தோழர் தஞ்சை பசு. கவுதமன், ‘குடிஅரசு’ தொகுப்பு 3 ஆம் கட்டப் பணியில் நடந்த நிகழ்வுகளை முழுமையாகத் தொகுத்து ‘ஊன்றிப் படித்து உண்மையை உணர’ எனற ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறார்.

பெரியாரின் குடிஅரசு - எழுத்துப் பேச்சுகளை நீண்டகாலமாக வெளியிடாமல் கிடப்பில் போட்டு வந்த கி.வீரமணி, பெரியார் திராவிடர் கழகம் வெளியிடத் தொடங்கிய பிறகு,பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த தோடு, தமது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வழியாக வெளியிடத் தொடங்கினார். அப்போதே பெரியார் திராவிடர் கழகம் வெற்றி பெற்றுவிட்டது. பெரியார் திராவிடர் கழக முயற்சியில் தாமாக முன் வந்து பங்கேற்க விரும்பிய தஞ்சை இரத்தினகிரி தம்மிடமிருந்த குடிஅரசு இதழ்களைத் தர முன் வந்து பெரும் தொகையைப் பணமாகக் கேட்க ரூ.5 லட்சம் தர கழகம் முன் வந்த நிலையில் ரூ.3 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு குடிஅரசு இதழில் தொகுத்தவற்றை தராமல் இழுத்தடித்தார். பிறகு வீரமணியிடம்போய் “கைகுலுக்கிக்” கொண்டு, அவரது குடிஅரசு முதல் தொகுப்பு வெளியீட்டுக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றார். ‘குடிஅரசு’ மூன்றாம் கட்டப் பணிகள் எவ்விதம் நடந்தன என்பதை விளக்கி இரத்தினகிரி, அத்தொகுப்பில் உண்மைக்கு மாறான தகவல்களை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ‘குடிஅரசு மூன்றாம் கட்டப் பணி’யில் நடந்தவைகளை விரிவாக விளக்குகிறது, பசு. கவுதமன் அவர்களின் இந்த நூல். 2006 முதல் 2010 வரை குடிஅரசு பெரியார் எழுத்துகளைத் தொகுப்பதற்கு ரூ. 8 லட்சத்து 64 ஆயிரத்து 800 ரூபாயை தாம் செலவிட்டதாகக் கூறி, இரத்தினகிரியே கைப்பட எழுதிய கடிதமும், இரத்தினகிரி ‘ஒத்துழையாமையால்’ பெரியார் திராவிடர் கழகமே குடிஅரசு இதழ்களைத் திரட்டி வெளியிட திட்டமிட்டு, அதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்தபோது இரத்தினகிரி, அதைப் பாராட்டி வரவேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எழுதிய கடிதமும், இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

இரத்தினகிரி, தம்மிடம் உள்ளதாகக் கூறிய ‘குடிஅரசு’ இதழ்த் தொகுப்புகள் கூட அவரால் மட்டும் திரட்டப்பட்டதில்லை. மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி அமைப்பு செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து திரட்டியதேயாகும். இந்த தகவலை தோழர் வே. ஆனைமுத்து அவர்களே, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - இரண்டாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

“கூட்டாக முனைந்து திரட்டியவை படி எடுக்கப்பட்டது. இவ்வாறு படி எடுக்கப்பட்டவை பெரியார் நாகம்மை அறக்கட்டளையினர், இரா. இரத்தினகிரி, கோ. இளவழகன் ஆகிய மூவரிடையே பங்காகி விட்டன” என்று தோழர் வே. ஆனைமுத்து உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். ஆக, தோழர் ஆனைமுத்துவுடன் இணைந்து திரட்டிய குடிஅரசு இதழ்களை தன்னால் திரட்டப்பட்டதாகக் கூறி பெரும் தொகை கேட்ட தஞ்சை இரத்தினகிரி, கழகத்திடமிருந்து சுமார் 3 லட்சம் தொகையைப் பெற்றுக் கொண்டு, கூடுதல் பேரம் பேசி, பேரம் வெற்றி பெறாத நிலையில் கி.வீரமணியிடம் போய் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் தஞ்சையில் பெரியார் திராவிடர் கழகம் சாhபில் குடிஅரசு தொகுப்புகளை வெளியிடும் முயற்சிகளுக்கு உதவ முன்வந்த ரத்தினகிரி, என்ன நிபந்தனைகளை விதித்தார், என்ன பேசப்பட்டது என்ற உண்மைகளை உள்ளது உள்ளபடியே பதிவு செய்துள்ளார், பசு. கவுதமன்.

48 பக்கங்களைக் கொண்ட இந்த வெளியீட்டின் விலை ரூ.10.

கிடைக்குமிடம்: ரிவோல்ட் பதிப்பகம், 69, மேலத் தெரு, சாக்கோட்டை, கும்பகோணம் - 612 401.

-தஞ்சை பசு. கவுதமன்

Pin It