மரண கானா விஜி - சாவு வீடுகளில் சென்னையில் கானா பாடல்களை பாடும் இளைஞர். அவரது இரண்டு கால்களும் செயலற்றவை. ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார். தாய் தந்தையார் என்பதே அவருக்கு தெரியாது. சென்னை கடற்கரையில் 6 மாத குழந்தையாக இருந்தபோது ‘அநாதையாக’ விட்டுச் செல்லப்பட்டவர். எனவே தனக்கு சாதி மத அடையாளம் ஏதும் இல்லை; நான் மனிதன் என்று பெருமையுடன் கூறுகிறார். மூன்று நாள் பட்டினியுடன் உணவு கிடைக்குமா என்று ஏங்கித் தவித்தபோது கடற்கரையில் சில பார்ப்பனர்கள் உணவு  பொருள்களையும் பழங்களையும் வீணடித்ததை நேரில் பார்த்தார். மனிதாபிமானத்தோடு தனக்கு உண்ணத் தருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவர் உள்ளத்தில் அன்று முதல் பார்ப்பன எதிர்ப்பு ஆழமாகப் பதிந்தது.

பெரியாரையும், அம்பேத்கரையும் தனது தலைவர்கள் என்று கூறும் அவர், கடவுள், மத நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதி என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார். எப்போதும் கருப்புச் சட்டையுடன் காட்சியளிக்கிறார். வீரமணியின் தலைமையில் செயல்படும் திராவிடர் கழகம் ஏற்கனவே அவருக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. ஆனாலும் பெரியார் திராவிடர் கழகத்தோடு தம்மை இணைத்துக் கொள்ள விரும்பிய விஜி, நேராக மேட்டூர் சென்று கழகத தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்து, கழகத்துடன் இணைந்து, தமது ‘கானா’ நிகழ்ச்சியை நடத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார். அவ்வாறே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

19.5.2011 அன்று சென்னை ஜெர்மன் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி வாழ்த்துரை வழங்கினர். கழகத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர். கானா விஜி சிறிது நேரம் பாடல்கள் பாடினார். தோழர் சமர்பா - யோகராணி மற்றும் கானா பாடகர் புதூர் காளி ஆகியோர் தொடக்கத்தில் எழுச்சி இசைப் பாடல்களையும் கானா பாடலையும் பாடினர். பழம் பெரும் கானா பாடகர் புதூர் காளி நீண்டகாலமாக இத்துறையில் பரிணமித்தும், திட்டமிட்டு இருட்டடிக்கப்பட்டு வருவதை கவலையுடன் குறிப்பிட்ட ‘கானா’ விஜி, அவருக்கு ‘கானா மணி’ எனும் விருதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழியாக வழங்க ஏற்பாடு செய்திருந்தார். பலத்த கரவொலிக்கிடையே கழகத் தலைவர் கொளத்தூர் மணி அந்த விருதை வழங்கினார். தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Pin It