தோழர்களே!

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படு வதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்பட வேண்டியதே யொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதில்லை. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்.

அநேக காரியங்கள் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ் நிலைமைக்கும் ஆளாகி வருகின் றோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைதல் என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும்.

சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி, அடிமை சாதி என்பவர்கள் இருப்பதோடு ஆண், பெண் தன்மை களில் உயர்வும் தாழ்வும் இருந்து வருகின்றது. இவை தவிர ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி தன்மைகளும் இருந்து வருகின்றன.

இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டவை யாகவும், இவ்வளவுக்குக் காரணம் மனிதன் அல்ல வென்றும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல்நிலையில் உள்ளவனும், கீழ் நிலையில் உள்ளவனும் நம்பிக் கொண்டிருக்கிறான். மூடநம்பிக்கைகள்தாம் வெகுகாலமாக மனித சமூகத்தில் எந்தவித மாறு தலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகின்றன. சாதி வித்தியாசங்களுக்கும் சாதிக் கொடுமைகளுக்கும் கடவுள்தான் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால்தான் பரிகாரம் செய்ய முடியும்?

எந்த மனிதனும் மற்ற சாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும், தன் சாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற் பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா சாதியாரிடமும் இருந்து வருகின்றது. சாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான்; சாதிக் கலப்பை விபச்சாரித்தனமாக எண்ணுகிறான்! இந்த மனப்பான்மை சாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.

அ°திவாரத்தில் கையை வைத்துச் சாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

திருவள்ளுவர், கபிலர், இராமானுஜர் முதலிய புராணக்காரர்களும், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்பந்தமான சில புதிய முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலகமொப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள சாதி பேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும்படியாகவோ செய்த காரியங்கள் அல்ல. ஆதலால், சாதியை அடியோடு ஒழிக்க எவரும் முயற்சித்ததில்லை. மற்ற பல சாதி மக்களின் முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்த் தாலோ, அவைகளும் தாங்கள் எப்படியாவது மேல் சாதிக்காரர்கள் என்று மதிக்கப்பட வேண் டும் என்கிற முயற்சிகளாகவே இருக்கின்றன.

சாதியில்லாதவர்களும் கலப்பு சாதிக் காரர்களும் தாங்கள் ஒரு கலப்பற்ற சாதியைச் சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வெட்கப்படுகிறார்களேயொழிய, தங்களைப் பொறுத்த வரை சாதியொழிந்ததே என்று யாரும் திருப்தியடைவதில்லை. இந்தத் தொல்லைகள் அடியோடு ஒழிய வேண்டு மானால் சுயமரியாதை இயக்கத்தில்தான் இட மிருக்கிறது; சுயமரியாதை இயக்கத்தால்தான் முடியும்.  மற்றபடி எப்படிப்பட்ட சீர்திருத்தவாதி யானாலும் காரியத்திற்கு உதவ மாட்டான்.

- பெரியார்
(பட்டுக்கோட்டை உரை, ‘குடிஅரசு’ 5.4.1936)

Pin It