தோழர்களுக்கு வணக்கம்.

பெரியார் திராவிடர் கழகம் வரும் ஜூன் மாதத்தில் 11 ஆவது ஆண்டில் நுழைய உள்ளது. இந்த நேரத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் இணையதளத்தை முழுமையான தகவல் தொடர்புத் தளமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இணையதள உலகில் பெரியாரின் கருத்துக்கள் முழுமையாக சுமார் பதினோராயிரம் (11000) பக்கங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் வண்ணமும், யூனிகோட் முறையில் தேடுதல் வசதியோடும் உள்ள இணையற்ற - மாபெரும் பெரியார் கருத்துக் கருவூலமாக நமது பெரியார் தி.க.வின் இணையத்தளமான www.periyardk.org மட்டுமே இயங்குகிறது. குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, ரிவோல்ட் போன்ற ஏடுகளில் பெரியார் பதிவு செய்த எழுத்துக்களையும், பேச்சுகளையும் மக்கள் சொத்தாக்கியிருக்கும் அதே நேரத்தில் சிறு சிறு வெளியீடுகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதிகளையும் செய்துள்ளோம்.

ஆனால், பெரியார் திராவிடர் கழகத்தின் இலக்குகள், செயல்பாடுகள், செயல் திட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள் போன்ற அமைப்பு குறித்த தகவல்கள் நமது இணையதளத்தில் எதுவும் இல்லை. புரட்சிப் பெரியார் முழக்கம் ஏடு மட்டுமே பதிவேற்றப்படுகிறது. உண்மையாகவே நாம் களத்தில் ஆற்றிய ஏராளமான பணிகளை ஆவணப்படுத்தி அனைவரும் அறியச் செய்ய வேண்டியது அவசியமான பணியாகும்.

இணையதளத்திற்காக மட்டுமல்லாமல், கழகப் பொறுப்பாளர்களின் உரைகள், செயல்பாடுகள், போராட்டங்கள் குறித்து சிறு சிறு நூல்கள் வெளியிடுவதற்காகவும், 11 ஆவது ஆண்டில் பெரியார் தி.க.வின் அனைத்துச் செயல்பாடுகளையும் தொகுத்து மலர் ஒன்றை வெளியிடுவதற்காகவும், ஆவணப் படம் - குறும்படம் வெளியிடுவதற்காகவும் ஆவணங்களைத் தொகுக்கும் பணி மிக மிக அவசியமாகி உள்ளது.

கழகத் தோழர்களிடமும் மாவட்டப் பொறுப்பாளர்களிடமும் இதுபற்றி நேரில் பேசியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ள ஆவணங்களை முழுமையாகத் தொகுத்து, அவ்வாறு தொகுக்கப்பட்ட முழுமையான தகவல்களை மீண்டும் மிக அதிகமாக பரவலாக்க வேண்டும் என்ற எமது நோக்கத்திற்கு - எமது ஆவணத் தொகுப்புப் பணிக்கு கழகத் தோழர்களும், இயக்கம் சாராத பெரியாரியல் ஆதரவாளர்களும், நண்பர்களும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2001 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக் கூட்டங்கள், பிரச்சாரப் பயணங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் போன்றோர் ஆற்றிய உரைகளின் ஆடியோ அல்லது வீடியோ பதிவுகள், சி.டி., டி.வி.டி.க்கள், நிகழ்வுகளின் புகைப்படங்கள், துண்டறிக்கைகள், பெரியார் தி.க. நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் குறித்து பெரியார் முழக்கம் அல்லாத பிற ஏடுகளில் வெளியான செய்திகள், தினசரி, வார, மாத, ஏடுகளில் வெளியான செய்திகள், இணைய தளங்களில் வந்த செய்திகள் மற்றும் பெரியார் தி.க.வை விமர்சித்தும், எதிர்த்தும் பிற இயக்க ஏடுகளில் வெளியான செய்திகள், கட்டுரைகள் போன்றவை உங்களிடமோ, உங்கள் நண்பர்களிடேமோ இருந்தால் கீழ்க்கண்ட எமது முகவரிக்கு அஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ அனுப்பி உதவுங்கள்.

- கொளத்தூர் மணி

தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை 1

சேலம் மாவட்டம்.

Pin It