நீதிபதி கே. சந்துரு வழங்கிய மற்றொரு பெருமைக்குரிய தீர்ப்பு

கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஒரு மூலையில் பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் மற்றும் அரசு அனுமதி ஆணையோடு நிறுவப் பட்டுள்ள பெரியார் சிலையை எதிர்த்து உள்ளூர் பா.ஜ.க.வினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரியார் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங் கினர். இதற்கிடையே பா.ஜ.க.வினர், நேரடியாக பெரியார் சிலையை எதிர்த்து வழக்காட முன் வராமல், பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் மூலமாக வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு மனுவை தள்ளுபடி செய்துள்ள தோடு, பெரியார் சமுதாய மாற்றத்துக்கு பங்களிப்பை வழங்கிய மகத்தான தலைவர் என்று தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

பெரியார் சிலையை பள்ளி வளாகத்தின் அருகே நிறுவுவதால் மாணவர்கள் நாத்திக சிந்தனைக்கு மாறிவிடுவார்கள் என்று மனுதாரர் கூறியிருந்ததுபற்றி நீதிபதி குறிப்பிடுகையில், ஒரு மகத்தான தலைவரின் சிலையை நிறுவிவிட்டாலே மாணவர்கள் எல்லோரும் தன்னிச்சையாகவே நாத்திகர்களாகி விடுவார்களா? என்று வியப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் பெரியாரின் சிலைகள் நிறுவப்பட வேண்டியதின் அவசியத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

“பள்ளி மாணவர்கள் பெரியாரின் வாழ்க்கையை யும் இலட்சியத்தையும் கட்டாயம் அறிய வேண்டியது அவசியமாகும். இத்தகைய மாபெரும் தலைவர்களின் தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமையாக கூறப் பட்டுள்ள பிரிவு 51ஏ(எச்) இல் வலியுறுத்தும், விஞ்ஞான மனப்பான்மையை மேம்படுத்துதல், மனித நேயம், எதையும் ஏன் எதற்கு என்று விசாரணைக்குட் படுத்துதல், சீர்திருத்தம்  ஆகியவற்றை செம்மையாக பின்பற்றுவதற்கு உதவும்” - என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முறையான ஒப்புதலுக்குப் பிறகுதான் பெரியார் சிலை நிறுவப்பட் டுள்ளது. உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஆர்.எஸ்.எஸ். நிறு வனரான கேசவ் பாலிராம் ஹெட் கேவர் சிலையை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். எனவே, இந்த “மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஒரு அரசியல் கட்சியால் தூண்டி விடப்பட்டுள்ளார். அந்த அரசியல் கட்சி வெளிப் படையாக இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்து எதிர்ப்பை சான்றாதாரமாக பதிவு செய்ய விரும்ப வில்லை. அதற்கு பதிலாக இத்தகைய மனுதாரர் களுக்கு அழுத்தம் தந்து, சட்டத்தின் முன் நிற்க முடியாத காரணங்களைக் கூறி, வழக்கு தொடரச் செய்திருக்கிறார்கள். இந்த மனுவை இந்த நீதிமன்றத்தால் ஏற்க முடியாது” என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்.

“பெரியார் மக்களிடம் எடுத்துரைத்த கருத்துகள் பற்றி, மனுதாரர், மனுவில் கூறியிருப்பது அவரது அறியாமையையே வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தை சீர்திருத்தி மாற்றியமைப்பதில் பெரியாரின் பங்களிப்பது எத்தகையது என்பது குறித்த புரிதல் மனுதாரருக்கு இல்லை. பெரியாரை ஏதோ ‘நாத்திக  பரப்புரையாளர்’ என்று மட்டுமே முத்திரை குத்திட முடியாது. சாதிய ஒடுக்குமுறை, சமூக சமத்துவம், பெண்கள் விடுதலை போன்றவற்றில் பெரியார் முன் வைத்த சிந்தனைகள், சமகால இந்தியத் தலைவர்களின் கருத்துகளையும் மிஞ்சி நிற்கக்கூடியவை. பூலே, அம்பேத்கரைப்போல, அயோத்திதாசர், பெரியார் போன்ற மாமனிதர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத ஆழமான உண்மைகளைக் கண்டறிந்தவர் கள், உண்மையான கவலை கொண்டவர்கள். தங்கள் சுயசிந்தனைகளால் தங்கள் உடைமைகளை துறந்து சமுதாயத்துக்காக ஒப்படைத்துக் கொண்டவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூகம் அறியாமைச் சூழலில் மூழ்கிப் போய் அநீதிகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகிக் கிடந்ததைக் கண்டு, ஆழ்ந்த கவலை கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைத்தவர்கள் இந்த துயரங்களும் அநீதிகளுமே அவர்களை மிகக் கடுமையாக சிந்திக்க வைத்தது. எதைச் செய்தாவது மாற்றியாக வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வரத் தூண்டியது.

இதேபோல் உலகம் முழுதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி விடுதலை பெற்றார்கள் என்று சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், செயல்படவும் முன் வந்தார்கள்.  ஒடுக்கப் பட்ட மக்களை போராடுவதற்கு அணி திரட்டி னார்கள். அதன் வழியாக அவர்களுக்கு இழைக்கப் படும் அவமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் அடையாளம் காண முடிந்தது. சாதிய சமூக அமைப் பின் அநீதிகளையும் அந்த அமைப்பு நீடிக்கும் வரை சந்திக்க வேண்டிய சவால்களையும் சமூகத்துக்கு உணர்த்தியவர்கள். இப்படி இந்து சமூக அமைப்பின் ஆணிவேர் வரைச் சென்று அசைத்துக் காட்டிய தலைவர்கள் அவர்கள். இதில் மக்களைக் கவர்ந்து இழுத்த பெரியாரின் பேச்சுகள், முதன்மையான பங் காற்றியது” என்று நீதிபதி சந்துரு குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு (இதில் நீதிபதி கே.சந்துருவும் உண்டு) அளித்த தீர்ப்பில், பெரியார் பற்றி சுட்டிக்காட்டிய பகுதிகளை நீதிபதி இத் தீர்ப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்.

“வாழ்நாள் முழுதும் பெரியார் ஈ.வெ.இராமசாமி தீண்டாமையை அகற்றவும், சாதி அமைப்பை ஒழித்துக் கட்டவும் பாடுபட்டார். சமூக நீதிப் போராளியாக நின்று, பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துகளுக்கும் சமூக புரட்சிக்கும் நாடு முழுதும் இயக்கம் நடத்தினார். ஒரு பகுத்தறிவாளர் என்ற முறையில் மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்தெடுத்தார். மூடநம்பிக்கைகளை கைவிடுமாறு வற்புறுத்தினார். அது வீணானது; ஆபத்தானது என்றார். 1926 இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்” என்று  வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூலிலிருந்து  பெரியார் திரைப்பட வழக்கில் நீதிமன்றம் சுட்டிக் காட்டியதை நீதிபதி சந்துரு பதிவு செய்துள்ளார்.

2010 இல் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பையும் எடுத்துக் காட்டியுள்ளார். அனுமதி இல்லாமலே பொது இடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப் பட்டது என்று தொடரப்பட்ட வழக்கில் அம்பேத் கரின் உயர்ந்த நிலையைக் கருதிப் பார்க்கும்போது, அந்த சிலையை இருக்குமிடத்திலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அத் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருந்தது.

சமூகக் கண்ணோட்டத்தில் பல புரட்சிகர தீர்ப்புகளை வழங்கி வரலாறு படைத்து வருகிறார் நீதிபதி சந்துரு. இந்தத் தீர்ப்பும் அந்த வரிசையில் மற்றொரு மணி மகுடமாக திகழுகிறது.

(குறிப்பு: காவேரிப்பாக்கத்தில் திராவிடர் கழகம் நிறுவியுள்ள பெரியார் சிலையை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு இது. இதே நீதிபதி கே.சுந்துரு, ‘குடிஅரசு’ வழக்கில் அவர்களுக்கு எதிராக நியாயமான தீர்ப்பை வழங்கிய போது, “நீதிபதி உபதேசம் செய்கிறார்” என்று கடுமையாக தீர்ப்பை விமர்சித்தது, தி.க.வின் ‘விடுதலை’ ஏடு. அதே நீதிபதி தான் இப்போது பெரியாரைப் பற்றிய பெருமைகளோடு அக்கழகம் நிறுவிய பெரியார் சிலை வழக்கில் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.)

Pin It