சேலம் மாவட்டம் காடையாம் பட்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் சத்துணவுக் கூடங் களில் சமையல் பணியில் ஈடுபடும் தலித் பெண்கள், சாதி வெறியர் களால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். பார்ப்பனி யத்தில் ஊறிப் போன சாதி இந்துக் கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளை சத்துணவுக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து பகிரங்கமாக தீண்டாமையை வெளிப்படுத்துகின்றனர்.

“இந்தப் பெண்கள் சமைத்த உணவை சாப்பிடுவது பாவம்” என்று, அவர்கள் கூறுவதாக ‘இந்து’ நாளேடு (செப்டம்பர் 4) செய்தி வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1300-லிருந்து 3000 வரை குறைந்த ஊதியத்தில்தான் இந்தப் பெண்கள்  பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுந்தர வனிதா என்ற தலித் பெண், 2012 ஆகஸ்டு 16 ஆம் தேதி பணிக்கு நியமிக்கப்பட்டார். பணி நியமன நாளிலிருந்தே, அவர் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்.  “நான் அவமானத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளரிடம் கண்ணீர் மல்க அவர் கூறினார்.

முதல் நாளிலிருந்தே என்னை கேவலமாகப் பேசுவதும், துன்புறுத்துவதும் தொடங்கிவிட்டது. ராசிபுரத்தான் காட்டு வலவு எனும் கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் நான் பணி நியமனம் செய்யப்பட்டேன். வன்னியர் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிடுவதை அவமானமாகக் கருதுகிறார்கள். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், ‘இதில் தான் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார். அதைத் தொடர்ந்து  இந்தப் பெண் அவரது சொந்த கிராமமான மூக்கனூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். சொந்த கிராமம் என்பதால், இவரது சாதி அடையாளம் தெரியும் என்பதால் அங்கே மேலும் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளானார். இவரைப் போல் சத்துணவு சமையல் கூடங்களுக்கு நியமிக்கப்பட்ட தலித் பெண்கள் அனைவரும் இதே போன்ற புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ‘இந்து’ நாளேட்டின் செய்தி கூறுகிறது. தீண்டாமையை வெளிப்படையாகப் பின்பற்றும் சாதி ஆதிக்கவாதியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஆட்சியோ நிர்வாகமோ அதற்குத் தயாராக இல்லை. தமிழக கிராமங்களில் பார்ப்பன ‘மனுதர்மமே’ ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. சட்டங்களுக்கு சாதி வெறியர்கள் சவால்விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான 11.09.12 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சத்துணவுத் திட்டத்தைக்குலைக்கும் சாதிவெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யக்கோரி திராவிடர் விடுதலைக் கழகம் முதற்கட்டமாக தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஒத்த கருத்துள்ள தோழமை அமைப்புகள் அனைவரையும் இதில் பங்கேற்க வைக்குமாறு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி 05.09.12 அன்று சேலத்தில் அறிவித்தார்.

தென்மாவட்டங்களின் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் திருப்பூர் மாவட்டத் தலைவர் துரைசாமி தலைமையில் மாநில பரப்புரைத் தலைவர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், மாநில அமைப்புச் செயலாளர் தி.தாமரைக்கண்ணன், மதுரை மண்டல அமைப்புச் செயலாளர் இராவணன், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன், திருச்சி மண்டல அமைப்புச்செயலாளர் புதியவன் ஆகியோர் உட்பட பல மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவிடம் சென்று அங்கு ஜாதிஒழிப்பு உறுதியேற்க உள்ளனர் என்றும் தோழர் கொளத்தூர் மணி அறிவித்தார்.

Pin It