2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான சர்ச்சைகளில் டாட்டா மற்றும் அம்பானி நிறுவனத்துக்கான தரகராக செயல்பட்டு வரும் நீரா ராடியாவின் பின்னணியில் பன்னாட்டு இந்துத்துவ சக்திகள் உள்ளதை விளக்குகிறது இக்கட்டுரை.

 நாடாளுமன்றத்திலும், வெளியிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பெரும் குரல் எழுப்புகின்றது, பா.ஜ.க. ஆனால், நன்றாகக் கவனித்துப் பார்த்தால் நீராராடியா டேப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏன்?

 பதில் அந்த டேப்புகளிலேயே இருக்கின்றது. அவருக்கு முதன்முதலில் பழக்கமான இந்திய அரசியல்வாதி பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் தான். சற்று பின்னோக்கி போவோம்.

 கென்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த பஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்தவர் நீராடியா. அவரது தந்தை சர்மா (பார்ப்பனர்-ஆர்) விமான உபகரணங்கள் விற்பனையாளர். 1970களில் அவர் லண்டனுக்குக் குடிபெயர்கின்றார். லண்டனில் இளங்கலை பட்டம் பெற்ற ராடியா அங்கு நிதி வர்த்தகம் செய்து வந்த ஜனக் ராடியா என்கிற குஜராத்தியை மணம் முடிக்கின்றார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்கைள். பின்னர் 1995 இல் விவகாரத்து ஆகின்றது. அப்போதுதான் அவர் இந்தியாவிற்குக் குடி பெயர்கின்றார்.

 இந்தியாவில் பல்வேறு விதமான சேவை நிறுவனங் களில் பிரதிநிதியாக, அவற்றின் மக்கள் தொடர்பைக் கவனித்துக் கொள்பவராகச் செயல்பட்டார். சகாரா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், யுகேஏர், கேஎல்எம் எனப்படும் கொரிய விமான நிறுவனம் ஆகியவை. ஏர் பஸ் என்கிற விமான தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆலோசகராக ஆகின்றார்.

 பின்னர் இரண்டு முறை சொந்தமாக விமான சேவை நிறுவனம் துவங்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். 2000-வது ஆண்டு முதலில் துவங்க நினைத்த நிறுவனத்தின் பெயர் கிரவுன் எக்ஸ்பிரஸ். முதலீடு 100 கோடி. (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனம்) மீண்டும் 2005 ஆம் ஆண்டு மேஜிக் ஏர் என்கிற விமான சேவை நிறுவனத்தைத் துவங்க முயற்சித்தார். அதுவும் தோல்வியடைந்தது. இரண்டுக்குமே முக்கியமான காரணம் அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டு இல்லை என்பதும், அந்த வகையில் அவர் பிரிட்டன் குடிமகள் என்பதும் தான். உள்நாட்டு விமான சேவையில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்பது இன்று வரையிலும் அரசின் கொள்கையாக இருந்து வருகின்றது. இந்தக் கொள்கை அப்படியே மாறாமல் இருப்பதற்கு இந்திய விமான சேவை நிறுவன முதலாளிகள் நரேஷ் கோயல், விஜய் மல்லையா போன்றோர் காரணம். அதனால் தான் டாடா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாகத் துவக்க விரும்பிய விமான நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

 இதற்கிடையே 2001 இல் வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்கிற ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். நோயசிஸ் விக்டோம், நியோகாம் ஆகிய நிறுவனங் களையும் பின்னர் துவக்குகின்றார். டாடா குழுமத்தின் 90 நிறுவனங்களுக்கும் மக்கள் தொடர்பு சேவைகள் வழங்கும் உரிமையைப் பெறுகின்றார். பின்னர் முகேஷ் அம்பானியின் ரிலையன்சும் அவரது வாடிக்கையாளர் பட்டியலில் சேருகின்றது.

 அவர் 1998-99களில் விமான சேவை நிறுவனங்களின் ஆலோசகர் என்கிற வகையில் அவரக்கு அப்போதைய விமான போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் அனந்தகுமாருடன் (இவரும் ஒரு பார்ப்பனர் - ஆர்) பரிச்சயம் ஏற்படுகின்றது. நெருங்கிய நண்பராகின்றார். இதைப் பயன்படுத்தி அவர் அதிகார வட்டாரங்களில் செல்வாக்கு மிக்கவராக தன்னை வளர்த்துக் கொள் கின்றார். அவர் மூலம் கர்நாடகாவின் செல்வாக்கு மிக்கவராக தன்னை வளர்த்துக் கொள்கின்றார். அவர் மூலம் கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க மடாதிபதிகளில் ஒருவரான பெஜாவர் மடாதிபதியுடன் அறிமுகம் ஏற்படு கின்றது. 2003 ஆம் ஆண்டு ‘தவறான கட்சியில் இருக்கும் நல்லவர்’ வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் பெஜாவர் மடாதிபதியைச் சந்திக்கிறார். அப்போது வாஜ்பாயுடன் நீராராடியாவும் இருக்கும் புகைப்படம் ஒன்றை அப்போதே ‘லங்கே;’ பத்திரிகா’ எனப்படும் கன்னட இதழ் வெளியிட்டது. மேற்குறிப்பிட்ட விவரங்களுடன் அதை ‘அவுட்லுக்’ இதழ் (டிசம்பர் 6, 2010) மறுபிரசுரம் செய்துள்ளது.

 வாஜ்பாயின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா வும் ராடியாவின் நண்பர். முகேஷ் அம்பானியின் சார்பாக அவர் ராடியாவுடன் பேசும் தொலைபேசி உரையாடலும் வருமானவரித் துறையின் அமலாக்கப் பிரிவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் அமைச்சராகலாம், கூடாது என்பது குறித்த இந்த உரையாடலின் ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு தருகின்றோம்.

 ரஞ்சன்: ஆக, முகேஷ் மகிழ்ச்சியாக இருக்கின்றார்?

ராடியா : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்.

ரஞ்சன் : (சிரிக்கின்றார்) அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

ராடியா : என்ன?

ரஞ்சன் : அவர் தன்னுடைய வழக்கமான பாணியில் சொன்னார்... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றார்... என்னை விடுங்கள்... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன்.

ராடியா : ம்... ம்....

ரஞ்சன் : ஓகே என்றார்... எப்போதாவது கொஞ்சம் உணர்ச்சியை வெளிப்படுத்துங்கள் என்றேன்... உங்கள் வேலை எல்லாம் செய்தாகிவிட்டது என்றேன்....

ராடியா : ம்... ம்ம்....

ரஞ்சன் : ..... ரஞ்சன் நீங்கள் சொன்னது சரி. காங்கிரஸ் இப்போது நமது கடை என்று முகேஷ் கூறினார்.

ராடியா : (சிரிக்கின்றார்)

(ஆதாரம்: ‘ஓபன்’ ஆங்கில வார இதழ், நவம்பர் 20, 2010)

 அம்பானி சகோதரர்களுக்கு இடையில் இயற்கை எரிவாயு உரிமம் குறித்து நடந்த சண்டை குறித்து நாடாளுமன்றம் விவாதித்ததும், அந்த விவாதத்தில் பா.ஜ.க. சார்பாக முதலில் அருண்ஷோரி பேசுவதாக இருந்ததும், அவர் பேசினால் அனில் அம்பானிக்குச் சாதகமாகப் பேசி விடுவார் என்பதனால், முகேஷ் அம்பானியின் ஆலோச கராக இருந்த ராடியா பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் என்.கே.சிங் மூலமாக அப்போது பா.ஜ.க. தலைவராக இருந்த வெங்கய்ய நாயுடு விவாதத்தைத் துவக்குவதாக மாற்றியது குறித்து ஷோரி வெளிப்படையாகப் புலம்புவதும் நாடறிந்த கதை.

 இத்தோடு முடியவில்லை, ராடியாவின் பா.ஜ.க. தொடர்பு. எந்த பா.ஜ.க. தலைவரை பீகாரில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று ஐக்கிய ஜனாதளம் சொன்னதோ அந்த நரேந்திர மோடிக்கும் வருக்கும் கூட தொடர்பு இருக்கின்றது.

“டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழின் அகமதாபாத் பதிப்பு சிறப்பாசிரியராக அந்நாளில் இருந்த கிங்சுக் நாக் தன்னுடைய வலைதளத்தில் அந்நாட்கள் குறித்த நம்முடைய நினைவுகளைக் கிளறிவிடுகின்றார். மோடி விஷயத்தில் இணக்கமாக நடந்து கொள்ளுமாறு ராடியா தன்னுடைய வலை தளத்தில் அந்நாட்கள் குறித்த நம்முடைய நினைவுகளைக் கிளறிவிடுகின்றார். மோடி விஷயத்தில் இணக்கமாக நடந்து கொள்ளுமாறு ராடியா தன்னிடம் இரண்டு முறை கேட்டுக் கொண்டதாக நாக் எழுதுகின்றார். உங்களைப் போன்ற ஆட்கள் நரேந்திர மோடிக்கு வாழ்க்கையை நரகமாக்கிவிட்டீர்கள். நீங்கள் ஏன் அவரையும், அவரது கொள்கைகளையும் புரிந்து கொள்கிற வர்களாக இருக்கக் கூடாது? என்று ராடியா கேட்டதாக  தன்னுடைய கட்டுரையில் மேற்கோள் காட்டுகின்றார். மோடி உங்களது வாடிக்கையாளராக ஆகிவிட்டாரா என்று நாக் அவரிடம் கேட்டபோது, குஜராத்தின் மருமகள் என்கிற வகையில் மட்டுமே அம்மாநிலத்தின் விஷயத்தில் தனக்கு பொறுப்பு இருப்பதாக ராடியா கூறியிருக்கின்றார்.

“வேறு ஒருவர் மூலமாக ராடியா மோடிக்கு அறிமுப் படுத்தப்பட்டது போல் தெரிகின்றது. வெகு விரைவிலேயே குஜராத் முதலமைச்சருடன் தன்னுடைய நட்பைப் பலப்படுத்திக் கொண்டார் ராடியா. டாடா மோட்டார்ஸ் தன்னுடைய நானோ தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியபோது அது பலனளித்திருக்கும். பஞ்சாப், மகாராஷ்டிரா,  ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், அரியானா ஆகிய ஐந்து மாநிலங்கள் அந்த தொழிற்சாலைக்காக போட்டி யிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று குஜராத்திற்கு  அந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா வின் ஐதராபாத் பதிப்பின் சிறப்பாசிரியராக இருக்கும் நாக் ‘டாடாவிற்கு நிலம் கிடைத்த வேகம்... மோடிக்கு முன்னரேயே தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கின்றது. புத்திசாலி என்கிற வகையில் அவர் நிலத்தைத் தயாராக வைத்திருக்கக் கூடும்’ என்று ‘அவுட் லுக்’கிடம் கூறினார்.” (டிசம்பர் 6, 2010)

இவ்வளவு பழக்கம் இருந்தும் ‘உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கின்றேதே” என்று கூட பா.ஜ.க. ராடியா பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறதே, அது கவனிக்கப்பட வேண்டியது.

நன்றி : ‘தீக்கதிர்,11.12.2010

Pin It