செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 134வது பிறந்தநாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பெரியார் உருவம் பொறித்த சுவரொட்டி அனைத்து பகுதிகளிலும் கழகத் தோழர்களால் ஒட்டப்பட்டது. அதில் பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட திங்களூர் ஆவராங்காடு பேருந்து நிறுத்தத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. செப்.17 இரவு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியைச் சார்ந்த கந்தசாமி என்பவர், கிழித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அர்ச்சுனன் மற்றும் துரையன், “ஏன் கிழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்” என்று கேட்டனர். அதற்கு அவர், “இது எங்கள் சாதிப் பகுதி. நீங்கள் இங்கு வந்து சுவரொட்டி ஒட்டுவதோ, கம்பம் போடுவதோ கூடாது” என்று கூறினார். மேலும், திராவிடர் விடுதலைத் கழகத் தோழர்களிடம் சாதியைச் சொல்லி திட்டியும் உள்ளார்.

அதேபோல் அங்கு வந்த மணிகண்டன், “நீங்கள் எதை செய்தாலும் அதை உங்கள் பகுதியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு வந்து பேசக் கூடாது” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, கழகத் தோழர்கள் திங்களூர் காவல்நிலையம் சென்று, புகார் கூறினர். தோழர்களின் பல கட்ட நெருக்குதலுக்குப் பின் காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சாதிவெறியுடன் பேசிய இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்குப் பதிவு செய்ய மாநில பொருளாளர் ரத்தினசாமி, மண்டல செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் நிவாசு, பெருந்துறை ஒன்றிய அமைப்பாளர் துரையன், மாவட்ட அமைப்பாளர் அர்ச்சுனன், ஆனந்தராஜ், கோபி ஒன்றிய அமைப்பாளர் விசயசங்கர் மற்றும் அப்பகுதித் தோழர்கள் முன்னின்று பணி செய்யப்பட்டனர்.

Pin It