‘காளி சுட்டெரித்து விடுவாள்’ என்று அஞ்சாமல் பக்தர்களே காளி அம்மன் கோயிலுக்கே தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தான் நடந்துள்ளது. அங்குள்ள ஜோதிபாசு நகரில் இருந்த காளி அம்மன் கோயில் கிணற்றில் குணசேகரன் என்ற 8 வயது சிறுவன் பிணமாக மிதந்ததைக் கண்டு, கிராம மக்கள் ஆத்திரப்பட்டனர். இறந்து கிடந்த சிறுவனின் தந்தைக்கும், காளி அம்மன்கோயில் நிர்வாகி ஆறுமுகம் என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம். சிறுவனை கோயிலுக்கு நரபலி கொடுத்து, கோயில் கிணற்றில் கோயில் நிர்வாகி வீசி விட்டதாக சிறுவன் தந்தைக்கும், கிராம மக்களுக்கும் சந்தேகம். ஆத்திரமடைந்த கிராம மக்கள், கோயில் நிர்வாகி வீட்டை தாக்கியதோடு, காளி அம்மன் கோயிலுக்கும் தீ வைத்தனர். காவல்துறை, நரபலி எதுவும் நடக்கவில்லை. சிறுவன், கிணற்றில் விழுந்தது விபத்துதான் என்று கூறிய சமாதானத்தை ஊர் மக்கள் ஏற்கவில்லை. கடவுளின் பெயரால் ஒரு சிறுவன் நரபலி தரப்பட்டான் என்றவுடன், மக்கள் கோயிலையே எரிக்கத் தயாராகிவிட்டனர். கடவுள் சக்தியை நம்புவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ‘காளி’ தீயில் எரிந்து போனாள். கடந்த ஜூலை 2 ஆம் தேதி நடந்தது இந்த சம்பவம்.

Pin It