரைச் சேர்மேன் என்பார்கள். இவர் சேர்மேன் இல்லை ஃப்ளோர்மேன் என்று. ஏனென்றால், அந்த ஊராட்சி மன்றத் தலைவரை கீழேதான் உட்கார வைக்கிறார்கள். நாற்காலியில் உட்கார விடுவதே இல்லை. அவர் வாகறை ஊராட்சி மன்றத் தலைவர். சின்னான் என்று பெயர், அருந்ததியர். அவரைக் கீழேதான் உட்கார வைக்கிறார்கள். துணைத் தலைவர்தான் நாற்காலியில் உட்கார்ந்து கூட்டத்தை நடத்துவார். இந்த ஊர் ஃப்ளோர்மேன் சொன்னார் என்று சொன்னேன். ஃப்ளோர்மேன் தான் தீர்மானத்தை போட்டார். சேர்மேன் இல்லையே அவர். எவ்வளவு கொடுமை? முதலில் எங்கள் எல்லோரையும் மனிதன் என்று ஒத்துக் கொள்ளுங்கள். அதற்கு எவ்வளவு முயற்சி செய் கிறோம்? மற்ற உரிமைகள் எல்லாம்கூட பிறகு வரட்டும். சமஉரிமை உடைய மனிதர் என்று ஒப்புக் கொள். ஒன்றே ஒன்று பிற்படுத்தப்பட்ட தலைவர் களுக்குச் சொல்ல வேண்டும். இப்போது தாழ்த்தப் பட்டோர் பதவி உயர்வுக்கான தீர்மானத்தை வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். நாடாளு மன்றத்திலும் அது வர இருக்கிறது. இருக்கட்டும். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று இந்த பிற் படுத்தப்பட்ட தலைவர்கள் எல்லாம் மிகவும் முயற்சி எடுத்துப் போராடுகிறார்கள். யார் தாழ்த்தப் பட்டவர்கள் என்ற ஒரு கேள்வியை நாங்கள் முன் வைக்கிறோம். மய்ய அரசுப் பணிகளின் புள்ளி விவரங்கள் உங்களிடம் இருக்கிறதா? அமைச்சர் நாராயணசாமி 2008 நவம்பரில் ஒரு புள்ளி விவரம் சொன்னார். இப்போதும் ஒரு முறை சொன்னார்.

தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் 20.60 விழுக்காடு உள்ளனர். 3, 4, 5ஆம் நிலைப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் 24.79 விழுக் காடுள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்களோ வெறும் 7.11 விழுக்காடு மட்டும்தான்.  மய்ய அரசின் முதல்நிலைப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள் 17.39 விழுக்காடு உள்ளனர். ஆனால், அவர்களுக்கு 22.5 விழுக்காடு கொடுக்க வேண்டும். 17.39 விழுக்காடு என்பது குறைவுதான். ஆனால், 52 விழுக்காடு மக்கள் தொகை உள்ள பிற்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை அதில் எவ்வளவு தெரியுமா? வெறும் 5.44 விழுக்காடுதான். யாரப்பா கீழ்ஜாதி, யார் தாழ்ந்த ஜாதி என்று கேட்டோம்? இரண்டாம் நிலைப் பணிகளில் 3.97 விழுக்காடு தான் பிற்படுத்தப்பட்டோர் உள்ளனர்.

நீ பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவன் என்றால், ஏண்டா என் ஜாதிக்காரனுக்கு போதுமான வேலை கொடுக்கவில்லை என்று அவனிடம் (மய்ய அரசு) போய் சண்டை போடு. இங்கே உட்கார்ந்து சண்டை போடுகிறாயே நீ? சண்டை போடுகிற இடத்திற்கு நீ போக மாட்டாய். இங்கே உட்கார்ந்து ஏமாந்தவனிடம் சண்டை போடுகிறாயா நீ?

நீ என்ன பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவன்?

ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டவர்களும் அவர்கள் தலைவன் வருகிறபோதெல்லாம் இப்படிக் கேட்க வேண்டும். எங்களுக்கு ஏனய்யா போதுமான இடஒதுக்கீடு இல்லை. 27 விழுக்காடு 1994-லிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டதே? இன்றைக்கு வரைக்கும் மய்ய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்ன இடஒதுக்கீடு? அதற்கு நீ என்ன செய்தாய் சொல்? பட்டியலைக் கொடு. தமிழ்நாடு அரசு தன் செலவில் நடத்துகிற மருத்துவக் கல்லூரிகளில் முதுகலைக் கல்வியில் அனைத்திந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் 50 விழுக்காடு இடங்களை அவன் வாங்கிக் கொண்டு செல்கிறான். அதில் இடஒதுக்கீடு தருவ தில்லை. மீதி இருக்கிற 50 விழுக்காடு இடங்களைத் தான் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு தர முடியும். அதற்குப் போராடுங்கள். அதற்காக வாய்திறந்து பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் பேசாதவரை, பிற்படுத்தப்பட்ட மக்களே உங்கள் தலைவர்கள் வந்தால் இதைப் பேசிவிட்டு வாடா என் ஊருக்கு என்று நாம் போராட வேண்டும். அல்லது பிற்படுத்தப்பட்ட மக்களை போராடச் செய்ய வேண்டும். என் பேச்சை நீட்டிக்க விரும்பவில்லை. தோழர்களே! நம்முடைய தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் 1927-லேயே மனு சாஸ்திரத்தை எரித்துவிட்டார்கள். பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோதே சொன்னார். 1922 திருப்பூர் மாநாட் டில் சொன்னார், ‘தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதை கொள்கையளவில் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளட்டும் என்று கேட்டார். ஏற்றுக் கொள்ள வில்லை காங்கிரஸ் கட்சி. அதை எதிர்த்தவர் யார் என்றால், 1939இல் கோயில் நுழைவுப் போராட் டத்துக்குக் காரணமாக இருந்தவர் என்று சொல்லப் பட்ட வைத்தியநாத அய்யர்தான். அப்போது, ‘உனக்கு சாஸ்திரம் தெரியுமா? இராமாயணம் தெரியுமா?’ என்று வைத்தியநாத அய்யர் கேட்ட தற்கு, அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் சொன்னார், ‘மனு சாஸ்திரமும், இராமாயணமும் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழையத் தடையாக இருந்தால், அதை இரண்டையும் எரிக்கணுமே தவிர இதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்றார். ‘இராமாயணத்தையும் மனு சாஸ்திரத்தை யும் எரிப்போம்’ என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது 1922இல் திருப்பூர் மாநாட்டில் பெரியார்  பேசினார். (கைதட்டல்)

இப்போது நாம் ஒன்றும் புதிதாகச் செய்ய வில்லை. நம்முடைய தலைவர்கள், வழிகாட்டிகள் இருவரின் காலத்தில் இருந்ததைவிட நம் உணர்வுகள் மங்கிப் போய் இருக்கிறது. நாம் தூங்கிப் போனவர்களாக, விழிப்பற்றவர்களாக இருக்கிறோம். நாம் விழிப்புக் கொள்வோம்; போராடுவோம். மனுசாஸ்திர எரிப்பு என்பது ஒரு குறியீடு. யாரும் அதைப் பார்த்து படித்து எதுவும் சொல்வதில்லை. பெரியார்தான் சொல்வார், ‘ஏண்டா, வேதத்தைப் படிக்கக் கூடாது என்கிறாய். இந்துவாக இரு என்கிறாய். நான் படித்துப் பார்க்கிறேன். பிடித்தால் இருக்கிறேன். இல்லை யென்றால் போய்விடுவேன். என்னை படிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு இந்துவாய் இரு என்று சொல்கிறாய். பத்திரத்தை எழுதிவிட்டு, அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடு என்று சொல்லுகிற அயோக்கியப் பயலுக் கும் உனக்கும் என்ன வித்தியாசம்’ என்று கேட்டார்.

வேதத்தைப் படிக்காதே; ஆனால் இந்து மதத்தில் இரு. ஆனால், இப்போது மனுசாஸ்திரத்தை நாங்கள் படித்து விட்டோம். எங்கள் முன்னோர்கள் எல்லாம் அதை மொழி பெயர்த்துத் தந்திருக் கிறார்கள். எனவே, அதைப் படித்து விட்டோம். புரிந்து கொண்டோம். இந்தக் காலகட்டத்திலாவது குறியீடான இந்தப் போராட்டம் நடத்த உள்ளோம். மனுசாஸ்திரம் என்ற புத்தகத்தை எரித்துவிட்டால் எல்லாம் முடிந்து போவது இல்லை. ஆனால், இது கிளப்புகிற விவாதம், இது கிளப்புகிற உணர்ச்சி, இது கிளப்புகிற எழுச்சி - ஜாதி ஒழிந்த சமுதா யத்தைப் படைப்பதற்கு துணை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்தப் போராட்டத்தை நாங்கள் முன் எடுத்திருக்கிறோம் என்று சொல்லி, இந்த இறுதித் தீர்மானத்தை நான் முன்மொழிய விரும்புகிறேன். நீங்கள் வழிமொழிய உங்கள் கையொலியை எழுப்புங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘ஜாதி-தீண்டாமையின் வடிவங்கள்’ தொடர்ந்து நிலைபெற்று இருப்பதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக் காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோரின் வாழ் விடங்கள், ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மாற்றுவதற்கு அரசு கட்டித்தரும் தலித் மக்களுக் கான குடியிருப்புகள், ஆதிக்க ஜாதிகள் வாழும் ஊர்ப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு களாகக் கட்டித் தர வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் ‘ஜாதியற்றோர்’ என்ற பிரிவை உருவாக்கி, அவர் களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதி அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது. திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தேனீர் கடைகள், முடிதிருத்தகங்கள், வழிபாட்டு இடங்கள் என்பன போன்ற பொது பயன்பாட்டுக்கான இடங் களில் தீண்டாமைக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் போன்ற ஜாதி-தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானங்களை திருப்பூரில் கடந்த 29.4.2012 இல் நடத்திய ஜாதி-வாழ்வியல் எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றி, அதன் அடிப்படையில் அந்த ஜாதி-தீண்டாமைக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் பார்ப்பனிய, மனுசாஸ்திர எரிப்புப் போராட் டத்தை அறிவித்தோம். இப்போது ‘தலித் மக்களை தனிமைப்படுத்துதல்’ என்ற செயல் திட்டதோடு ஜாதிக் கட்சிகள் வெளிப்படையாக இயக்கங்கள் நடத்தி, தமிழகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்துகள் உருவாகி உள்ளன.

இப்படிப்பட்ட இந்த மனுவாத ஜாதியக் கட்சி களுக்கு எதிராக மக்களைத் திரட்டி அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், மனு சாஸ்திர அடிப்படையில் ஜாதி-தீண்டாமைக் கொடுமைகள் நிலைப்பாட்டை மாற்றி அமைக்கக் கோரியும், ‘ஜாதி எதிர்ப்பு மாநாடு’களை நடத்திடவும், அதற்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, ‘ஜாதி-தீண்டாமைக்கு எதிரான பரப்புரைப் பயணங்கள் நடத்திடவும், ஒவ்வொரு பயணத்தின் நிறைவிலும் அந்தந்த மண்டலங்களில் ஜாதி எதிர்ப்பு மாநாடு களை நடத்துவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது. அதன் அடிப்படையில், ஜனவரி 22 சென்னையிலும், பிப்ரவரி 16 சேலத்திலும், பிப்ரவரி 18 திண்டுக்கல்லிலும், பிப்ரவரி 23 தஞ்சையிலும், மார்ச் 9 திருநெல்வேலியிலும், மார்ச் 16 கோவை யிலும், மார்ச் 23 புதுவையிலும், ஏப்ரல் 6 திருச்சியிலும் மாநாடுகள் நடத்திடவும் நிறைவாக, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று தமிழ்நாடு எங்கும் மனுசாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்துவது எனவும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது. (ஆரவாரம், பலத்த கைதட்டல்) பெரியாரின் நினைவு நாளில் எடுத்த இந்த முடிவை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் நிறைவேற்றுவோம் என்ற முழக்கத்தோடு விடைபெற விரும்புகிறேன். (பெருத்த ஆரவாரம்)

உரைத் தொகுப்பு: ஜஸ்டின் ராஜ்

Pin It