சங்கராச்சாரிகள் முதல் சீத்தாராம் எச்சூரிகள் வரை, பழங்குடியின மக்களின் பிரச்சனைகளை அவரவர் கோணத்தில் அணுகிக் கொண்டிருக்க, "மாவோயிஸ்டு பிரச்சனையை எவ்வாறு அணுகுகிறீர்கள்?' என்ற "தெகல்கா' (சூன் 12, 2010)வின் கேள்வியை எதிர்கொள்ளும் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநரான இ.என்.ராம்மோகன், “முதலாவதாகவும் முழுமையாகவும் இது ஒரு சமூக நீதிப் பிரச்சனை. 1980களில் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.அய்.)யில் டி.அய்.ஜி.யாக அய்தராபாத்தில் நான் பணியிலிருந்த பொழுது, இப்பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறேன்.

“பல தலைமுறைகளாக ஆந்திராவில் உயர்சாதியினர் - தலித்துகளையும் பழங்குடியினரையும் சுரண்டி வருகின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு நில உச்சவரம்பு எதுவும் சட்டமாக இருக்கவில்லை. அதனால் உயர் சாதியினர் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தமக்கு சொந்தமாக வைத்திருந்தனர். ஆனால் தலித்துகளும், மலைவாழ் மக்களும் நிலமற்றவர்களாக இருந்தனர். மிகச் சிலர் மிகக் குறைவான அளவில் நிலம் வைத்திருந்தனர். அவர்களையும் காலப் போக்கில் பொய்க்கணக்குகள் எழுதி, மிரட்டி, அவர்களின் சொற்ப நிலங்களையும் அபகரித்து விட்டனர். வேறு வழியின்றி, உயர்சாதியினரிடம் கூலி விவசாயிகளாக, கொத்தடிமைகளாக அம்மக்கள் வாழ நேரிட்டது.

“இச்சூழலில் 1946 இல் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தெலுங்கானா பகுதியில் அம்மக்களுக்கான தமது அரசியல் வேலைகளைத் தொடங்கியது. வில், அம்புகளோடு பழங்குடியினரை குழுக்களாகத் திரட்டி, உயர்சாதியினரின் தானியக் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றை மீட்டு, உணவின்றி தவித்த மக்களுக்கு விநியோகித்தது. அப்போராட்டத்தின் வாயிலாக, விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு உழைப்பவர்களுக்கும், மூன்றில் ஒரு பங்கு நில உடைமையாளர்களுக்கும் என அறிவிப்பு செய்தனர்.

“ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நில உடைமையாளர்களுக்கு சாதகமாக காவல் துறை, உழைக்கும் விவசாயிகளை அடித்து நொறுக்கி கைது செய்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, நில உச்சவரம்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அவை ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1989 இல் ஆந்திராவில் என்னுடன் பணியாற்றிய உளவுத் துறை இயக்குநராகயிருந்த அஜய் தியோராவை அழைத்துக் கொண்டு, அப்போதைய வருவாய்த்துறை அமைச்சரை சந்தித்தேன். நில உச்சவரம்புச் சட்டத்தை உடனடியாக முழுமையாக நிறைவேற்றினால் ஒழிய, நக்சலைட் பிரச்சனைக்கு நீங்கள் தீர்வுகாண இயலாது எனக் கூறினேன். "அது சாத்தியமில்லை, நாங்கள் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது' என அவர் எங்களிடம் கூறினார். அவரது அமைச்சரவை சகாவான சுதாகர்ராவ் என்பவரே அடிலாபாத் தொகுதியில் 1100 ஏக்கர் நிலத்தின் உடைமையாளராக இருந்தார்.

“ஆந்திராவில் அன்றிலிருந்து இன்றுவரை பல காவல் நிலையங்களில், ஒரு தாழ்த்தப்பட்டவர் துணிந்து ஒரு புகாரைப் பதிவு செய்யும் நிலைமை இல்லை. ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு ஆதரவாக வழக்குப் பதிவோ, விசாரணையோ அங்கு நடைபெறுவதில்லை. பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பண்ணையார்களின் நிலங்களில் வேலை செய்பவர்களின் வீட்டுப் பெண்களின் திருமண நாளன்று, முதல் இரவை நிலப்பிரபுக்களோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நிர்பந்திக்கப்படுகின்றனர். ஆதிவாசிகளின் நாட்டுப்புறப் பாடல்களில் இக்கொடுமைகள் பாடப்படுகின்றன. தமக்கு இந்நாட்டில் எவ்வித உரிமையும் இல்லை என அவர்கள் பாடுகின்றனர். இத்தகைய தவறுகள் களையப்படாமல், இப்பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என நீங்கள் நம்புகிறீர்கள்?” என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார். அதிகார வர்க்கத்தில் பங்கு பெற்றிருக்கும் ராம்மோகன் போன்றவர்களின் இத்தகைய தார்மீக ஆவேசம், இங்கு ஒரு கடைநிலை அரசு ஊழியனுக்கு இல்லாமல் போனதேன்?

"ராம்மோகன் அதிகார வர்க்கத்தின் ஜனநாயகக் குரல்; அருந்ததிராய் மேல்தட்டு வர்க்கத்தின் புரட்சிகர முகம்' என்றார் ஒரு நண்பர். இருக்கட்டும். அதிகார வர்க்கத்திலிருந்தும், மேல்தட்டு வர்க்கத்திலிருந்தும் சாத்தியமான இக்குரலும் இம்முகமும், சமூகநீதி எனும் வாய்ப்பில் கல்வி, வேலை, நவீன வாழ்க்கை என இடஒதுக்கீடு பெற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரிலிருந்து உருவாகும் சாத்தியங்கள் அருகிக் கொண்டே வருகின்றன. ஆயுதமும் வன்முறையும்தான் போராட்டப் பாதையாக இருக்க முடியுமா? என இவர்கள் முணுமுணுக்கின்றனர். அழுக்கும் கறைகளும் நிரம்பிய வெளி உலகத்தின் வெம்மை அடர்ந்த வெளிச்சத்தைவிட, குளிர்ந்த தூய்மை பரவும் வனத்தின் நிழலே மேலானது என வாழ்ந்து வந்த பழங்குடியினர், இந்திய ராணுவத்தின் மிருக பலத்தினால் ஒடுக்கப்பட்டு, "சல்வாஜுடும்' திறந்த வெளி சிறைக் காவலிலும், தமது பாரம்பரிய சுதந்திர வாழ்வு பறிக்கப்பட்டு உள்ளடர்ந்த வனாந்தர சூழலிலும் உயிர் இருப்புக்காக ஓடிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் எண்ணிக்கையில் பல லட்சத்தினர். அடர்ந்த அக்காடுகளிலும் மலைகளிலும் நாம் எண்ணுவது போல, அவர்களால் தம் கோரிக்கைகளை முழங்க முடியாது; போராட்டப் பாதைகளைத் தீர்மானிக்க முடியாது.

“உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்களால் முடியாது. உண்மையில் அவர்கள் வேறு வழியின்றி உண்ணாமல்தான் இருக்கின்றனர் என்பதே நமக்குப் புரியாத நிலையில், அதை ஒரு போராட்டமாகச் செய்தால் மட்டும் நாம் புரிந்து கொள்ளப் போகிறோமா?” என இதைத்தான் கேள்வியாக எழுப்புகிறார் அருந்ததிராய். அரசியல் வெறுமையுற்ற சாமானிய மக்கள் இருக்கட்டும். கோட்பாடுகளும், நுண் அரசியலும், மானுட ரசனைகளும் ததும்பி வழியும் அறிவுஜீவிகள் என்னவானார்கள் என அசூயை கொண்டால், “நீங்கள் நினைப்பது போல, எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என்.ஏ.விலிருந்து வரவில்லை” என தனது மொழியில் பகடி செய்கிறார் அருந்ததிராய். ஆனால் அது பகடி அல்ல!

நாம் நம்பிக்கை கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் மிகச் சாமானிய மனிதர்களாக, அவ்வகையான ஒப்பனைகளையே தத்தமது அடையாளங்களாகத் தரித்து வாழ்கின்றனர் -அல்ல, பிழைக்கின்றனர். தமது பிழைப்புக்கான "கரிக்குலம் விடே' ஆகத்தான் அவர்கள் தமக்கான ஒப்பனைகளைப் பூசிக் கொள்கின்றனர். உண்மையில் அதிகார வர்க்கத்திற்கும், ஆதிக்க சாதி கட்டுமானத்திற்கும், பார்ப்பனிய அரசியலுக்கும் எதிராக அணிவகுக்க வேண்டிய இக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் நடைமுறையில், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சனைகள் மீது பாராமுகம் கொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் புறக்கணிக்கின்றனர். சில நேரங்களில் அருவருப்பு கொள்கின்றனர்.

இவர்களுக்கு எரிச்சலூட்டும் இவ்வறிய மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் விழுமியப் பண்பாட்டிற்கும், பாரம்பரியக் கலைகளுக்கும், தொன்மத்திற்கும், கடுமையான உழைப்பிற்கும், அறநெறிகளுக்கும், இயற்கையுடனான கூட்டிணைவிற்கும், அழகியல் ரசனைக்கும், மானுட நேயத்தின் எல்லையற்ற அன்பிற்கும், அறுதியிட்டுக் கூற முடியாத அப்பாவித் தனத்திற்கும் ஒப்பனை பூசியிருக்கும் நம் "நம்பிக்கைக்குரிய' இவர்களின் டி.என்.ஏ.க்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதே அருந்ததிராயின் பகடிக்குப் பின்னே நாம் கூற விரும்புவதும்.

வர்ணதர்ம படிநிலைக் கட்டுமானத்தின் மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளிலிருந்து, பெருமளவில் இத்தகைய ஒப்பனைகளோடு உலாவரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும், "அவர்ணர்'களாகத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் தலித் - பழங்குடியின மக்களிடமிருந்தும், அவர்களின் பிரச்சனைகளிலிருந்தும் விலகி நிற்கின்றனர் என்றே புரிந்து கொள்ள இடமிருக்கிறது. ஒப்பனைகளை மீறி தமது வெகுசன உளவியல் அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவையே பல நேரங்களில் உன்னத இலக்கியங்களாகவும், தீவிர உடல்மொழி பேசும் நாடகங்களாகவும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் கலை - இலக்கிய வரலாற்றின் எழில்மிகு பக்கங்களை இட்டு நிரப்பும் இவர்களின் பிரதிகள், பழங்குடி மக்களின் உப்புக் குருதி நெடி வீசும் உடல்களைவிட மகத்தானவை அல்ல.

ஊடகங்களின் ஒப்பனை அறைகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் சுதந்திரமாகவும், அறிவு நாணயத்தோடும், உண்மையாகவும் இயங்கும் தனித்துவமான கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மக்களுக்கான "அறிவுஜீவிகள்' என நாம் அடையாளம் காணவும் வேண்டும். கடந்த ஏப்ரல் 6 அன்று தண்டேவாடாவில் 76 துணை ராணுவப் படையினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட களேபரம் ஓய்வதற்குள், கடந்த மே 17 அன்று ஒரு பேருந்து மாவோயிஸ்டுகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 16 பொதுமக்களும்(?) 15 சிறப்புக் காவலர்களும் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டுகளோடு தொடர்புபடுத்தி - குற்றம் சாட்டப்பட்டு, சட்ட விரோதமாக இரண்டு ஆண்டுகள் சட்டீஸ்கர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த, மனித உரிமைப் போராளியும் மருத்துவருமான, பினாயக் சென், “பேச்சு வார்த்தைக்கான சூழலை சீர்குலைக்கும் இச்செயலை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. வன்முறையை எவர் கையாளும் போதும், நமது ஒப்புதல் மறுப்பை பல வடிவங்களிலும் நாம் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்” எனப் பதிவு செய்கிறார். “அரசின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புகிறவர்கள் திட்டமிட்ட, இரக்கமற்ற (மாவோயிஸ்டுகளின்) வன்முறைகளைக் கண்டனம் செய்வதில்லை” என அங்கலாய்க்கிறார் நடுவண் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

புகழ் பெற்ற மனித உரிமையாளரும் வழக்குரைஞருமான கே.ஜி. கண்ணபிரான், “அரசாங்கமோ, நக்சலைட்டுகளோ இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் நாம் எழுந்து நிற்க வேண்டும் என விரும்புவது, ஒரு வகை பார்ப்பனிய சடங்குத்தனமாக இல்லையா? அரசின் வன்முறை குறித்து நாம் பேசும்போது கவனமெடுக்கும் உள்துறை அமைச்சர், நக்சலைட்டுகளின் வன்முறையை நாம் கண்டிக்கும்போது கண்டுகொள்வதில்லை. ஒட்டுமொத்த வன்முறை குறித்தும் நாம் பேச முன் வந்தால், அதை செவிமடுக்க உள்துறை அமைச்சர் தயாராக இருப்பாரா?” என கேள்விகள் எழுப்புகிறார்.

“இப்பேருந்து குண்டு வெடிப்பு, ஊடகங்கள் செய்தி வெளியிடுவது போல மாவோயிஸ்டுகளின் திட்டமிட்ட செயலாக இருந்தால், அது நிச்சயமாக மன்னிக்கவும் நியாயப்படுத்த முடியாததும் ஆகும். பல ஊடகங்கள் செய்திகளைத் திரித்தும் மிகைப்படுத்தியுமே வெளியிடுகின்றனர். இப்பேருந்தில் பயணம் செய்த சிறப்புக் காவல் அதிகாரிகள் ஒருபுறமிருக்க, மற்றவர்கள் ஊடகங்கள் கூறுவது போல பொதுமக்கள் அல்லர். அவர்கள் சிறப்புக் காவல் பிரிவில் இணைவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். போர்ச் சூழல் நிலவும் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பேருந்தை காவல் துறை பயன்படுத்தியது, அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது” என்கிறார் அருந்ததிராய். தண்டேவாடாவை உள்ளடக்கிய பஸ்தார் மண்டல காவல் துறை அய்.ஜி. லாங்குமார் என்பவரிடம் கூட, சிறப்புக் காவலர்களுக்காக பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியபோது ("அவுட்லுக்', மே 31, 2010 வார இதழ்) மவுனம் சாதிக்கவே செய்தார். இந்த மவுனத்திற்கு மட்டுமல்ல -

“மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கைகளை இன்னும் கடுமையாக்க பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது' ' - நரேந்திரமோடி, குஜராத் முதலமைச்சர்.

“மாவோயிஸ்டுகளின் ஆதரவாளராகச் செயல்படும் சில மனித உரிமை அமைப்புகள் ஆபத்தானவை. அவை தமக்கான நிதித்தேவையை மாவோயிஸ்டுகளிடமிருந்தே பெறுகின்றன” - அஜித் டோவில், மத்திய உளவுப் பிரிவு முன்னாள் இயக்குநர்.

“நமது எதிரிகள் யாரென்பதில் மனித உரிமை அமைப்புகள் குழப்பம் விளைவிக்கின்றன. மாவோயிஸ்டுகள்தான் எதிரிகள் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்” - அஜய் ஷானி, மோதல் மேலாண்மை நிறுவனம்.

“மனித உள்ளீடற்ற வெறுமையான சமூகத்தைக் கட்டியெழுப்புவதே மாவோயிஸ்டுகளின் விருப்பமாக இருக்கிறது.” - ஹர்ஷ் மந்தர், தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் - என்பன போன்ற அதிகார வர்க்கத்தின் குரல்களுக்கும் போதுமான மறுமொழிகளைப் பகர, நியாய உணர்வு பீறிடும் எவரொருவரும் முன்வர வேண்டும். அவர்கள் எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, அறிவுஜீவிகளாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமும் அல்ல.

தண்டேவாடாவிலிருந்து சுக்மா எனுமிடத்திற்குச் செல்லும் வழியில் தகர்க்கப்பட்ட பேருந்து குண்டு வெடிப்பு நிகழ்வின் இரு நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதற்கான புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதில் மாவோயிஸ்டுகளைக் கண்காணிப்பதற்கும், ராணுவ தேடுதல் வேட்டைக்கும் வானூர்திகளை (ஹெலிகாப்டர்களை) கூடுதலாகப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வான்வழித் தாக்குதலுக்கு விமானப் படையின் விமானங்களைப் பயன்படுத்துவதில் முடிவு காணப்படவில்லை என ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. "சொந்த மக்களின் மீது வான்படையைப் பயன்படுத்துவது, அனுமானிக்க முடியாத பேரழிவுகளை ஏற்படுத்தும்' எனச் சில மூத்த விமானப்படை அதிகாரிகளே மறுக்கின்றனர். "துணை ராணுவப் படையினருக்குப் போதுமான பயிற்சியின்மையும் ஒழுங்கமைக்கப்பட்ட தலைமையின்மையும் தான் தண்டேவாடாவில் 76 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டதற்கு அடிப்படைக் காரணம், "தாண்டேவாடாவில் 22 காவல் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் போதுமான பயிற்சியுடன் கூடிய காவலர்களும் வழிநடத்தும் ஆய்வாளர்களும் இல்லை', "துணை ராணுவப் படையினரும் காவலர்களும் இணக்கமான தகவல் பரிமாற்றத்தில் இருப்பதில்லை', "சிறப்புக் காவலர்கள் பொதுமக்களின் பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டும், அவர்கள் அதைப் பயன்படுத்துகின்றனர்', "ஆளில்லா விமானங்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவது பற்றி பேசப்படுகிறது. ஆனால் அடர்ந்த காடுகளில், இம்முயற்சிகள் தோல்வியைத் தருவனவாகவே உள்ளன' என்பன போன்ற கருத்துகள் ராணுவ வட்டாரங்களில் உலவுகின்றன.

ஆனாலும் 1966 இல் மிசோ தேசிய முன்னணி கெரில்லாக்களின் மீதும், 2003 இல் ஜம்முவில் காகா மலைப் பகுதிகளிலும் வான்வழித் தாக்குதலுக்காக வான்படைகள் பயன்படுத்தப்பட்டுள்ள முன்னுதாரணங்களும் இருக்கின்றன. "குடிமைத் துறைகளுக்கு உதவும்' நோக்கில் உள்நாட்டு பாதுகாப்புக் கடமைகளில் ராணுவத் துறையினரும், விமானப் படைப் பிரிவும் பயன்படுத்தப்படுவதற்கு, தனித்த அரசியல் சட்ட ஒப்பங்கள் இருக்கின்றன எனவும் கூறப்படுகிறது. அடர்ந்த காடுகளில் ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் இறக்குவதற்கு, விமானப்படை உலங்கு ஊர்திகள் தற்போதும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. இக்கட்டுரையின் போக்கில், ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறை, துறை சாராத சிறப்புக் காவல் அதிகாரிகள் (அமைப்பு சாரா தொழிலாளிகள் போல) போன்றவற்றுக்கான வேறுபாடுகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அண்டை நாடுகளுடனான போர், இணக்கமுள்ள நாடுகளுடன் கூட்டு நடவடிக்கை மற்றும் அய்க்கிய நாடுகள் அவையின் சிறப்புப் படைப் பிரிவில் பங்கேற்பு என ராணுவத் துறையின் அவசியமும் ஒழுங்கும் வரையறை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டுக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு துணை ராணுவப் படையினரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ராணுவப் படைப் பிரிவிற்கு வழங்கப்பட்டிருக்கும் பயிற்சிகளும் இடப்படும் ஆணைகளும் மிகக் கடுமையானவை. அவை சொந்த நாட்டு மக்கள் மீது பயன்படுத்த முடியாதவை. ராணுவமும், துணை ராணுவப் படையும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை. காவல் துறையோ மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பவை. துறை சாராத சிறப்புக் காவல் பிரிவுக்கோ சட்ட அங்கீகாரம் இல்லை. சட்ட விரோதமானதும் கூட. இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் தான் இ. என். ராம் மோகன் போன்றவர்களின் கூற்றுகளையும் நாம் அறிய வேண்டும்.

அவர், “C.R.P.F., I.T.B.P., B.S.F. ஆகியவற்றில் நான் பணியாற்றி உள்ளேன். சி.ஆர்.பி.எப். சட்டம் - ஒழுங்கு ஆணைப் படையாகப் பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லத்தி சார்ஜ் செய்வதில் அவர்கள் தேர்ந்தவர்கள். ஆனால் காஷ்மீரில் நடப்பதை நீங்கள் கவனித்தால், அவர்கள் அங்கே கூட்டங்களை நோக்கி கல்லெறிகிறார்கள். ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொள்ளும் அக்கூட்டத்தில், ஒரு பக்கத்தில் சீருடை அணிந்தவர்களையும் மற்றொரு புறத்தில் சீருடை அணியாதவர்களையும் (பொதுமக்கள்) நாம் காண முடியும். கலவரப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் அவர்கள் (துணை ராணுவப் படையினர்) அந்தந்த மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறார்கள். (கற்களை எறிந்து கூட்டத்தைக் கலைப்பது காவல்துறைக்குத் தரப்பட்டிருக்கும் பயிற்சியாக இருக்கலாம். ஆனால், மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் ராணுவத் தலைமையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் (நாகா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தானே இருக்கின்றன)” என்கிறார். (அடைப்புக் குறிப்புகள் - கட்டுரையாளருடையவை).

மேலும் அவர், “நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவது பேரழிவை விளைவிக்கும். எடுத்துக்காட்டாக, பீகார் படைப்பிரிவினரில் கணிசமானோர் ஆதிவாசிகளே. அவர்கள் தம் உறவினர்களுக்கு; குடும்பத்திற்கு எதிராக எப்படி செயல்பட முடியும். ஒன்றுமறியாத மக்களைக் கொன்றுவிட்டு, நக்சலைட்டுகளைக் கொன்றோம் என்றே பல நேரங்களில் சொல்லப்படுகிறது. மாவோயிஸ்டுகள் ஒருபோதும் ஆயுதங்களை ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அப்படிச் செய்ய முடிவெடுத்தால், மீண்டும் போராட்டத்தை தொடங்குவது கடினமாகிவிடும்.

“அரசு நிலம், வன உரிமைகள், சுரங்கங்கள் ஆகியவற்றில் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டால் மட்டுமே, அவர்களிடம் நாம் உரையாற்றவும், சம்மதிக்கவும் செய்ய முடியும். அடிப்படை நிலைமைகளைச் சரி செய்யாமல் மிகப்பெரிய ராணுவ வலிமையைக் குவித்தாலும், பிரச்சனைகள் இன்னும் கூடுதலாக வளரவே செய்யும். எனது கருத்தை எந்த இடத்திலும் நான் இவ்வாறே பதிவு செய்ய விரும்புகிறேன் - அது அரசாங்கத்திடமானாலும்” என மனசாட்சியுடன் பேசுகிறார்.

உள்நாட்டுக் கலவரங்களிலும் நெருக்கடிகளிலும் பயன்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கை, ஏறத்தாழ ஏழு லட்சம் என மதிப்பிடப்படுகிறது. மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவில் 2.30 லட்சம், எல்லைப் பாதுகாப்புப் படையில் 1.30 லட்சம், அசாம் ரைபிள் பிரிவில் 50 ஆயிரம், இந்தோ - திபெத் எல்லைக் காவலில் 75 ஆயிரம், இதரப் பிரிவில் 1 லட்சம் என உள்ளனர். உள்நாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராடுவது, பாரம்பரிய நினைவிடங்களைப் பாதுகாப்பது, தேசிய பேரழிவுக் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது, கலவரங்களைக் கட்டுப்படுத்துவது, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்குச் செல்வது, தேர்தல் பணிகளில் பங்கேற்பது ஆகியன இப்படைப் பிரிவுகளுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் வேலைப் பிரிவினைகள். "எந்த வேலையும் எந்த நேரமும் எந்த இடமும்', "மரணம் வரையிலும் பணி' என்பதே இவர்களுக்கான குறிக்கோள்களாக; கடமையின் ஒழுங்குகளாக; கட்டுப்படுத்தும் ஆணைகளாக வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய துணை ராணுவப் படைப்பிரிவின் 1.50 லட்சம் சிப்பாய்கள்தான் மத்திய இந்தியாவின் மாவோயிஸ்டு அரசியல் பகுதிகளில், "சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கென குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 160 பேர் என்ற விகிதத்திலிருக்கும் காவல் துறையினரின் எண்ணிக்கையோ, ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கரில் 1 லட்சம் மக்களுக்கு 205 பேர் என இருக்கிறது என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இருந்தும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒருபுறமிருக்க, ஊழலும் எதேச்சதிகாரமும் ஊதிப் பெருத்திருக்கும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்கு ஆதரவாகப் பணிபுரிய நிர்பந்திக்கப்பட்டிருக்கும் துணை ராணுவப் படையினர் மத்தியில், அவநம்பிக்கைகளும் விரக்தியும் வளர்ந்து வருவதும் ஊடங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

துறைசார் புள்ளிவிவரங்களின்படி, 14,422 வீரர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். "மாநில காவல் படையினரையும், துணை ராணுவப் படையினரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் பின்னடைவும் முரண்களும் தோன்றியிருப்பதாக' இ.என். ராம்மோகன், தனது ஒரு நபர் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ("தெகல்கா', மே 8, 2010). “ஓர் அதிகாரிக்கு தண்ணீரோ, குளிர்பானமோ வாங்கிவர பத்து கார்கள் முகாமிலிருந்து செல்கின்றன. ஆனால் விடுமுறையில் ஒரு வீரர் செல்வதற்கு காட்டிலிருந்து வெளியேற, ஒரு ஜீப்பை பயன்படுத்துவதற்குப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் எங்களுக்கு அறவே இல்லை” என 12 ஆண்டுகளாக துணை ராணுவப் படையில் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக்ரே (வயது 34) குற்றம் சுமத்துகிறார்.

“தற்காலிகமாக முகாமிடும் இடங்களில் தங்குவதற்கு, மழை மற்றும் கடும் வெயிலுக்கும் பாதுகாப்பான மற்றும் குறைந்த அளவு வசதியுடன் கூடிய கூடாரங்கள் அமைத்துத் தருவதில்லை. காயமடைந்து மருத்துவமனைகளில் இருக்கும் காலங்களில்கூட, சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. காவலர்களுக்கான நலத்திட்டங்கள் முறையாக அவர்களிடம் சென்று சேர்வதில்லை. அதிகாரிகளோ வசதியான, பாதுகாப்பான குடியிருப்புகளில் போதுமான வேலையாட்களோடு சொகுசாக வாழ்க்கை நடத்துகின்றனர். வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பயணப்படிகளைப் பெறுவதும் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது” என மற்றொரு வீரர் ஆதங்கப்படுகிறார். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சி.ஆர்.பி.எப். காவலராக 16 ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ஒருவர், “1947இல் சுதந்திரம் பெற்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளைப் போலத்தான் நடத்தப்படுகிறோம்” என வேதனையை வெளிப்படுத்துகிறார்.

போராடும் மக்களுக்கு செயல் தந்திர ரீதியில் பயனளிக்கும் இத்தகைய முரண்களைக் களைவதற்கும் அறிவுரைகளை வழங்குவதற்கும் அதிகார வர்க்கம் பல்வேறு வழிவகைகளைக் கையாண்டும் வருகிறது. அவற்றில் பேராபத்து மிகுந்த ஆலோசனைகளும் சொல்லப்படுகின்றன. ஓய்வுபெற்ற "விங் கமாண்டர்' யு.சி.ஜா. என்பவர், “உள்நாட்டு பாதுகாப்பின்மை, உள்நாட்டு அமைதியின்மை போன்ற காலங்களில் நமது ராணுவத் தலைவர்கள் "பொது அமைதியைக் காப்பது' என்ற கேள்வி எழும்போதெல்லாம் "இது எங்கள் வேலை அல்ல; இதை எங்களால் செய்ய இயலாது, சொந்த நாட்டு மக்கள் மீது வான்வழித் தாக்குதல் உட்பட வன்மையான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது' என்று மறுத்து வருகின்றனர். இந்த பொறுப்பின்மை, அரசின் ஆயுதந்தாங்கிய படையினருக்கு, இந்தியக் குடிமக்களிடம் நன்மதிப்பைப் பெற்று தராது. கால அவசரம் கருதியும் தொழில் நிமித்தமும் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றித் தருவது அவர்களுடைய கடமை” என "தி இந்து' நாளிதழில் (சூன் 6, 2010) எழுதுகிறார்.

இவரது கட்டுரையின் பேராபத்து மிகுந்த பகுதி குறிப்பிடுவது என்னவென்றால், “உள்நாட்டு எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவும் ராணுவம் விருப்பத்துடனேயே இருக்கிறது. இது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படும் வீரர்களுக்கு ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் உடனடியாக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்” என்பதே. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் “எதிரிகளை கண்டவுடன் சுட்டுத் தள்ளுவது, பொதுமக்களை எந்த நேரத்திலும் விசாரணைக்கு உட்படுத்துவது, சம்மன் இல்லாமல் வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனையிடுவது, ஆவணங்களைக் கைப்பற்றிக் கொள்வது” என்பன போன்ற அடக்குமுறைகளுக்கு சட்டப்பூர்வமாகவே அனுமதியளிக்க வகை செய்கிறது.

இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறுவதற்கு, ராணுவத் துறையினருக்குத் துணை நிற்கிறது. மணிப்பூரில் அசாம் சிறப்புப் படைப் பிரிவிற்கு இச்சட்ட அதிகாரம் வழங்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளில் ராணுவத்தின் அளவிட முடியாத கொடுமைகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர். தாய்வழிச் சமூகத்தின் சிதைந்து போகாத பண்பாட்டுக் கூறுகளை இன்னும் தாங்கி நிற்கும் மணிப்பூர் மண்ணின் வீரஞ் செறிந்த பெண்களின் நிர்வாணப் போராட்டத்தை, இந்த உலகம் ஒருபோதும் மறக்க இயலாது. சிறப்பு அதிகாரச் சட்டத்தின் வழியே அசாம் படைப் பிரிவினர் நிகழ்த்திய கொடுமைகளின் வெளிப்பாடாகத்தான் அப்பெண்களின் போராட்டம் வெடித்தது. சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படாமலேயே, ராணுவத் துறையினர் நிகழ்த்தும் கொடுமைகளும் குற்றங்களும் பொறுத்துக் கொள்ளக்கூடியனவாக இல்லாதபோது, யு.சி.ஜா. போன்றவர்களின் ஆலோசனைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டால் என்னாவது?

- அடுத்த இதழில்

Pin It