அன்றாட செய்திகளில் இடம் பெறுகிற ‘நட்சத்திரங்களில்’ ஒருவன் திருப்பதி ஏழுமலையான்! பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில் லாபங்களுக்கு இணையாக பணம் கொழிக்கச் செய்கிறான் “அவன்”.ஏழுமலையான் உண்டியலில் கணக்கில் வராத கருப்புப் பணம் விழுவது வாடிக்கையானதுதான். ஆனாலும் அண்மையில் ‘கள்ளநோட்டுகளே’ உண்டியலில் கிடந்தது கண்டறியப்பட்டது.

ஏழுமலையான் உண்டியலில் கள்ள நோட்டைப் போட்டாலும் சரி; அல்லது பிக்பாக்கெட்காரன் தொழிலுக்குப் பயன்படுத்திய ‘பிளேடைப்’ போட்டாலும் சரி; தொழிற் கொலைக்காரன் தனது வெட்டரிவாளைப் போட்டாலும் சரி; உண்டியலில் எது வீழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வான். ஏழுமலையானுக்கு தங்களைத் தடுக்கும் சக்தி இல்லை என்பது நன்றாகத் தெரிந்ததால்தான், ‘சமூக விரோதிகள்’ கூட ஏழுமலையான் உண்டியலில் காணிக்கை செலுத்த முண்டியடித்து முன் வருகிறார்கள்.

அய்.பி.எல். சூதாட்டக் கிரிக்கெட் அணியில் பணம் கட்டி ஏலம் எடுத்த ஒவ்வொருவரும் அண்மையில் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கை செலுத்தி, தங்களது அணிதான் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். எல்லா காணிக்கைகளையும் ஏழுமலையான் ஏற்றுக் கொண்டான். இதில் தொழிலதிபர் அம்பானியும், தமது அணிக்காக காணிக்கை செலுத்தி, விசேட தரிசனமும் செய்திருக்கிறார். ஏழுமலையான் கோயிலின் பார்ப்பன தலைமை அர்ச்சகர், அம்பானிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார், “பிரசாதத்தை” நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அம்பானியிடம் நேரில் போய் சமர்ப்பித்திருக்கிறார். கோயிலில் கர்ப்பகிரத்துக்கு வெளியே நின்று  ‘பிரசாதம்’ வழங்குவதுதான் மரபு. ஆனால், அம்பானி இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபர் அல்லவா? எனவே அவர் இருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு தலைமை பார்ப்பன அர்ச்சகரே,பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, காரில் பறந்திருக்கிறார். ஆக,தலைமை அர்ச்சகரின் ஆதரவு அம்பானி வாங்கியுள்ள கிரிக்கெட் அணிக்குத்தான் என்றே தெரிகிறது. அம்பானி அர்ச்சகருக்கு கவனித்த தொகையின் அளவு அவ்வளவு மட்டும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். தலைமைப் பார்ப்பன அர்ச்சகர், அவர் அம்பானியைத் தேடிப் போனாரா, அல்லது தமது வேத மந்திரத்துக்கு கட்டுப்பட்டுள்ள ஏழுமலையான்-சக்தியையும் உடம்பில் ஏற்றிக் கொண்டு போனாரா என்பது நமக்குத் தெரியாது.

ஆனால், திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக் குழு, பார்ப்பன தலைமை அர்ச்சகரின் சிண்டைப் பிடித்துக் விட்டது. (அர்ச்சகர் சட்டைப் போடுவதில்லை என்பதால், சட்டைக்கு பதிலாக, சிண்டைப் பிடித்ததாக கருத்தில் கொள்க.) கோயிலுக்குள்ளே வழங்க வேண்டிய‘பிரசாதத்தை’ ஓட்டலுக்குக் கொண்டு போனது குற்றம்; உங்களை ஏன்,பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று கோயில் நிர்வாகக் குழு‘நோட்டீஸ்’ விடுத்துள்ளதாம்.                                                     இதற்கெல்லாம் ‘அவர்கள்’கவலைப்படுவார்களா, என்ன? “அம்பானி வேண்டுமா? ஏழுமலையான் வேண்டுமா?” என்று கேட்டால், அவாள்கள், அம்பானியின் பக்கம் நிற்பார்களே தவிர, ‘ஆண்டவன்’ பக்கம் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டார்கள். ஆண்டவன் வருமானத்தைவிட, அம்பானி தரும் பணம் பல மடங்கு அதிகமாக இருக்குமே!

ஏழுமலையானுக்கு வைரத்தால், தங்கத்தால் கால் செருப்புகூட செய்துப் போட்டுப் பார்த்துவிட்டார்கள். இனி அவனது ‘அங்கத்தில்’தங்கத்தையும், வைரத்தையும் ஏற்றுவதற்கு இடமில்லை என்பதால்,கர்ப்பகிரகத்தையே தங்கமுலாம் பூச நிர்வாகம் முடிவு செய்தது. வறுமைக்கோட்டுக்குக் கீழே பகுதிப் பேர் வாழும் இந்தியத் திருநாட்டின் வறுமையை ஒழித்து, மக்களை வளமாக்க வேண்டுமானால் இப்படியெல்லாம் தங்கத்தால் இழைக்க வேண்டும்! ஏழைமலையானுக்கு ‘கக்கூஸ்’ இருந்தால்கூட அதையும் தங்கத்தால் இழைக்க வேண்டும் என்று பார்ப்பனர்களும் ஆன்மீகக் கொழுந்துகளும் கூறுவார்கள்.

‘நைவேத்தியம்’ என்ற பெயரில் ஆண்டவனுக்கு உணவுப் பொருளைப் படைக்கும்போது கழிவறை மட்டும் ஏன் கட்டுவதில்லை என்பதுதான் நமக்கும் புரியாத கேள்வி? நல்லவேளை! ஆகமங்கள் கழிவறை கட்டுவது பற்றி ஏதும் கூறாமலே விட்டுவிட்டன! அப்படி கூறியிருந்தால் ஏழுமலையான் காலையிலும் மாலையிலும் கழிப்பறைப் போவதாகக் கூறி, அங்கும் ஒரு கர்ப்பகிரகம் கட்டி, “மணம் கமழும் பிரசாதங்களை” தயாரித்து அதற்கும் டிக்கட் போட்டு,கட்டணம் வாங்கி விடுவார்கள். ‘வயிற்றுக் கோளாறுக்காரர்கள்’அங்கேயும் போய் கியூவில் நின்று, சிறப்பு தரிசனத்துக்குக் காத்திருப்பார்கள். இது ‘புண்ணியபூமி’யல்லவா?

இதையெல்லாம் நாம் எழுதினால், ‘கடவுளை கிண்டல் செய்கிறான் பார், குறும்புக்காரன்’ என்று, சண்டைக்கு வந்துவிடுவார்கள். நமக்கு ஏன், இந்த வம்பு?

ஆனால், கோயில் நிர்வாகம் கருவறைக்குள் தங்க முலாம் பூசுவதே,ஆகமத்துக்கு விரோதமாம்! பக்தர் ஒருவர், ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்குத் தொடர, ஆந்திர உயர்நீதிமன்றமும், தங்கமுலாம் பூசும் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. “தங்க முலாம் பூசுவது ஆந்திர மாநில அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது; ஆகமத்துக்கு எதிரானது; அர்ச்சகர்களைக் கலந்து ஆலோசிக்காமலே இத்திட்டத்தைத் தொடங்கியது குற்றம். எல்லாவற்றையும்விட 1958 ஆம் ஆண்டின் தொல் பொருள் பாதுகாப்புச் சட்டத்துக்கே எதிரானது” என்று வழக்கு தொடர்ந்த பக்தர் கூறுகிறார்.

ஏழுமலையான் கருவறை தொல்பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் என்றால், பிறகு ஏழுமலையான் இருக்க வேண்டிய இடம் தொல்பொருள் பாதுகாப்பகமே தவிர கோயில் அல்லவே என்று நாம் கேட்டால்,  பக்தர்கள்,  பார்ப்பனர்களுக்கு மூக்கு மேல் கோபம் பொத்துக் கொண்டு வரும்!

தங்க முலாம் பூசுவதற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள்கூட,கோயில் நிர்வாகம் வழிபாட்டு முறைகளில் எல்லை மீறி தலையிடுவதாக புலம்பியிருக்கிறார்கள்! கடவுளுக்கு ஒவ்வொரு நாளும் மஞ்சள் நீராட்டை ஏன் நடத்திக் கொண்டிருக்க வேண்டும்?இது வீண் செலவு தானே? என்று கோயில் சிலைக்கே மஞ்சள் வண்ணத்தை எங்கோ ஒரு கோயிலில் அடித்துவிட்டார்களாம். இதையும் நீதிபதிகளே சுட்டிக்காட்டி, கவலையோடு கசிந்துருகியிருக்கிறார்கள். நியாயம் தான்! கோயில் நடைமுறைகளில் நீதிமன்றங்கள் வழியாக தங்களைப் போன்ற நீதிபதிகள் தலையிடலாமே தவிர, கோயில் நிர்வாகம் தலையிடுவது தவறு தானே?

ஆக, ஏழுமலையான் என்றாலும், எட்டுமலையான் என்றாலும், சைபர் மலையான் என்றாலும், ‘ஆண்டவன்’ என்று வந்துவிட்டால், அதில் அர்ச்சகப் பார்ப்பான், ஆகமம் தவிர வேறு எவரும் தலையிடவே கூடாது என்று தான் பார்ப் பனர்களும், பக்தர்களும் அடித்துக் கூறுகிறார்கள். நீதிமன்றமும் அதையே வழி மொழிந்தது. சுப்பிரமணியசாமியும்கூட இந்தக் கட்சி தான். அவர்கூட திருப்பதி தங்க முலாம் பூச்சுக்கு எதிராக, நீதிமன்றம் போகப் போவதாகக் கூறுகிறார். காஞ்சிபுரம் தேவநாதன்கூட, இதில் சுப்ரமணியசாமியின் கட்சிதான்! கருவறையில் ஆகமும், அர்ச்சகரும் தவிர வேறு எந்த சக்திக்கும் தலையிடும் உரிமை இல்லை என்கிற போது கருவறைக்குள் ‘கிருஷ்ணன் விடையாட்டை’ நடத்திப் பார்த்த தேவ நாதனைக் கைது செய்வது, ஆண்டவனுக்கே, விரோதமான அரசின் தலையீடு தானே? சுப்ர மணியசாமி, ‘தங்கமுலாம்’ வழக்கோடு தேவநாதனுக்கு ஆதரவாகவும் ஒரு வழக்கை தொடரலாம் என்பது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம். இதைப் போன்ற நியாயமான உரிமைகளுக்கெல்லாம் துணிவோடு போராடக் கூடிய மான ஈனமற்ற ஒரு மனித பிறவி சு.சாமியை விட்டால் வேறு எவன் கிடைப்பான்? நீங்களே தான் சொல்லுங்களேன்!


Pin It