ஜனாப் அப்துல்லாவாகிவிட்ட முன்னாள் பெரியார் தாசன் பற்றிய கட்டுரையை பெரியார் முழக்கத்தில் படித்தேன். அவரின் கொள்கைத் தடுமாற்றங்களை தெளிவாகவே விளக்கியிருந்தது அக்கட்டுரை. நயத்தகு நாகரிகத்துடன் அக்கட்டுரை அமைந்திருந்தது. அதற்கான தகுதிக்கு அவர் உரியவராக எங்களுக்குத் தெரியவில்லை. பெரியார் கொள்கைகள் பரவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அவரை அழைத்து பெரியார் இயக்கத் தொண்டர்கள், தங்கள் உழைப்பையும்,வியர்வையையும் சிந்தி, மேடை அமைத்துக் கொடுத்தார்கள். அப்படி மேடை அமைத்துத் தந்த பெரியார் தொண்டர்கள் ஒவ்வொருவரையும், பெரியார் தாசன்  தனது சொந்த நலனுக்காக அவமதித்து விட்டார் என்றே கருதுகிறோம்.

புலவர் குழந்தை கம்பராமாயணத்துக்கு எதிராக எழுதிய இராவண காவியத்தை இசையுடன் தொடர் சொற்பொழிவு நடத்திய பெரியார் தாசன், சில ஆண்டுகளுக்கு முன் வசதி படைத்த காரைக்குடி கம்பன் கழக சார்பில் ஆர்.எம்.வீரப்பன் அழைப்பையேற்று, கம்ப இராமாயணத்தை, ஒவ்வொரு இளைஞரும் படிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கைக்கு எதிராகப் பேசினார். பார்ப்பன ‘தினமணி’நாளேடு படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. கம்பனை இனத்தின் துரோகி என்று சொன்னவர் பெரியார். கம்பனைப் புகழ்ந்தார் பெரியார் தாசன்.

இப்போது, இஸ்லாமிய தோழர்களிடம் சரண் அடைந்துள்ளார். இஸ்லாத்தின் பெருமைகளைப் பேசுவதற்கு பெரியார் தாசன்கள் கிடைத்திருப்பது, இஸ்லாத்துக்கு பெருமையா, சிறுமையா என்பதை,அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பேச்சாளர்களாக வலம் வந்து, மேடைகளில் கைதட்டல் பெற்று, அதன் வழியாக பெயரும் புகழும் பெறுவோர், கொள்கைக்கு உறுதியாக இருக்க மாட்டார்கள் என்று பெரியார் கூறியதை, மீண்டும் முன்னாள் பெரியார்தாசன் உறுதிப்படுத்தியிருக்கிறார். அப்துல்லாவாக புதிய வேடம் தரித்துள்ள அவர், மீண்டும் பெரியாரை இழுத்துக் கொண்டு குளிர்காய முயற்சிக்க வேண்டாம். இதுவே மேடை போட்டுக் கூட்டம் நடத்தும் எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்களின் உணர்வு.

- இரா. உமாபதி, சென்னை மாவட்ட செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்.

Pin It