எதிர்பார்த்தது நடந்து விட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பையும் மீறி துப்பாக்கி முனையில் இயங்கச் செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஒரு அணுஉலை அமைப்பதற்கு மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படையான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஒப்பந்தத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரம் தேவைக்காக இந்தியப் பார்ப்பன பனியா ஆட்சி, மக்கள் மீது திணிப்பதற்கு இப்போது மாநில ஆட்சியும் துணை போகிறது.

அணு உலை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஒரு அணு உலை அமையப் போகும் இடத்தின் நிலவியல் என்பது மிக முக்கியமாக ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். அதற்காக அணுசக்தித் துறை வி.ஆர். வென்குலேர்ச்சர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 1972 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.   நிலவியல் அமைப்பு, அதன் நிலைத்த தன்மை (Geological stability) கட்டாயம் ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்திய பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாகும்.

கூடங்குளத்தில் நிலவியல் அமைப்பு முறை எப்படி உள்ளது? கூடங்குளம் அணுஆலை அமைந்திருக்கும் இடத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் அதாவது மன்னார் வளைகுடாவில் நிலச்சரிவு வழியாக சுனாமியை உருவாக்கக்கூடிய இரண்டு வண்டல் குவியல்கள் Slumps இருக்கும் ஆபத்தை, வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் பவுரீ என்ற இரண்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, 1982 ஆம் ஆண்டிலேயே அறிக்கையாக வெளியிட்டனர். கூடங்குளத்தை ஆதரிக்கும் “நிபுணர்கள்” இதை மூடி மறைத்தனர். போராட்டக் குழுவின் வல்லுனர்கள் இதை வெளிக் கொணர்ந்த பிறகு ஆதரவு விஞ்ஞானி கள் தடுமாறிப் போனார்கள். உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை. “சுனாமிகள் வரலாம்; வாய்ப்பு இருக்கிறது; ஆனால் அணு உலையைப் பாதிக்காது” என்று சமாதானம் கூறுகிறார்கள்.

1982 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த ‘வண்டல் குவியல்’ 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘சுனாமி’க்குப் பிறகு எத்தகைய மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளப்படவில்லை. ‘சுனாமி’க்குப் பிறகு அவை மேலும் உறுதியற்றவைகளாகி மிகப் பெரும் நிலச் சரிவுகளை உருவாக்கக்கூடிய ஆபத்துகளையும் ஒதுக்கிவிட முடியாது.

• அணுஉலை அமைக்கும் பகுதி ஒரே சீரான கடினமான பாறைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், கூடங்குளத்தில் அப்படி இல்லை என்று அய்.அய்.டி. பேராசிரியர் பூமிநாதன், 2004 இல் சர்வதேசப் புகழ் பெற்ற ‘கரண்ட் சயின்ஸ்’ பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை எழுதினார். கூடங்குளத்தில் 2001 இல் அணுசக்தித் துறை நடத் திய ஆய்வு ஒரே சீராகவே பாறைகள் இருப்பதாகக் கூறியதை இந்த ஆய்வு மறுத்தது.

• நிலவியல் சுற்றாய்வுத் துறை ஆய்வாளர் ஆர். ராமசாமி, இந்தப் பகுதி யில் நடத்திய ஆய்வில் பல் வேறு வகை எரிமலைப் பாறைகள் இருப்பதைக் கண்டறிந்து வெளியிட் டார்.

• திருவனந்தபுரம் பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர்கள் டாக்டர் பிஜு லாங்கினோஸ் மற்றும் முன்னாள் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் 1990களில் கூடங்குளம் பகுதியில் விரிவான ஆய்வு நடத்தி சமர்ப்பித்த ஆய்வறிக்கை அப்பகுதி நிலவியல் பற்றி அதிர்ச்சியான தகவல்களைத் தந்தது. “கூடங்குளம் பகுதியில் கடினப் பாறைகளை சுண்ணாம்புப் பாறைகள் மூடி மறைத்துள்ளன. அவற்றின் ஊடாக ‘மக்மா’ எரிமலைப் பாறைகள் பல இடங்களில் ஊடுருவியிருப்பதைக் காண முடிகிறது” என்று அந்த அறிக்கை கூறியது.

•              2010 செப்டம்பர் மாதம் 20, 26 தேதிகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் மேவாட் என்ற நகரில் உலக நிலவியல் ஆய்வாளர்கள் மாநாடு நடந்தது. அதில் திருவனந்தபுரம் நிலவியல் விஞ்ஞானி பிஜீலாங் கினோவ் என்பவர், கூடங்குளம் பற்றி சமர்ப்பித்த ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது:

“கூடங்குளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் நிலவியல் அமைப்பு, பிற தென் கிழக்கு கடலோரப் பகுதிகளின் நிலவியல் அமைப் பிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது. அணுமின் நிலைய 30 கிலோ மீட்டர் பகுதியில் நிலக் காந்தவியல் ஆய்வு நடத்தியபோது பாறைகளுக்குள் எரிமலைப் பொருள்கள் ஊடுருவி நிற்பதைக் கண்டறிய முடிந்தது. வெளியே தெரியாமல், சுண்ணாம்பு கற்களும், மணற் கற்களும் மறைத்து நிற்கின்றன” என்று கூறியுள்ளார். இந்த ஆய்வை திருவனந்தபுரம் நில இயல்பியல் ஆய்வு மய்யம், புவியியல் ஆய்வு மய்யம் ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று நடத்தியுள்ளார். தனது ஆய்வின் முடிவுகளை நிலவியல் விஞ்ஞானிகள் மித்தா ராஜாராம் மற்றும் முனைவர் எஸ்.பி.ஆனந்த் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து செழுமைப்படுத்தியுள்ளார்.

• அணுஉலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியில் வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது; அது அணுமின் நிலைய நிர்வாகக் கட்டுபாட்டில் இருக்க வேண்டும். இது அணுசக்திக் கட்டுப்பாடு அமைப்பு மக்களின் பாதுகாப்பு கருதி உருவாக்கியுள்ள அடிப்படை விதியாகும். இந்த விதிக்கு மாறாக ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனம், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வருகிறது.

• ஜெர்மன் நாட்டைச் சார்ந்த புவியியல் ஆய்வாளர் ஹெல்முட் ப்ருக்னர் 1987 ஆம ஆண்டு இறுதியில் கூடங்குளம் வந்து நடத்திய விரிவான ஆய்வு; சென்னை பல்கலை நிலவியல் துறை பேராசிரியர் டி.ஆர்ம்ஸ்பிரங் ஆல்ட்ரின் சாம் மற்றும் எஸ். இராமசாமி, 1998 இல் நடத்திய ஆய்வுகள் கூடங்குளம் அணு மின் திட்டம் அமைப்பதற் கேற்ற நிலவியல் அமைப்பு கொண்ட பகுதியல்ல; ஆபத்தானவை என்றே கூறின.

• அணு மின் திட்டம் அமையும் பகுதியில் மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்ற விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களுக்கு ஆபத்துகள் வந்தால் உயிர் தப்பிப்பதற்கான ‘பேரிடர் மேலாண்மை’ பயிற்சிகளை வழங்க வேண்டும் என்ற விதியையும் அரசு நிறைவேற்றவில்லை.

• கூடங்குளத்தை தேர்வு செய்வதில் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே கருத்து வேறுபாடு இருந்தது. இந்திய விஞ்ஞானிகளிடம் கருத்து மாறுபாடு  ஏற்பட்டு பல ஆண்டுகாலம் இவை நீடித்தது. பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள் மூன்று பேரும் தங்கள் நாட்டில் விமான விபத்தில் பலியானார்கள். அதன் பிறகே எதிர்ப்பு இல்லாமல், இந்திய விஞ்ஞானிகள் கூடங்குளம் திட்டப் பணிகளைத் தொடர்ந்தனர்.

கூடங்குளம் பகுதி அணுஉலைக்கு ஏற்ற பகுதி தானா என்ற அய்யங்களைத் தீர்க்காமல் அது தொடர் பான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு துப்பாக்கி முனையில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய மாநில அரசுகள் திணிக்கின்றன.

வெல்லப் போவது அரசு அடக்குமுறையா? மக்கள் சக்தியா? தமிழகம் மட்டுமல்ல; உலகமே, இதை கூர்ந்து கவனிக்கிறது.

தமிழக போராட்ட வரலாற்றில் கூடங்குளம் மக்கள் போராட்டம், புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகே கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றார், முதல்வர் ஜெயலலிதா. அச்சத்தைப் போக்கும் வரை, திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தமிழக முதல்வர் நியமித்த விஞ்ஞானிகள் குழு, கூடங்குளம் இடிந்தகரை பகுதி மக்களை சந்திக்கவே மறுத்தது. மக்களின் அச்சம் அப்படியே நீடிக்கிறது. இப்போது முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை அச்சுறுத்தி, 5000 போலீசையும், துணை ராணுவப் படைகளையும் குவித்து, போராட்டக் குழு தலைவர்கள் மீது தேச விரோதம் உள்ளிட்ட கொடூரமான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, கைது செய்து சிறையிலடைத்து, கூடங்குளம் அணு உலையைத் திறக்கப் போகிறது.

ஈழத்தில் தமிழர்களை ஒழிக்கத் திட்டமிட்ட இலங்கை ராணுவம், அவர்களை முல்லைத் தீவு நோக்கி நெருக்கித் தள்ளியதுபோல், இடிந்தகரை மக்களும் இப்போது துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று நாடகமாடிய ஜெயலலிதா - இப்போது மக்களை அச்சுறுத்தி கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் திணிக்கிறார்.

உலகம் முழுதும் நடக்கும் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் புதிய அத்தியாயங்களை  இடிந்தகரை மக்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த மக்களின் போராட்டம் வெல்வது உறுதி! உறுதி!

Pin It