தமிழக கருநாடக எல்லைப் பகுதியான கிருட்டிணகிரி மாவட்டத்தில் “தளி” சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இந்திய பொதுவுடமை கட்சி (C.P.I)யைச் சார்ந்த இராமச்சந்திரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர் தளி தொகுதியின் எல்லை ஓரமாக இருக்கும் கெலமங்களம் (வேப்பினப்பள்ளி தொகுதியின் எல்லையோரம்). கெலமங்களத்தை சுற்றியுள்ள பல ஊர்களிலும் இவர் சார்ந்திருக்கும் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் இயங்கக் கூடாது என்ற கருத்துள்ள அராஜகவாதியாக இருந்து வருகிறார். தி.மு.க வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் அவர்கள் இந்த பகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்தபோது இவரது ஆட்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கவும் பட்டார். தன்னை பொதுவுடமைக் கட்சியில் இணைத்துக் கொண்டிருந்தாலும், கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும், அடியாட்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு, ஆதிக்க சிந்தனை உள்ள நிலச்சுவான்தாரர்களை விட மோசமான செயலாகத்தான் அந்தப் பகுதியில் இவருடைய போக்கு இருந்து வருகிறது.

       இந்த ஊருக்கு அருகே உள்ள அலேசீபம் ஊராட்சி பாலேபுரம் கிராமத்தில் வசித்துவந்த மு.பழனி அவர்கள், மார்க்சிய பொதுவுடமை கட்சியில் பகுதி செயலாளராக பணியாற்றி, பின்னர் தமிழ்நாடு விடுதலை படை அமைப்பிற்கு ஆதரவாளராக இருந்து வந்து, பல ஆண்டுகளாக எந்த ஒரு அமைப்பிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் இருந்த அவர் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் திராவிடர் கழகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு அந்த பகுதியில் முழுநேர ப்பணியாளராக செயல்பட த் தொடங்கினார். பல புதிய இளைஞர்கள் அமைப்பை நோக்கி வேகமாக வரத்தொடங்கினர். ஓராண்டிற்கு முன்பு நீலகிரி என்ற ஊரில் புதிதாக இணைந்த தோழர்கள் கழக சீருடையான கருப்பு சட்டையை எல்லா நாட்களிலும் அணிய தொடங்கினர். இதைப் பார்த்த இராமசந்திரனின் ஆட்கள் ஒரு தோழரின் வீட்டிற்கு சென்று, வேறு எந்த கட்சியிலும் இணையக்கூடாது, இங்கு யாரும் கருப்பு சட்டையும் அணியக்கூடாது,  என்று மிரட்டி அந்த தோழரை தாக்கி அவர் அணிந்திருந்த கருப்பு சட்டையை கிழித்து தீயிட்டார். உடனே அருகில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட புதிய தோழர்கள் இராமசந்திரனின் ஆட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்ற அவர் சார்பாக தோழர் பழனியிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.

       கடந்த உள்ளாட்சி தேர்தலில், வேப்பினப்பள்ளி தொகுதி ,நாகமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு எம்.எல் ஏ வின் மாமாவின் மனைவி வனிதா திம்மராயன் போட்டியிட்டார். அதே பதவிக்கு நமது கழக தோழர் மாருதியின் தாயாரும், தோழர் கிருஷ்ணாவின் அத்தையுமான நாராயணம்மாள்  போட்டியிட்டார்கள். தி.மு.க, அ.தி.மு.க வை சார்ந்தவர்கள் கூட போட்டியிடமுடியாத இந்த பகுதியில் தோழரின் தாயார் போட்டியிட்டது அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது. போட்டியிட்டது மட்டுமின்றி, நியாயமான முறையில் தேர்தல் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, முடிந்த வரை கள்ள ஓட்டுகள் போடாமல் தடுக்கப்பட்டது. 130 வாக்குகள் வித்தியாசத்தில் தோழரின் தாயார் தோல்வியடைந்தார்  என்ற போதும் எதிர்த்து போட்டியிட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

        நீலகிரி வரதராஜ சாமி கோவில் திருவிழாவில், தோழர் மாருதியின்  சித்தப்பா அன்னையப்பாவை வம்புக்கு இழுத்து, அதை காரணமாக வைத்து வீட்டிற்கே சென்று, தேர்தலில் போட்டியிட்ட நாராயணம்மாளின் கணவரையும் அவர்களின் மூன்று மகன்களையும் எலும்பு முறியும் அளவிற்கு தாக்கியுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கும் சென்று அதுவும் எம்.எல்.ஏ இராமசந்திரனே முன்னின்றும் மீண்டும் தாக்கியுள்ளனர். மருத்துவமனையில் வாக்குமூலம் வாங்கப்பட்டு,  உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையை வாங்கி பார்க்கும் போது வாக்குமூலத்திலேயே இராமசந்திரனின் பெயர் இல்லை என்பது தெரியவந்தது. காரணம் அந்த பகுதி தோழர்களுக்கு தமிழ் படிக்க தெரியாது என்பதால் காவல்துறையினர் தமிழில் தங்களின் விருப்பத்திற்கு எழுதி கையெழுத்தை பெற்றுக்கொண்டார்கள். (அந்த பகுதி மக்கள் பெரும்பாலும் கல்வியறிவு அற்றவர்களாக அல்லது தெலுங்கு மட்டுமே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்)

        சில மாதங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கழக அமைப்பாளர் பழனி மீது தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்றுள்ளது. எம்.எல்.ஏ வின் அடியாட்களில் ஒருவரான மூர்த்தி என்பவரின் குவாலிஸ் காரில் பெரியசாமி உள்ளிட்ட அடியாட்கள் அங்கு வந்து அவரை சூழ்ந்துள்ளனர். ஆனால் பழனி அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். தொடர்ந்து தோழர்கள் மீது நீதிமன்றங்களிலும், வழிகளிலும் தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்தள்ளன.

       எம்.எல் ஏ வின் மாமனாரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவருமான இலகுமய்யா அவர்களின் மணைவியை எதிர்த்து போட்டியிட்ட  வெங்கடேஷ் என்பவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வெட்டிக்கொள்ளப்பட்டார்.

     சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரனின் இப்படிப்பட்ட அராஜக போக்குகளை எதிர்த்து, கடந்த சில ஆண்டுகளாக தங்கள் வன்முறையால் அந்த வட்டாரத்தையே மிரட்டி வந்த அந்த வன்முறையாளர்களின் செயல்பாடுகளையும், அவர்களுக்கு உடந்தையாக வழக்குகளைத் திரித்து பதிவு செய்திருக்கிற காவல்துறை கருப்பு ஆடுகளின் நடவடிக்கைகளையும் கண்டித்து 28-4-2012 அன்று கெலமங்களத்தில் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கழகத் தலைவர் தமது உரையின் இறுதியில், பாதிக்கப்பட்ட அனைத்து அமைப்பு மற்றும் கட்சிகளும் சேர்ந்து, “மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு” ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தபோது, மக்கள்கூட்டம் வரவேற்று கையொலி எழுப்பியது  உணர்ச்சிகரமாக இருந்தது.மிரட்டலுக்கு பயந்து கிடந்த மக்கள், அச்சத்தை உதறிவிட்டு, 1500-க்கும் அதிகமானோர் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக திரண்டது, அப்பகுதியில் பலராலும் வியந்து பேசப்பட்டது.

     இப்படி புதிய தோழர்கள் உருவாவதற்கும்  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் காரணமானவர் தோழர் பழனி.  இந்த எம்.எல்.ஏ இராமசந்திரன் மார்க்சிய பொதுவுடமை கட்சியின் இளைஞர் அணி (DYFI) யில் இருந்தபோது, தோழர் பழனி அவர்கள்  மார்க்சிய பொதுவுடமை கட்சியின் பகுதி செயலாளராக இருந்துள்ளார். அப்போது பழனியின் நேர்மையான - துணிச்சலான செயல்களை அறிந்து வைத்திருப்பதால், தன்னை எதிர்ப்பதற்கு பழனியின் துணிச்சல் தான் காரணம் என்று கருதி, பலமுறை இவர் மீது கொலை முயற்சிகள் நடைபெற்றது. இதை பல இடங்களில் இவர் புகாராகவும் தந்திருக்கிறார்.

      இந்த நிலையில் கடந்த  5-7-2012 அன்று காலை  சுமார் 6-00 மணியளவில் தோழர் பழனியும் அவரது மகன் வாஞ்சிநாதனும் வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர்.  இவரது தோட்டத்திற்கு டாடா சுமோ கார் மற்றும் 5  இருசக்கர வாகனங்கள் வந்து நின்றுள்ளது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அதில் சிலர் வாஞ்சிநாதனை துரத்த, சிலர் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் நிலை குலைந்து அவர்  கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்கள். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர்கள் பழனியின் தலையை தனியாக துண்டித்து, காருக்கு அருகே எடுத்துவந்து  அவ்ர்களிடம் காண்பித்துவிட்டு கீழே வீசியுள்ளனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

  தோழர் பழனி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த அவரின் மகன் வாஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில், எம்.எல்.ஏ இராமச்சந்திரன், எம்.எல்.ஏ வின் அண்ணன் வரதராசன், மாமனார் லகும்மயா உட்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

         கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும்  பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஓசூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான கழகத் தோழர்கள் திரண்டனர். கொலை செய்த சமூக விரோதிகளை  உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டு,   மருத்துவமனையில் இருந்து நகரத்தின் எல்லைவரை தோழர்கள் பேரணியாக வந்தனர்.  மாலை 6-00 மணி அளவில் தோழர் கொலைசெய்யப்பட்ட அலேசீபம் ஊராட்சி பாலேபுரம் கிராமத்தில் உடல் பார்வைக்காக வைக்கப்பட்டது.

       இரவு 7-00 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன், வழக்கறிஞர் புகழேந்தி, பி.ஜே.பி யை சார்ந்த சிவசங்கரன், அயோத்தி தாச பண்டிதர் ஆய்வு மையம் இராமலிங்கம், சித்திரப்பட்டி சின்னுசாமி, சமூக ஆர்வலர் ருத்ரன், மார்க்சிய-லெனினிஸ்ட் விந்தைவேந்தன், தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி மாரிமுத்து, தமிழக மக்கள் விடுதலை முன்னணி தமிழரசன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.  சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய பகுதியில் இருந்து கழகத் தோழர்களும், பல்வேறு அமைப்புகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர் 

      6-7-2012 அன்று காலை புதுவை மற்றும் சென்னையை சார்ந்த கழகத் தோழர்கள் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருந்தனர். 8-00 மணி அளவில் கழகத் தோழர்களும் ஏராளமான ஊர் பொது மக்களும் சேர்ந்து, குற்ற வாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்னால், தோழர் பழனியின் சொந்த ஊரான  சந்தூருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. காலை 9-00 மணி முதல் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. புதுவை மாநில கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வட சென்னை மாவட்ட தலைவர் கேசவன், தென்சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு விடுதலை படை மாறன், புதிய ஜனநாயகம் இராமலிங்கம், புரட்சிகர விவசாய தொழிலாளர் முன்னணி கோபால், கிருட்டிணகிரி மாவட்ட கழக தலைவர் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் இரங்கல் உரை ஆற்றினர். பிற்பகல் 12-30 மணி அளவில் தோழர் பழனியின் உடல் எரியூட்டப்பட்டது.

    இது வரை இந்த பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சந்திரப்பா என்பவர் வெட்டப்பட்டு மருத்துவமனையில் “தன்னை கொலை செய்தது இராமசந்திரன் தான்” என்று வாக்குமூலம் கொடுத்து இறந்து போனார். ஆனால் இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இராமசந்திரனின் பெயர் கூட பதியப்படவில்லை.

  மார்க்சிய-லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த தொப்பி குமார் என்பவர், அவர் சார்ந்த கட்சியின் சுவரொட்டி ஒட்டியதற்காக கடந்த மாதம்  வெட்டி கொலை செய்யப்பட்டார்.

       ஏற்கனவே C.P.I கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து, சமீபத்தில் அ.தி.மு.க வில் இணைந்திருக்கும் நாகராஜ் ரெட்டி கடந்த மாதம் இரண்டு முறை இவர்களால் தாக்கப்பட்டு , தற்போது கழுத்தில் வெட்டப்பட்டு படுக்கையில் இருக்கிறார்.

    கழகத் தலைவரும் கழக மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் , தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரை நேரில் சந்தித்து, இராமசந்திரனின் இப்படிபட்ட அராஜக போக்குகளையும், காவல் துறையின் நடவடிக்கை சுணக்கங்களையும் சுட்டிக் காட்டி, அந்த பகுதியில், நேர்மையான புதியஅதிகாரிகளை நியமித்து, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயத்தில் உறைந்து கிடக்கும் அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் முயற்சிகளும், புலன் விசாரனையும் தீவிரமாக நடந்துவருவதாகவும் தெரிய வருகிறது.

Pin It