திருச்சி காவிரியாற்றில் ‘வேத பார்ப்பனர்கள்’ 25 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, தண்ணீரில் அமர்ந்துகொண்டு யாகம் நடத்தியிருக்கிறார்கள்.

கருநாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்கு இந்த யாகமாம்.

கருநாடக அணையில் நீர் வழிந்தால், வேறு வழியின்றி தமிழகத்துக்கு திருப்பி விடப்படுமல்லவா? ‘பாரதிய கிசான் சங்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த யாகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.வி.இராமலிங்கம், சிவபதி ஆகியோரும் கலந்து கொண்டார்களாம். தமிழகத்துக்கு நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்கப்பட வேண்டிய நீரை, முறையாக வழங்க கருநாடக அரசு மறுத்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், அப்போதுதான் தீர்ப்பு சட்டப்படியான ஆவணமாகும் என்று தமிழக அரசும் தமிழக மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது.

அரசியல் ரீதியாகப் போராடுவதைவிட யாகங்களுக்குத்தான் வலிமை அதிகம் என்ற வேதகால பார்ப்பனியத்தை இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வேதப் பார்ப்பனர்கள் ஓதும் வேதங்களுக்கு அவ்வளவு சக்தி உண்டு என்று நம்பும் ‘மனுதர்ம’ சிந்தனைதான் இதற்குக் காரணம்.

“அந்தந்த தேவர்களுக்கு ஹோமம் செய்யும்போது, அந்தந்தத் தேவர்களை தியானம் செய்ய வேண்டியது. கிழக்கு திசையில் இந்திரனுக்கும், தெற்கு திசையில் எமனுக்கும், மேற்கு திசையில் வருணனுக்கும், வடக்கு திசையில் சோமனுக்கும் வரிசையாய் பூமியில் பலி வைக்க வேண்டும்” என்று மனுதர்மம் 3வது அத்தியாயம்; 87வது சுலோகம் கூறுகிறது.

அரசியல் சட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்று பதவிக்கு வந்த அமைச்சர்கள், கைகட்டி நிற்கிறார்கள். ஆனால், வேதப் பார்ப்பனர்களோ வருண பகவான் தங்களின் வேத கூச்சலுக்கு மட்டுமே செவிமடுத்து செயல்படுவான் என்று யாகம் நடத்தும் இழிநிலைதான் நாட்டில் இப்போதும் உள்ளது.

Pin It