இடிந்தகரை பொது மக்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த பல மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் தமிழக மக்களின் ஒருமித்த உரிமைப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் சென்னையில் திரண்ட மக்கள் சக்தி இதை உறுதி செய்துவிட்டது.

அணுமின் சக்திக்கு எதிராக நடக்கும் போராட்டம் கூடங்குளம், இடிந்தகரை கிராம மக்களின் போராட்டமல்ல; தமிழக மக்களின் போராட்டம் என்பதை சென்னையில் பிப்.26 ஆம் தேதி நடந்த எழுச்சி மிக்க கருத்தரங்கம், மாபெரும் பேரணி, கடலலைபோல் மக்கள் திரண்டிருந்த திறந்த வெளி மாநாடு - ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது.

நாட்டில் பணபலம், அதிகார பலத்துடன் உலா வரும் தேர்தல் அரசியல் பகாசுர கட்சிகளின் பங்களிப்பின்றி வெகு மக்கள் இயக்கங்களுடன் இணைந்து மக்கள் நடத்திய இந்த அணுஉலை எதிர்ப்பியக்க மாநாடு, உலகம் முழுதும் நடந்து வரும் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். பல்லாயிரக்கணக்கில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் பல்வேறு சுமைகளை இடர்ப்பாடுகளையும் ஏற்று மாநாட்டில் பங்கேற்றார்கள். பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்கள் இளைஞர்கள் என்பது சமூகத்துக்கு நம்பிக்கையூட்டும் செய்தியாகும். காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா கலையரங்கில் மனோ, தங்கராசு தலைமையில் நடந்த கருத்தரங்கில் அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்கார இடமின்றி நின்று கொண்டே மக்கள் கருத்துகளைக் கேட்டனர்.

வழக்கறிஞர் பானுமதி தமது உரையில், “மக்கள் வாழ்வாதாரங்களை மறுத்து, இந்தியாவை வல்லரசாக்க விரும்புகிறார்கள். இந்திய ஆட்சி யாளர்கள், தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சி யாளர்கள், அவர்கள் காங்கிரசானாலும், பா.ஜ.க. வானாலும், தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதி பத்திய நாடுகளுக்கும் இந்திய இறையாண்மையை அடகு வைத்து விட்டார்கள். அதை மீட்போம்; அந்த மீட்புப் போராட்டம், இந்தியாவிலிருந்து தமிழ்நாடு மட்டுமல்ல, அனைத்து தேசிய இனங்களின் விடுதலையில் தான் அடங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டார். 

‘பூவுலகின் நண்பர்கள் இயக்கம்’ சார்பில் பேசிய பிரபாகரன், சில அழுத்தமான கேள்விகளை எழுப்பினார். “மின்சாரப் பற்றாக்குறையை கூடங் குளத்திலிருந்து பெறப்படும் மின்சாரத்தால் மட்டுமே போக்க முடியும் என்று கூறுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். எந்த ஒரு அணுமின் நிலைய உற்பத்தியிலும், அதன் உற்பத்தித் திறன் என்று அறிவிக்கப்படுவதில் 40 சதவீத மின்சாரம் மட்டுமே பெறப்பட்டு வருகிறது.

கூடங்குளம் உற்பத்தித் திறன் 1000 மெகாவாட் என்று கூறப்பட்டாலும், தமிழகத்துக்குக் கிடைக்க  போவது 200 மெகாவாட்டுக்கும் குறைவாகவே இருக்கும்” என்றார். தற்போது, தமிழக அரசு நியமித் துள்ள விஞ்ஞானிகள் குழு சில மணி நேரங்களை மட்டும் செலவிட்டு, பார்வையிட்டு விட்டு, அணுஉலை பாதுகாப்பானது என்று கூறி விட்டது. சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சேப்பாக்கத்திலுள்ள தலைமைச் செயலகம் (காசா மகால்), தீ விபத்துக்குள்ளான போது, அது பற்றி ஆராய, தமிழக அரசு நியமித்த குழு, கட்டிடப் பகுதிகளை பார்வையிட்டுவிட்டு, இக்கட்டிட அமைப்பு முறையிலுள்ள கோளாறுகள் பற்றி ஆராய குறைந்தது ஒரு வாரகாலம் வேண்டும் என்று கூறியதை, சுந்தர்ராசன் சுட்டிக் காட்டினார்.

அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சோனியாகாந்தி, இந்திய மருத்துவத் துறையை நம்பாமல், சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார். இந்திய மருத்துவத் துறையை நம்ப இயலாது என்று சோனியாவே கருதும்போது, கூடங்குளம் விபத்து நேரிட்டால் மக்களை இந்திய விஞ்ஞானிகள் சில மணி நேரங்களிலேயே காப்பாற்றி விடுவார்கள் என்று மக்களை நம்பச் சொல்வது நியாயம்தானா? கூடங்குளத்தை சுற்றியுள்ள 10 பஞ்சாயத்துகள் தீர்மானம் போட்டு எதிர்ப்பதாலேயே ஒரு ஆட்சி, தனது திட்டத்தைக் கைவிட வேண்டுமா என்று காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் கே.எஸ். அழகிரி கேட் கிறார். இந்த பஞ்சாயத்துகள்தான் உண்மையான மக்கள் பிரதிநிதிகள். அவர்கள்தான் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்று, அவர்களின் தலைவர் ராஜீவ்காந்தி கொண்டுவந்த பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் உருவானவைகளே இந்த பஞ்சாயத்துகள் என்பதை அவருக்கு நினைவுபடுத்து கிறோம். அவர்களின் தலைவர் கொண்டுவந்த சட்டத்தையே ஏற்க மறுக்கிறார்களா? ஒரு அன்னிய நாட்டுடன் உருவாக்கிய ஒப்பந்தத்தை செயல்படுத்த, நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரையே களத்தில் இறக்கிவிடலாமா? இது குடியரசுத் தலைவர் பதவிக்குக் காட்டும் மரியாதையா? என்ற கேள்விகளை எழுப்பினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “இது மின்சாரத்துக்கு எதிரான போராட்டமல்ல; இந்திய அரசின் அணுசக்திக் கொள்கைக்கு எதிரான போராட்டம்; ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்; கம்யூனிஸ்ட்  கட்சிகள் நடத்த வேண்டிய போராட்டம்; ஆனால், அவர்கள் போராடாமல் ஒதுங்கி நிற்கிறார்கள்” என்றார். அணு உற்பத்தித் திட்டங்கள் வழியாகக் கிடைக்கும் புளுட்டேனியம் தான் அணுகுண்டு தயாரிப்புக்கு தேவைப்படுகிறது. எனவே, இவர்கள் நோக்கம் அணுகுண்டு தயாரிப்புதான் என்று கூறிய திருமாவளவன், அணுமின் உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை அமெரிக்கா பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறதே தவிர, தனது நாட்டில் ஒரு அணுமின் நிலையத்தைக்கூட அங்கே நடந்த ‘மூன்று மைல் தீவு’ விபத்துக்குப் பிறகுத் தொடங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன் பேசுகையில், “தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகும் வாழ்வுரிமையை மீட்டுத் தராத ‘பேரிடர் மேலாண்மை’ மய்யம் - கூடங்குளத்தால் பாதிப்பு ஏற்படும்போது, உடனே மக்களைக் காப்பாற்றி விடுமா என்ற கேள்வியை எழுப்பினார். நெய்வேலி மின் திட்டத்துக்காக தங்கள் வாழ்விடங்களை விட்டுத் தந்த ஏழை எளிய மக்களுக்கு உரிய நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. தமிழக மக்களின் உழைப்பில் உருவாகும் மின்சாரம் தமிழர்களுக்கும் கிடைப்பதில்லை. ஏனைய மாநிலங்களுக்கு டெல்லிக்காரன் பங்கு வைக்கிறான். தமிழர்களின் தேசிய உரிமைகளை எவன் எவனிடமோ பறிகொடுதது விட்டு நிற்கிறோம். தமிழர்கள் உரிமைகளைப் பேசினாலே, கொளத்தூர் மணி, பழ. நெடுமாறன், சீமான்களை எல்லாம் தேச விரோதிகள் என்று கூறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள். எங்கள் இனத்தின் உரிமைகளைப் பேசினால் இந்த நாட்டில் தேச விரோதி என்றால், இந்த இந்திய தேசத்தை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

“இந்தியாவின் வளங்களான கனிமப் பொருள்களை வெளிநாட்டு நிறுவனங்கள் சுரண்டு வதற்கு ஒப்பந்தம் போடுகிறார்கள். அலைக்கற்றை ஊழலில் கோடி கோடியாக கொள்ளை அடிப்பவர்கள் தேசபக்தர்களாம்! மக்களை அழிக்கும் கூடங்குளம் வேண்டாம் என்று கூறுகிற நாங்கள் தேச விரோதிகள் என்றால், நாங்கள் தேச விரோதிகளாகவே இருக்க விரும்புகிறோம்” என்றார், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ். இந்தியாவில் சுரண்டிய பணம் ரூ.25 லட்சம் கோடியை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்திருப்பவன் “தேச பக்தன்”, நாங்கள் தேச விரோதியா? அந்த ‘தேச பக்தர்’களின் பட்டியலை, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் வெளியிடத் தயங்குகிறார்? இந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றுவரும் உதயகுமார் மீதும் புஷ்பராயன் மீதும் தேச விரோத குற்றச் சாட்டின் கீழ் பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் கைது செய்வார்கள். கல்பாக்கத்தில் அணுஉலைக் கதிர் வீச்சால் ஏற்படும் ஆபத்துகளை மக்களிடம் விளக்கி வரும் மருத்துவர் புகழேந்தியை ‘என் கவுண்டர்’ செய்து சுட்டுத் தள்ளுவோம் என்று போலீசார் நேரில் மிரட்டியுள்ளார்கள் என்பதையும், இந்த கூட்டத்தில் நான் அறிவிக்க வேண்டும்.

கூடங்குளம் மக்களுக்குச் சொல்கிறோம், உங்களுடன் நாங்கள் நிற்கிறோம். நீங்கள் மட்டும் தனித்துப் போராடவில்லை; நாங்களும் உங்களுக்காகப் போராடுகிறோம். அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்குவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. அந்தக் கடமையைத் தான் நாங்கள் செய்து வருகிறோம். அணுமின் திட்டங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அறிவியல் அடிப்படையில் மக்களிடம் பரப்பி வருகிறோம். “இது அரசியலமைப்பு வழங்கியுள்ள அனுமதி. இதைத் தடுக்க நினைப்பவர்களே தேசத்தின் விரோதிகள்” என்றார், வழக்கறிஞர் சுரேஷ்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “மின்சாரம் கண்டுபிடித்தது அணுஉலை தயாரிப்புக்கு மட்டுமல்ல; அது மனித குலத்தின் வளர்ச்சிக்காக; அழிவுக்கு அல்ல. அணுஉலையை எதிர்ப்பதே தேச விரோதமா? தேசப் பற்றை அணுஉலைக்குள் கொண்டு போய் வைத்து விட்டார்கள். அப்படியானால், தேசப் பற்றை வளர்க்கக்கூடிய அணுஉலைகளை நாடாளு மன்றத்தைச் சுற்றிலும் கேரளாவிலும் அமைத்து தேசபக்தியை வளர்க்கலாமே- தமிழர்களாகிய நாங்கள் தமிழனாகப் பிறந்து விட்டதால், அடிமை தேசிய இனங்களாகிக் கிடக்கிறோம். ஈழத்திலே எனது சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்டபோது நாம் வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது, தடுக்க முடியவில்லை. இன்று நமது தலையிலே அணுஉலையைத் திணிக்கிறான். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கேரளத்திலே ஒரு அணுஉலையைக்கூட அனுமதிக்க மாட்டோம் என்று மலையாளிகள் மறுக்கிறார்கள். அங்கே அணுஉலையைக் கொண்டு போகும் தெம்பு, திராணி, மன்மோகன் சிங்குக்கு உண்டா? மேற்கு வங்கத்தில் மம்தா எதிர்க்கிறார். எனவே அங்கு அணு உலை இல்லை. என்னடா, தமிழன் மட்டும் இளிச்சவாயனா? வெளி நாட்டுப் பயணம் வருகிறது என்கிறான். உதயகுமார் அவர்களே, அப்படி வெளிநாட்டுப் பணம் வந்தால், வாங்கிக் கொள்ளுங்கள். போராட்டத்தை தீவிரப் படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவை வெளிநாட்டு கம்பெனிகளிடம் விலை பேசிக் கொண்டு அதில் பங்கு வாங்கிக் கொண்டிருப் பவர்கள், இப்படி எங்கள் மீது குற்றம்சாட்ட எந்த உரிமையும் கிடையாது. இந்த அணுஉலைகளை இழுத்து மூடும் வரை போராட்டம் ஓயாது” என்று எச்சரித்தார்.

கருத்தரங்கிற்கு தலைமையேற்ற மனோ. தங்கராஜ் பேசுகையில், “இது ஒரு வெற்றி மாநாடு. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மக்களே ஒன்று திரண்டு, மக்களே அழைப்பு விடுத்து நடத்தும் மாநாடு. இந்த மாநாடு, அணுமின் சக்திக்கு எதிர்ப்பான அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்துள்ளது. அதன் வலிமையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த மக்கள் சக்தி வெற்றி வெற்றிப் பெறும். மக்களுக்கு எதிரான அணுமின் உலைகளை இழுத்து மூடும்வரை போராடுவோம்” என்றார்.

2.30 மணியளவில் கருத்தரங்கு முடிவுற்றது. பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்தரங்கில் உரையாற்றினர். தொடக்கத்தில் சமர்பா குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரணி

மாலை 4.30 மணியளவில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிலிருந்து தோழர் சுந்தரி தலைமையில் பேரணி தொடங்கியது. காஞ்சி மக்கள் மன்றம், நாகர்கோயில் முரசு கலைக் குழுவினர் பறை முழக்கத்தோடு அணுசக்தி எதிர்ப்பு இயக்கக் கொடிகள் மற்றும் கருத்துகளை விளக்கும் பதாகைகளுடன்

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் ஒலி முழக்கங்களுடன் பேரணியில் பங்கேற்றனர். சிறு குழந்தைகளும் பெண்களும் பேரணியில் பங்கேற்று முழக்கமிட்டு வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. பேரணியை கோ. திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்) தொடங்கி வைத்தார்.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பேரணியை வாழ்த்தி உரையாற்ற, பேரணி தொடங்கியது. மாநாட்டை ஒழுங்குபடுத்தும் தொண்டர்படையினர், எதிர்ப்பு முழக்கங்கள் அச்சிடப்பட்ட ‘டி’ சட்டைகளை அணிந்து, பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர். மிக நீண்ட பேரணி 6 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் நிறைவடைந்தது.

திறந்தவெளி மாநாடு

மாலை 7 மணியளவில் தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில் முரசு கலைக் குழுவினரின் பறை இசையைத் தொடர்ந்து, ‘அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின்’ திறந்தவெளி மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், பெரியார் திராவிடர் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாநாட்டில் செல்வி (மக்கள் ஜனநாயகக் குடியரசு கட்சி), பூ. சந்திரபோசு (தியாகி இம்மானுவேல் பேரவை), அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்), நிலவன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), தெகலான் பாகவி (எஸ்.டி.பி.அய்.), வடிவேல் இராவணன் (பா.ம.க.), இரஜினி காந்த் (சாதி ஒழிப்பு முன்னணி), மீ.த. பாண்டியன் (இ.ச.க. (மா.லெ) மக்கள் விடுதலை), சி. வெங்கட் ராமன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி), ஆண்டன்கோமங் (அணுஉலை எதிர்ப்புக் கூட்டமைப்பு), தியாகு (தமிழ்த்தேச விடுதலை இயக்கம்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), பழ. நெடுமாறன் (உலகத் தமிழர் பேரமைப்பு), நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க.), சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் உரையாற்றினர்.

‘நாங்கள் தமிழ்ப் புலிகள்’

சுப. உதயகுமார், எழுச்சியான தொடக்க உரை நிகழ்த்தினார். தமிழ்நாட்டில் அணுமின் உலைகள் இழுத்து மூடப்படும் வரை போராட்டம் ஓயாது என்று உறுதியுடன் அறிவித்தார். வெளிநாட்டுப் பணம் வருவதாக தம்மீது குற்றம்சாட்டிய பிரதமர் மன்மோகன்சிங் மீதும் மத்திய அமைச்சர் நாராயணசாமி மீதும் அவதூறு பேசிய காங்கிரஸ் பிரமுகர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் மீதும் வழக்கு தொடரப்படும். ‘நாங்கள் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. எங்கள் மடியில் சுமையில்லை; எனவே வழியில் பயமில்லை’ என்று பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார். ‘கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் போராட்டமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டம் என்று இந்த மாநாடு காட்டியுள்ளது. இது ஏதோ அணுஉலைக்கு எதிராக மட்டுமல்ல, தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டம். நாங்கள் தமிழ்ப் புலிகள்; எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்’ என்று அறிவித்தார். ‘சேவ்ஸ்’ தமிழ் அமைப்பைச் சார்ந்த செந்தில் நன்றி கூற, இரவு 11.30 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது. முத்துரங்கம் சாலை முழுதும் மக்கள் கடலாகவே காட்சியளித்தது. மாநாடு நிறைவடையும் வரை அனைத்து இருக்கை களும் நிரம்பி வழிந்தன. கடந்த சில ஆண்டுகளில் தலைநகரில் நடந்த மாநாடுகளில் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடங்களில் மக்கள் குவித்த நிதி ரூ.42,000

மாநாட்டில் மாநாட்டுச் செலவுக்கு நிதி கேட்டு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், பெண்கள், தொண்டர் அணி தோழர்கள் குடங்களை ஏந்தி நிதி கேட்டனர். மக்கள் அளித்த நன்கொடை ரூ.42,000/-.

“வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்தி அணு உலைக்கு எதிர்ப்பைத் தூண்டி வருவதாக பிரதமரும், காங்கிரசாரும் செய்து வரும் பொய்யுரைகளுக்கு மக்கள் தந்த பதிலடியே இந்த நிதி” - என்று மாநாட்டுத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில் பலத்த கரவொலிக்கிடையே குறிப்பிட்டார்.

- நமது செய்தியாளர்

Pin It