(1928 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டிலிருந்து சில வரலாற்றுத் தகவல்கள்) 

1929 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் சைவர்கள் மாநாடு ஒன்று நடந்துள்ளது. இது சுயமரியாதை சைவர்கள் மாநாடு. திருநெல்வேலியில் கூடி சுயமரியாதை இயக்கத்துக்கு எதிராக களமிறங்க திட்டங்களைத் தீட்டிய ‘பார்ப்பனிய’ சைவர்களுக்கு எதிராக திரண்ட மாநாடு. இந்த மாநாடு பற்றி ‘ரிவோல்ட்’ (5.6.1929) விரிவான செய்திகளைப் பதிவு செய்தது. மாநாட்டின் தலைவர் ‘குமரன்’ ஆசிரியர் முருகப்பா. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் தண்டபாணி பிள்ளை. நகைச்சுவை ததும்பிய அவரது உரையில், சைவத்தின் நோக்கம் வரலாறுகளை எடுத்துக் காட்டியதோடு, மனித நேயத்துக்கு எதிராக, ‘புராணீகர்களாக’ மாறிப் போய் நிற்கும் சைவர்களை விமர்சித்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 

சாதி, மத அடிப்படையில் பாகுபாடுகளை எதிர்ப்பவர்கள் சுயமரியாதை சைவக் கழகத்தில் உறுப்பினராக வேண்டும். நெல்லை, கடலூர், சைவ மாநாடுகளில் குறுகிய புத்திக் காரர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், உண்மையான சைவத்தைக் குறிப்பதல்ல. உண்மையான சைவர்கள் விபூதியையும், உத்திராட்சக் கொட்டையையும் அணிந்து படம் காட்டத் தேவையில்லை. கோயிலில் நுழையும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, ஈரோட்டில் அனைத்து சாதி யினருக்கும் கோயிலில் நுழையும் உரிமை உண்டு என முடிவு செய்த ஈரோடு தேவஸ்தானக் குழுவை பாராட்டியது. கோயில் கருவறைக்குள் நுழைந்த “தீண்டப்படாத” சமூகத்தைச் சார்ந்த தோழர்கள் ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோர் துணிவையும் பாராட்டி, தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அடுத்த சுயமரியாதை சைவர்கள் மாநாட்டை திருச்சிராப் பள்ளியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக சுயமரியாதை கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சைவர்களின் வரவேற்புக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. 

‘பி.சி.பி.’ எனும் புனைப் பெயரில் (வழக்கறிஞர் பி.சிதம்பரம்பிள்ளை எழுதியதாக இருக்கலாம்) யார் சைவர்கள்? எது சைவம்? என்ற தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று ‘ரிவோல்ட்டில்’ பதிவாகியிருக் கிறது. சைவம் என்பதற்கும், சைவர் என்பதற்கும் வரையறை வகுப்பதே சிக்கலாகிவிட்டது. சில நேரங்களில் இது சாதி அல்லது உட்சாதிக் குழுவை சுட்டுவதாக உள்ளது. சில நேரங்களில் மதத்தை சுட்டுவதாக உள்ளது. சில நேரங்களில் தத்துவத்தை சுட்டுவதாக உள்ளது. சில வேளைகளில் மூன்றையுமே குறிப்பதாக உள்ளது. இதுவே ஒருவர் வெள்ளாளரா அல்லது வெள்ளாளர் அல்லாதவரா என்பதை சுட்டவும், சைவ உணவுப் பழக்கம் உள்ளவரா அல்லது அசைவப் பழக்கம் உள்ளவரா என்பதை சுட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் பார்ப்பனரை அடையாளம் காட்டுவதற்கு கூட சைவர் என்ற சொல் பயன்பட்டிருக்கிறது என்ற முன்னுரையுடன் துவங்கும் அந்த ஆய்வுக் கட்டுரை, ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைவம் தொடங்கிய காலத்தில் அதற்கான தத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டிய காலச் சூழல் இருந்தது. அப்படி சிந்தித்தவர் களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சைவம் பெரும் பான்மையினரின் மதமாகும் போது, அவர்களுக்கு தத்து வங்கள் தெரியாது. மற்றவர்கள் எதை செய்கிறார்களோ அதை கண்மூடித்தனமாகப் பின்பற்றத்தான் தெரியும். சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே சைவம், சைவ சித்தாந்தத்திலிருந்து விலகி, கண்மூடித்தனமான சடங்குகளின் மதமாகிவிட்டது. சைவப் பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் ஒன்று சேர்ந்து சமணத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டினர். 

சமணத்தை ஒழிப்பதற்கு வெள்ளாளர்களுடன் கூட்டுச் சேர்ந்த அதே சைவ பார்ப்பனர்கள், பிறகு, சைவத்தை கைகழுவி விட்டு, சங்கராச்சாரியை நோக்கி ஓடி விட்டார்கள். சங்கராச்சாரி தத்துவம் - பார்ப்பனர்களுக்கு மிகவும் உவப்பாக இருந்தது.   புத்தர் கோட்பாடுகளை மூர்க்கமாக ஒழிப்பதுதான், சங்கராச்சாரி தத்துவம். சங்கராச்சாரி பின்னால் போனால் சைவ மதத்தைப்போல் கடுமையான விதிகளைப் பின்பற்றத் தேவை இல்லை. பார்ப்பனர்கள் தங்கள் வாய்ப்பு வசதிக்கேற்ப வாழ்ந்து கொள்ள முடியும். கடுமையாக பின்பற்ற வேண்டிய சைவக் கோட்பாடுகளை வெள்ளாளர்களிடம் விட்டுவிட்டு, வசதியான பொருளியல், அரசியல் வாழ்க்கையை பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். புத்த, சமண கருத்துக்களைப் பரப்ப, நிறுவனங்கள் அமைக்கப்பட்டதைப் போல், சைவர்களும் சைவ மடங்களை உருவாக்கி, ‘ஆதினங்கள்’ என்ற சைவச் சாமியார்களை நியமித்தனர். அந்த சைவ மடங்கள் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து, அவர்களின் சட்ட சமூகப் பிடிக்குள் சிக்குண்டன. ஆறுமுக நாவலர் போன்ற சைவர்கள் இதன் காரணமாகவே சைவ மடங்களைக் கடுமையாக சாடினார்கள். சைவ சித்தாந்தங்கள் மறைந்து போய், சைவம், பார்ப்பன மடமாகி சீரழிந்து போனது. 

சமணத்தையும், புத்தத்தையும் எதிர்க்க பார்ப்பன-வேளாளர் கூட்டணி கை கோர்த்து நின்ற காலத்தில் அந்தக் கூட்டணியால் தமிழ் இலக்கியமும் பாதிப்புக்குள்ளானது. பார்ப்பனர்கள் தமிழைப் பின்னுக்குத் தள்ளி, சமஸ் கிருதத்தை முதன்மைப்படுத்தினார்கள். சமஸ்கிருதத் துக்கு தமிழை அடிமைப்படுத்த முயன்றார்கள். கால்டுவெல் என்ற பிரிட்டிஷ் மொழி ஆய்வாளர் திராவிட மொழி குடும்பத்தை ஆராய்ந்து, தமிழை சமஸ்கிருதத்திலிருந்து பிரித்து, தமிழின் சிறப்பை நிறுவிய காலம் வரை தமிழை பார்ப்பனர்கள் சமஸ்கிருத்தின் அடிமையாகவே மாற்றி இருந்தார்கள். பார்ப்பனியத்துக்கு அடிமைப்பட்டு பார்ப்பனியப் பெருமை பேசி வந்தது சைவம். திராவிடப் பண்பாட்டை இழிவுபடுத்தியது. பார்ப்பன வெள்ளாள கூட்டணி, சமண - புத்தத்தை அழித்த கொடுமைகளை தமிழ் புராணக் கதைகளாக்கினர்.

அந்தப் புராணங்களில் கற்பனைகளும் நம்ப முடியாத புனைவுகளும் அடங்கி யிருந்தன என்பது உண்மை தான். புராணங்கள் வரலாறுகள் அல்ல என்பதும் உண்மைதான். ஆனால், சைவ பார்ப்பன ரத்தவெறியின் சுவடுகளை அதில் பார்க்க முடியும். அதன் காரணமாகவே இந்தக் கேவலமான புராணக் கதைகளைப் புனிதமாகப் பரப்பினார்கள்.  சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதே தமிழ் என்றார்கள். சமஸ்கிருதத்தில்தான் தமிழ் சைவத்தின் கோட்பாடுகள் அடங்கியுள்ளது என்றும் பரப்புரை செய்தார்கள். சைவ சித்தாந்தத்தை பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்தது. சைவக் கோயில்கள் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. 

ஸ்மார்த்த பார்ப்பனர்களின் குருவான சங்கராச்சாரி, நாடு முழுதும் சுற்றி ஸ்மார்த்தப் பார்ப்பனியத்தை அப்பாவி மக்களிடம் பரப்பினார். பார்ப்பனர்கள், நீதிபதிகளாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர்களாகவும் இருந்து கொண்டு சங்கராச்சாரிக்கு துணையாக நின்றார்கள். அடை யாளத்தை இழந்த வெள்ளாளர்கள் ஸ்மார்த்த பார்ப்பனர் கள் பக்கம் முழுமையாக சாய்ந்து விட்டார்கள். வசதி படைத்த சைவ பார்ப்பனர்கள் பார்ப்பனர்களுக்கு “பிராமண போஜனம்” (சாப்பாடு போடுவது) நடத்தி னார்கள். 

திருவாங்கூர் சமஸ்தானத்தில் தேர்த் திருவிழாவின் போது வெளியே தேர்வடம் பிடிக்க ஒரு கூட்டம் நிற்கும். அதே நேரத்தில் கோயிலுக்குள்ளே ‘தடபுடலாக’ பார்ப்பானுக்கு மட்டும் விருந்துகள் நடக்கும். தேர்வடம் பிடிக்க வராத ‘சூத்திரர்’களுக்கு அரசு அபராதம் போடும். “கோயிலுக்கு உள்ளே ‘பிராமணர்கள்’ எவராவது சாப்பிட மறுத்தால், அதற்கு கோயில் அதிகாரிகள் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்” இப்படி சைவத்தை பார்ப்பனியம் விழுங்கிய வரலாற்றை விவரிக்கிறது, இந்த ஆய்வுக் கட்டுரை. 

வடநாட்டில் பார்ப்பனியம் வன்முறையைக் கையில் எடுத்ததன் தொடர் நிகழ்வாகவே தென்னகத்திலும் பார்ப்பனியம் மத மோதல்களை உருவாக்கியது. அதற்கு முன்பு தென்னத்தில் பல்வேறு மதச் சிந்தனைகளைப் போற்றி, அவரவர் கருத்துகளைப் பரப்பவும், ஒரே இடத்தில் கூடி விவாதிக்கவும் கூடிய சுமூகமான சமூகச் சூழலே நிலவியது. பல்வேறு மதச் சிந்தனையாளர்கள் ஒரே அரங்கில் கூடி விவாதித்ததை, அய்ம்பெரும் காப்பியங் களில் ஒன்றான மணிமேகலை கூறுகிறது. திருநாவுக்கரசர் சமண மதத்தைத் தழுவிய காலத்தில், அவரது சகோதரியே சைவ மதத்தைத் தழுவி இருந்தார். வடநாட்டில் பார்ப்பனர்கள் வன்றை அழித்தொழிப்பு வழியாக தங்களை மீட்ருருவாக்கம் செய்த காலத்தில்தான் தென்னகத்தின் சுமூகமான நிலை சீர்குலையத் தொடங்கியது. 

வடநாட்டிலிருந்துதான் தென்னகத்துக்கு சாதியமைப்பு இறக்குமதியானது. வடநாட்டு பார்ப்பனர்கள் சமூகத்தில், சடங்குகளைப் புகுத்தி, அதை வாழ்க்கை முறையாக்கினர். வடநாட்டில் பின்பற்றிய வன்முறைகள் அப்படியே தென்னகத்துக்கும் பரவத் தொடங்கின. தென்னாட்டு சைவம் வடநாட்டு பார்ப்பன வன்முறைகளைக் கையில் எடுத்தது. அதற்காக சமஸ்கிருதமும் தமிழும் கலந்த இலக்கியங்கள் தேவைப்பட்டன. தென்னகத்தில் தமிழ் அந்தணர்கள், அல்லது ஆதி சைவர்கள் என்று கூறப் பட்டவர்கள், பார்ப்பனர்களாக மாறத் தொடங்கினர். வட நாட்டு ஆரிய பார்ப்பனர்களைப்போல தங்களைக் கருதிக் கொண்டு செயல்படத் தொடங்கினர்.

சிதம்பரம் தீட்சப் பார்ப்பனர்கள் மற்றும், திருச்செந்தூர் பார்ப்பனர்களின் குடுமி, பூணூலை நீக்கி விட்டுப் பார்த்தால், அவர்கள் உருவத்தில் நம்மைப்போல் திராவிடர்களாகவே இருப்பதைப் பார்க்க முடியும். இப்படி தமிழ் அந்தணர்கள் பார்ப்பனர்களானவுடன், வெள்ளாளர்களை சாதிய அமைப்புக்குள் ‘சூத்திரர்’களாக்கி, தங்களுக்கு கீழானவர் களாக்கினர். தங்களை ‘சற்சூத்திரர்’கள் என்றும், (சிறந்த சூத்திரர்கள்) வெள்ளாளர்கள் பெருமையுடன் கூறிக் கொண்டனர். இவர்களே வைசியர், சத்திரியர்களாக இருக்கவும், பார்ப்பனர்கள் அனுமதித்தனர். அக் கால கட்டத்தில் தான் சாதியை விட்டு நீக்கப்பட்டவர்கள் என்ற பிரிவும் தென்னகத்தில் உருவானது என்று விரிவான வரலாற்றுத் தகவல்களை முன் வைக்கிறது - அக்கட்டுரை. 

- ‘ரிவோல்ட்’ 18, 25, ஆகஸ்ட் 1, 15, 22, செப்டம்பர், 1929 இதழ்கள். - ‘இரா’ தொடரும்

Pin It