ஆழமான பெரியாரியல் சிந்தனையாளரும் பெரியாரியல் தொண்டுக்கு அடக்கமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்தவரும், அரிய படைப்புகளை வழங்கியவருமான, பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் முடிவெய்தினார் என்ற துயரச் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம். 

கடந்த 22.10.2010 அன்று மாலை நெஞ்சு வலி காரணமாக அவர், பெரியார் திடலிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது முடிவெய்தினார். அவருக்கு வயது 75. 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர். அன்று இரவே அவரது உடல் கோவையிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வடகோவை யிலுள்ள அவரது கல்வியகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. கழக சார்பில் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், செயற்குழு உறுப்பினர்ஆறுச்சாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் இறுதி வணக்கம் செலுத்தினர். தி.மு.க., அ.தி.மு.க., பொதுவுடைமைக் கட்சிகளைச் சார்ந்த முன்னணித் தலைவர்கள், தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். 

வடகோவை கல்வியகத்தில் 23 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடந்த இரங்கல் கூட்டத்துக்கு திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிறைநுதல்செல்வி தலைமை தாங்கினார். கழக சார்பில் பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன் மற்றும் அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்கள் இரங்கல் உரையாற்றினர். எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி மாலை 4 மணியளவில் கோவை சரவணப்பட்டி மின் சுடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டது. கு.வெ.கி. ஆசானின் மறைவு பெரியாரியலுக்கு பேரிழப்பாகும். தன் முனைப்பு இல்லாத சிந்தனையின் நிறை குடமாக அவர் திகழ்ந்தார். 

கருத்தாழமிக்க அவரது படைப்புகளான - மொழி உரிமை, வருணசாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார் - பாவேந்தர் - பெரியார், குமரன் ஆசான், சாகுமகராஜ், ஈழத் தமிழர் உரிமைப்போர் வரலாறு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் ஆகிய நூல்களின் வழியாக, அவர் என்றும் வாழ்வார். உலகப் புகழ் பெற்ற கடவுள் மறுப்பு நூலான ரிச்சர்ட் டாக்கின்சின் ‘The God Delusion’ நூலை ‘கடவுள்; ஒரு பொய் நம்பிக்கை’ எனும் தலைப்பில் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்த பெருமையும் அவருக்கு உண்டு.

அவரது துணைவியார் சாரதா மணி, மகள் உமா, மகன்கள் செந்தில், குமார் ஆகியோருக்கு பெரியார் திராவிடர் கழக சார்பில் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.       

Pin It