அணுமின் சக்தி உற்பத்தி - பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கே தவிர, மக்களுக்கல்ல; பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்காக, மக்களுக்கு ஆபத்தான திட்டங்கள் தேவையா, என்று கேட்கிறார் கட்டுரையாளர். இவர் ஒரு மின் பொறியாளர். மனித இனத்தின் வளர்ச்சிக்கு சோசலிச சிந்தனையின் வழிபட்ட அரசும், மின் சக்தியும் அவசியம் என்று மாமேதை லெனின் சோவியத் விடுதலையின்போது குறிப்பிட்டார். அணுமின் சக்தி பேரழிவை உள்ளடக்கியது என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அணுமின் சக்தியின் தேவை குறித்து பேசுவோர் இதனை குறைத்து மதிப்பிடுவது கவலையளிக்கிறது. அணுமின் சக்தியை எதிர்ப்பவர்கள் அறிவியல் பார்வையற்றவர்கள் எனவும் பொது மக்களின் அச்சங்களை அரசு போக்க வேண்டும் எனவும் அவர்கள் பேசுகின்றனர்.

இந்நாட்டில் உற்பத்தியாகும் மின்சக்தி நம் மக்களின் தேவைகளுக்கு, வேலை வாய்ப்பிற்கு, உள்நாட்டு நுகர்வுக்கான உற்பத்திக்கு என முன்னுரிமை கொடுத்து திட்டமிடுவதை விடுத்து, “ஏற்றுமதிக்கான பொருளாதார நோக்கில் செலவிடப்படுகிறது என்பதை உணர மறுப்பது, உலகமயமாக்கல் கருத்தியலின் வெற்றியாகும். எடுத்துக்காட்டாக, சென்னை துறைமுகத்திலிருந்து தினமும் 300 மகிழுந்துகள் ஏற்றுமதியாகின்றன. இது 16 இலட்சம் யூனிட் செலவில் உருவானது!

இது போலவே மென் பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் (பி.பி.ஓ.), பன்னாட்டு நிறுவனங்கள், மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், மால்ஸ் எனும் பேரரங்குகள், கேளிக்கை-விற்பனை அரங்குகள் என சென்னை பகுதியில் அமைந்துள்ள 1000க்கும் மேற்பட்ட குளீரூட்டப்பட்ட கட்ட டங்கள் நாளொன்றுக்கு பல லட்சம் யூனிட்டுகள் மின் சக்தியை நுகர்கின்றன.

இந்தியாவில் தனி மனித ஆண்டு மின் நுகர்வு 704 யூனிட்டுகள். மக்கள் தொகையில் 33ரூ பேர் மின் இணைப்பற்றவர்கள். இந்த நுகர்வு ஐரோப்பியர் களின் நுகர்வில் 11ரூ மட்டுமே. எனவே இந்திய ஆட்சியாளர்கள் உரத்து கூச்சலிடும் மின் சக்தி தேவை என்பது யாருடைய நலன்களுக்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

நம் நாட்டில் 65ரூ, மக்கள் வேளாண் துறையை சார்ந்துள்ளனர். அவர்களது உற்பத்தி திறனையும் உற்பத்தியையும் பெருக்கவும், நெசவாளர்களுக்கு உதவவும் செலவாகும் மின்சக்தி மிகக் குறைவு என்பது திட்டமிடலின் குறைபாடு. இது பெரு வாரியான மக்களுக்கெதிரான செயல் என்பது தெளிவாகும்.

இந்தியா உலக மக்கள் தொகையில் 17%, எரி சக்தி பயன்பாடு 4%, அமெரிக்கா உலக மக்கள் தொகையில் 5% மட்டுமே. ஆனால் எரி சக்தி பயன்பாடோ 24%. உலகின் மிக பணக்கார நாடான, தொழில் நுட்பத் திறனில் முன்னோடியான, அமெரிக்கா தனது தேவையில் 10ரூ க்கும் குiறாகவே அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு அணு மின் நிலையத்தைக்கூட கட்டவில்லை. படிப்பறிவால் உலகின் முன்னோடியாக உள்ள அந்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க அமெரிக்க அரசினால் இயலவில்லை. வேண்டுமானால் நமது பிரதமர் மன்மோகன்சிங் தனது குழுவை அனுப்பி அச்சம் தவிர்க்க அமெரிக்காவுக்கு உதவலாம். அதன் மூலம் அன்னிய செலாவணியை ஈட்டலாம்.

இந்தியாவில் தற்போது அணுமின் சக்தி 2.70% மட்டுமே. மின் சக்தியை கடத்துவதிலும், விநியோ கிப்பதிலும் ஏற்படும் இழப்பு 25% (உலகத் திறன் 9% மட்டுமே). இதை மேம்படுத்துவதின் மூலம் 16% இழப்பை மிச்சப்படுத்தலாம். இதுபோல மின் திறன் மேம்பாடுகளின் மூலம் குறைந்தது 15% மிச்சப் படுத்தலாம்.

நீர் மின் நிலையங்கள் 90,780 மெகாவாட் நிறுவ வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப் பகுதி 2 லட்சம் சதுர கிலோ மீட்டர். இங்கு சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கலாம்.

மன்மோகன் சிங், சோனியா காந்தி வழிகாட்டு தலின்படி, உலக மயமாக்கல் போர்வையில் இந்தியாவை மேலைநாடுகளின் சந்தைக்காடாக மாற்றி வருகிறார். இதை பா.ஜ. கட்சியும் ஆதரிக்கிறது என்பதை விக்கி லீக்ஸ் பலமுறை அம்பலப் படுத்தியிருக்கிறது. வரும் 20 ஆண்டுகளில், 40 ஆயிரம் மெகாவாட் அணுமின் நிலையங்களை, 6.4 லட்சம் கோடி ரூபாயில் அமைக்க இந்தியா திட்டமிட் டிருக்கிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களின், மக்களின் நன்மைக்கே உதவும் என்பது தெளிவு.

அணுமின் நிலைய விபத்துக்களில் சில:

1. 4 மே 1987 இல் கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது (Core rupture)). 2 ஆண்டுகள் மூடப்பட்டது. செலவு 300 மில்லியன் டாலர்.

2. 10 செப்டம்பர் 1989 - தாராப்பூர் ஐயோடின் கசிவு - கதிர்வீச்சு பாதுகாப்பு அளவைவிட 700 மடங்கு அதிகம். செலவு 78 மில்லியன் டாலர்.

3. 3 பிப்ரவரி 1995 - கோட்டா ராஜஸ்தான் - ஹீலியம்/கனநீர் கசிவு. 2 ஆண்டுகள் மூடல் - செலவு 280 மில்லியன் டாலர்.

4. 22 அக். 2002 - கல்பாக்கம் - 100 கிலோ - சோடியம் (கதிர் வீச்சு) கசிவு - செலவு 30 மில்லியன் டாலர்.

எல்லா உற்பத்தி நிகழ்வுகளிலும் விபத்துகள் என்ற தாங்கக்கூடிய அழிவு என்பதை உள்ளடக்கியதாக உள்ளது உண்மைதான். ஆனால், அணுமின் நிலையங்களில் பேரழிவு நிகழ வாய்ப்புள்ளது.

இது இயற்கை சீற்றங்களினால் மேலும் உயரும் என்பது உண்மை. இம் மின் நிலையங்களில் பெறப்படும் கழிவுப் பொருட்களின் பாதியை சரிசெய்யவே 25000 ஆண்டுகளாகும். இது பாதுகாப்பா? வருங்கால சமுதாயத்திற்கு நாம் விட்டுச் செல்லும் பேராபத்தா?

அணுமின் நிலையத்தில் உற்பத்தி இலக்கை அடைய பல மணி நேர இயக்கத்திற்கு பின்னரே இயலும். இதை கிரிட்டிக்கல் என குறிப்பர். இதன் இயக்கத்தை நிறுத்தவும் பல மணி நேரமாகும். எனவேதான் இந்நிலையத்தை base load station என்று அழைப்பர். சுனாமியின்போது ‘ரியாக்டரை’ குளிர்விப்பது என்பது மிகவும் சிக்கலானது என்பதை ஜப்பானில் புகுசிமா அணுமின்நிலைய விபத்தின் போது அறிய முடிந்தது.

இதன் கதிர்வீச்சு 200-300 கி.மீ. அளவுக்கு போனது. இது கல்பாக்கம் / கூடங்குளத்துக்கும் பொருந்தும். எனவே உலக மயமாக்கல், ஏற்றுமதி பொருளாதாரம் என்ற மாயையிலிருந்து விலகி நமது மண்ணுக்கேற்ற பொருளாதாரம், பெருவாரியான மக்களின் உழைப்பு சார்ந்த உற்பத்தி முறைக்கு முன்னுரிமை என்று திட்டமிட்டால், அணுமின்சக்தி இல்லாமலேயே நாம் சிறப்பாக வாழ முடியும்.

- பொன்.ஏழுமலை

Pin It