தமிழக அரசின் ஆளுநர் உரையில் பல்வேறு சமூகநலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் குறிப்பிட்டுக் கூற வேண்டியது - உயர்கல்வி தொடர்பான அறிவிப்பாகும். “அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக் கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில், அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையானால், அந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக, சாதிப்பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், வரும் கல்வி ஆண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்” என்ற அறிவிப்பு மிகவும் சிறப்பானது. வரவேற்கத்தக்கது. இதுவரை ஒரு பட்டதாரியைச்கூட உற்பத்தி செய்யாத குடும்பமே - சமூக கல்வி ரீதியான பின்தங்கியப் பிரிவுக்கு உரியவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 

தலித் சமூகத்தில் மருத்துவம், பொறியியல் போன்று உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண செலவை அரசே ஏற்பது குறித்தும், தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டிகளை இலவசமாக வழங்குவதைவிட இது ஆக்கபூர்வமான செயல்திட்டமாக இருக்கும். கிராமப் பஞ்சாயத்தில் கூரை வீடுகளே இல்லாத அளவுக்கு 21 லட்சம் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு 6 ஆண்டுகாலத்திற்குள்ளாக கான்கிரீட் வீடுகளை அரசே கட்டித் தரும் திட்டம் ஒன்றும், ஆளுநர் அறிவிப்பில் வெளிவந்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம். ஆனால், கிராமங்களில், குடிசை வீடுகள் அதிகமாக சேரிப் பகுதிகளிலேயே உள்ளன. அங்கேயே கான்கிரீட் வீடுகளைக் கட்டும்போது சேரிப் பகுதியும் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே ஊருக்குள், மாற்று இடங்கள் உள்ள பகுதிகளில், இந்த மக்களுக்கான கான்கிரீட் வீடுகளைக் கட்டினால், சேரிகள் தொடரும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் பட்டா பெற காலவரம்பை 3 ஆண்டாகக் குறைக்கும் திட்டம் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டமாகும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It