சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 இல் தொடங்குகிறது என்று கூறும் அந்த விளம்பரம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்து’ நாளேடும் இந்த விளம்பரத்தை அப்படியே வெளியிட்டுள்ளது. சூத்திரர்களோ, பஞ்சமர்களோ, இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பணம் கொடுத்து வாங்க முன் வந்தாலும் அவர்களுக்கு “ஆத்துகள்” (வீடுகள்) வழங்கப்படமாட்டாது என்று இந்த விளம்பரம் கூறுகிறது.

சென்னையைச் சேர்ந்த இனியன் இளங்கோ என்ற வாசகர் இது குறித்து எழுதியுள்ள ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை ‘இந்து’ நாளேடு  ஜூன் 22 இதழில் வெளியிட்டுள்ளது. (அதாவது இந்த விளம்பரம் வெளிவந்த சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு)

“சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசியல் சட்டப் பிரிவின் 15 மற்றும் 17வது பிரிவுகளுக்கு இந்த விளம்பரம் எதிரானது. இப்படி பாகுபாடு காட்டப்படும் வர்த்தகமும், விளம்பரமும் தண்டனைக்குட்பட்டவை” என்று அக்கடிதத்தில் இனியன் இளங்கோ சுட்டிக்காட்டியிருந்தார். அந்தக் கடிதத்தை வெளியிட்டுவிட்டு, அதன் கீழே ‘ஆசிரியர் பதில்’ என்ற குறிப்பையும் ‘இந்து’ ஏடு வெளியிட்டுள்ளது.

“பாகுபாடு மற்றும் ஒதுக்குதல் என்ற கொள்கைகளுக்கு ‘இந்து’ ஏடு எதிரானது என்றும், சில நேரங்களில் இத்தகைய வருந்தக்கூடிய சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன என்றும், வந்த விளம்பரம் வெளிவந்தது எதிர்பாராமல் நடந்துவிட்ட ஒன்று” என்றும் சமாதானம் கூறியுள்ளது.

வாசகர் இனியன் இளங்கோ கடிதத்தை ‘இந்து’ வெளியிட மறுத்து, பிறகு, பத்திரிகை கண்காணிப்புக் குழுவுக்கு இது குறித்து அவர் புகார் செய்யவே, அதனடிப்படையில் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கட்ஜ், ‘இந்து’விடம் விளக்கம் கேட்டுள்ளார். அதன் பிறகே ‘இந்து’ 3 மாதம் கழித்து இந்தக் கடிதத்தையும் விளக்கத்தையும்  வெளியிட்டுள்ளதாக அறிகிறோம்.

அடுக்குமாடி குடியிருப்புகளைக்கூட அவாள் ‘ஆத்துக்களாக்கி’ அக்கிரகாரமாக்கிடவே பார்ப்பனர்கள் இப்போதும் கருதுகிறார்கள். மனுதர்மம் கூறும் நான்கு வர்ணங்களை பார்ப்பான் கைவிடத் தயாராக இல்லை என்பதால்தான் இப்போதும் “பிராமணன்” என்ற வர்ண அடையாளத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ‘சூத்திர’ வர்ணம் சாதிகளாக கூறுபட்டு அவர்கள் சாதி அடையாளத்தை ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி என்று சாதிகளால் கூறுபட்டாலும், “பிராமணன்” என்ற வர்ண அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதற்கான ‘காயத்ரி’ ஓதி பூணூல் போடுவதை கைவிடவும் பார்ப்பனர்கள் தயாராக இல்லை. இதைத்தான் “பிராமணர்களுக்கு மட்டும்” என்ற அறிவிப்பு பறைசாற்றுகிறது. ‘மனுநீதியே எங்கள் நீதி’ என்பது தானே இந்த அறிவிப்பின் நோக்கம்?

Pin It