சென்னை இராயப்பேட்டையில் கழக சார்பில் 13 ஆம் தேதி தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. அதற்கு முன் ஒரு வாரகாலம் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இயற்கை அழகு மிளிர அமைக்கப்பட்டிருந்த எழில் மிகு மேடையில் பெரியார் வடிவ ஒளி விளக்குகள் பளிச்சிட பெரும் மக்கள் கூட்டத்தின் முன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவுக்கு தலைமை, முன்னிலை வகித்தவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தோழியர் பனிமலர் தலைமையில், தோழியர் கு. கவுரி, க. அம்பிகா வரவேற்புரையாற்ற, தோழியர் பி.சுதா, அ. பவானி, மு. உமா முன்னிலையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. காஞ்சி மக்கள் மன்றக் குழுவினர் பறை இசை மற்றும் புரட்சிகரப் பாடல்களை வழங்கினர். தொடர்ந்து பகுதி இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், நடனங்கள், மாற்றுடைப் போட்டி நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளில் தமிழின எழுச்சி கருத்து களும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாறுகளுமே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திரைப்படப் பாடல்கள், முற்போக்கு கருத்துகளை வலியுறுத்துகிறதா? வலியுறுத்தவில்லையா? என்ற பட்டிமன்றம், திண்டுக்கல் லியோனியை நடுவராகக் கொண்டு நடந்தது. பட்டிமன்றத்தின் வழியாக பகுத்தறிவுக் கருத்துகளை இசையுடன், திண்டுக்கல் லியோனி எடுத்து வைத்தது கூட்டத்தினரை மிகவும் கவர்ந்தது. 2 மணி நேரம் பட்டிமன்ற நிகழ்ச்சி தொடர்ந்தது. தொடர்ந்து விழாவுக்கு வாழ்த்துரை வழங்கி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, எழுத்தாளர் ஓவியா, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த சைதை பாலாஜி, தே.மு.தி.க.வைச் சார்ந்த வி.என். இராஜன், தமிழ்நாடு திருநங்கை நலவாரிய உறுப்பினர் நூரி ஆகியோர் உரையாற்றினர். பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளை அனைவரும் தங்களது உரையில் உளம் திறந்து பாராட்டினர்.

தோழர் தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். தொடர்ந்து மயிலாடுதுறை சங்கமம் குழுவினர் வழங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வட்ட தி.மு.க. மாநகராட்சி உறுப்பினர் ஆர்.என். துரை தமது சொந்த செலவில் மிகச் சிறப்பாக மேடை அமைத்துத் தந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இராயப்பேட்டை பகுதி கழகச் செயல் வீரர்கள் ஒரு மாதம் கடுமையாக உழைத்து விழாவை சிறப்புடன் நடத்தி முடித்தனர்.

Pin It