ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் (81) கடந்த 20 ஆம் தேதி காலை 6.10 மணியளவில் வல்வெட்டித் துறையில் உள்ள மருத்துவமனையில் முடிவெய்தினார். செய்தியறிந்த தமிழர்கள் உலகம் முழுதும் இரங்கல் ஊர்வலங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். பார்வதியம்மாள் கடந்த சில வருடங்களாகவே உடல்நலமின்றி இருந்து  வந்தார். பார்வதி அம்மாளின் இறுதி ஊர்வலம் வல்வெட்டித் துறையில் செவ்வாய் கிழமை நிகழ்ந்தது.

விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிய தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன், இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியேறி விடுதலைப் போராட்டத்தில் தலைவராகிவிட்டார். பார்வதியம்மாளுக்கு மனோகரன் என்ற மற்றொரு மகனும் இரண்டு மகளும் உள்ளனர். ஒரு மகள் கனடாவிலும், மற்றொரு மகள் சென்னையிலும் குடும்பத்தினருடன் உள்ளனர். மகன் மனோகரன் டென்மார்க்கில் உள்ளார். பார்வதியம்மாளின் கணவர் வேலுப்பிள்ளை கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகதிகள் முகாமில் மரணத்தைத் தழுவினார். மலேசியாவில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பார்வதியம்மாள், சென்னையில் சிகிச்சைப் பெற வந்தபோது இந்திய ஆட்சியாளர்கள் அவரை விமானத்திலிருந்து இறங்கவே அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். மலேசியாதிரும்பிச் சென்ற அவர், சில காலம் கழித்து இலங்கை திரும்பினார்.  பார்வதியம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு கடும் நிபந்தனைகளை மத்திய மாநில அரசுகள் விதித்த நிலையில், தன்மானத்துடன் பார்வதியம்மாள் தமிழகம் வர மறுத்துவிட்டார்.

பார்வதியம்மாள் முடிவெய்திய செய்தி வந்தவுடன் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் அன்று மாலையே இரங்கல் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தது. ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. என்றாலும் திட்டமிட்டபடி ஊர்வலம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்கேற்றனர். ஊர்வலம் இந்திரா திரையரங்கு விஜயா திரையரங்கு, காசி திரையரங்கு, உதயம் திரையரங்கு சாலைகள் வழியாக அண்ணா நெடுஞ்சாலையை கடந்து  கலைஞர் கருணாநிதி சாலை வழியாக மீண்டும் ஊர்வலம் புறப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்த ஊர்வலத்தில் அன்னையாருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஒலி முழக்கங்களை தோழர்கள் உணர்ச்சியுடன் எழுப்பி வந்தனர். இறுதியில் அன்னையார் படத்துக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இரங்கல் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள், மாநில கலை இலக்கிய பேரவை துணை செயலாளர் செ.கி. வேந்தன், ம.தி.மு.க. பகுதி செயலாளர் வை.கோ.ரவி, கலைஞர் கருணாநிதி நகர் ம.தி.மு.க. வட்ட செயலாளர் இலை. சங்கர், 121வது வட்ட மாமன்ற உறுப்பினர் இரா. வெங்கடேசன், தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் முத்து மாரியப்பன், பெரியார் திராவிடர் கழகத் தோழர் அன்பு தனசேகர், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர்கள் மகேசு, ஜெர்சி, மகாலட்சுமி மற்றும் பெரியார் திராவிடர் கழக செயல்வீரர்கள் அண்ணாமலை, ஜெயசீலன், தஞ்சை தமிழன், பி. பல்லரசு, தபசி குமரன், இரா. உமாபதி, எ. கேசவன், செ. அன்பு, சுகுமாறன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். தலைநகரில் நடந்த முதல் இரங்கல் ஊர்வலமாக இது அமைந்தது

Pin It