2001 ஆம் ஆண்டு “பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்தோடு நாம் பயணத்தைத் தொடங்கினோம். தோழர்களின் உழைப்பாலும், தொண்டினாலும் கட்டி எழுப்பிய நம் இயக்கத்தின் செயல்பாடுகள், இயக்கத்திற்கு வெளியே கொள்கை ஆதரவாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. வெற்று மேடைப் பேச்சுக்களன்றி, நாம் மேற்கொண்ட செயல்பாடுகளாலேயே நம் கழகத்தின்மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டது என்பதே உண்மை. பெரியார் நமக்கு விட்டுச்சென்ற சமுதாய இழிவுஒழிப்பு, ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் கழகத்துக்கு உள்ளேயே நாம் கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டியிருந்ததை இங்கே திரண்டிருக்கும் நாம் அனைவரும் அறிவோம்.

பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கமானாலும், திராவிடர் கழகமானாலும், அந்த இயக்கங்கள் கொள்கை சார்ந்தவைகளாகவும், கொள்கையை மக்களிடம் கொண்டு போவதற்கே என்ற பார்வையுடனும் அதற்கேற்ற நெகிழ்ச்சித்தன்மையுடனும், இயக்கத்தை தலைவர் பெரியார் கட்டியமைத்தார். சுயமரியாதை இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் என்று அவர் எழுதினார். அமைப்புகள், அதிகாரங்களின் மய்யங்களாக்கப்பட்டு, அதன் வழியாக தனிமனித முனைப்புகள் மேலோங்கும்போது, கொள்கைச் செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்படும் இடர்ப்பாடுகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் சந்திக்க வேண்டியிருந்தது.

அதனால் கொள்கைச் செயல்பாடுகளின் வேகம் குறைந்து, ஒரு கட்டத்தில் தேங்கிப்போனது, மேலும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். இந்தத் தடைகளை அகற்ற நாம் மேற்கொண்ட பல முயற்சிகள் பயன்தராத நிலையில் மீண்டும் பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்கி அவர் விட்டுச் சென்ற கொள்கைகளை மேலும் தெளிவோடும், புரிதலோடும், வேகத்தோடும் கொண்டு செல்ல வேண்டிய கடமையை ஆற்றுவதற்கும், அதில் தங்களை இணைத்துக்கொள்ளுவதற்கும் முன்வந்துள்ள தோழர்களாக நாம் திரண்டிருக்கிறோம். பெரியார் காலத்திலும் பல்வேறு கால கட்டங்களில் இத்தகைய கொள்கை மாறுபாடுகள் – முரண்பாடு களை பெரியார் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் அவர் மேற்கொண்ட அணுகு முறைகளை நாம் பாடமாகக் கொண்டு கொள்கைக்காகவே அமைப்பாகியிருந்த நாம், அமைப்பின் பெயருக்காகப் போராடிக்கொண்டிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். நமது தோழர்களின் கருத்தும் உணர்வும் இதே போன்று இருந்தது நமக்கு மேலும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்தது.

இப்போது நாம் உருவாக்கிடும் இந்த அமைப்பு பெரியார் இலட்சியப் பயணத்தில் மேலும் ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே தவிர பிளவோ, பின்னடைவோ அல்ல என்ற சரியான புரிதலோடு, மீண்டும் பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்கி பெரியார் விட்டுச்சென்ற சமுதாய இழிவு ஒழிப்பு, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலை, தமிழருக்கான விடுதலை என்ற செயல்திட்டங்கள், கருத்தாக்கங்களோடு பயணத்தைத் தொடர உறுதியேற்போம்.

நாள்: 12.08.2012                                      கொளத்தூர் தா.செ.மணி - விடுதலை க. இராசேந்திரன்

இடம்: ஈரோடு

Pin It