சாமியார்கள் என்றால், அதில், அசல், போலி என்று வேறுபாடுகள் கிடையாது. சமூகத்தை எல்லோருமே சுரண்டுகிறவர்கள்தான். அண்மையில் நித்தியானந்தா என்ற சாமியார், தமிழ்த் திரைப்பட நடிகை ஒருவருடன் இருந்த படுக்கையறை காட்சிகளை, ‘சன்’ தொலைக்காட்சி ஒளிபரப்பியதைத் தொடர்ந்து, தமிழகமே பரபரப்பானது. அவர் மீது மோசடி, பாலியல் வன்முறை, கொலை மிரட்டல் சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
 
சேலம் ஆத்தூரைச் சார்ந்த லெனின் கருப்பன் என்ற நித்தியானந்தரின் முன்னாள் சீடர், காவல்துறையில் தந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தரின் படுக்கை அறை பதிவுகளை வெளியிட்டதற்கு லெனின் கருப்பன் என்பவரே பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். காஞ்சிபுரம் கோயிலின் கருவறைக்குள் தேவநாதன் என்ற பார்ப்பன அர்ச்சகர் பெண்களுடன் பாலுறவு கொண்ட காட்சிகள் இதேபோல் படமாக்கப்பட்டு, பத்திரிகைகளில் வெளிவந்தன. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி பார்ப்பன சங்கராச்சாரி ஜெயேந்திரன் மீதும் பாலியல் தொடர்பான புகார்கள் வந்தன. அனுராதா ரமணன் என்ற பார்ப்பன எழுத்தாளரே, காஞ்சி சங்கராச்சாரி, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டினார்.

‘கல்கி’ அவதாரமாக தன்னை கூறிக் கொள்ளும் ஆன்மீக சாமியார் நிறுவனங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்தனர். அவர் பெருமளவில் நில மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
இல்லறத்துக்கு எதிராக துறவறத்தையும், ஆன்மீகத்தையும் பரப்புவதாகக் கூறும் இவர்களின் சொந்த வாழ்க்கை, இதற்கு நேர் மாறாக இருப்பதை அறிந்து உண்மையான பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆன்மீக சாமியார்களின் வலிமையே அவர்கள் தங்களுக்கான சீடர்களைத் திரட்டுவதில்தான் அடங்கியிருக்கிறது. தங்களது பேச்சுத் திறமையாலும், உளவியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தங்களிடம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை உருவாக்குவதிலும் மிகுந்த திறமையுடன் செயல்படுவதாலும், சீடர்களைத் திரட்டி, அவர்களை அரண்களாக்கிக் கொண்டு, தங்கள் வணிகத்தை நடத்தி வருகிறார்கள்.
 
மதம் என்ற கோட்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகும். அப்போது அதற்காக வகுக்கப்பட்ட விதிகளும், மனிதன், உலகம், சமூகம் பற்றிய அதன் கருத்துகளும், அறிவியலுக்கு முரண்பட்டவையாகும். அச்சத்தாலும், கற்பனையாலும் மதங்கள் உருவான பிறகு, சமூக வரலாற்று உருவாக்கத்தில் குடும்பம் என்ற அமைப்புகள் தோன்றின. குடும்ப அமைப்புகளுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் கருத்தியலை மதங்களே வழங்கின. மதங்களின் சட்டங்களே மக்களுக்கான சட்டங்களாகவும் இருந்தன.
 
பின்னர், அரசு உருவாகி, ஜனநாயகம், நாடாளுமன்றங்கள், நீதி மன்றங்கள், அதற்கான தனி சட்டங்கள், விதிகள் உருவாகி, மதங்களிலிருந்து துண்டித்துக் கொண்டன. அரசு, மக்களுக்கான பாதுகாப்பை ஏற்றுக் கொண்டு, கடவுள்களே, மக்களைக் காப்பாற்றி விடுவார் என்ற பழமைவாத சிந்தனைக்கு விடை கொடுத்தது; தங்களுடைய பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வுகளையும், கோரிக்கைகளையும், மக்கள் அரசுகளிடமும், கடவுள்களிடமும் முன் வைத்தாலும்கூட, காலப் போக்கில், கடவுள்களைவிட, ஆட்சிகளும், அரசுகளுமே மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். ஆட்சியமைப்பிலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டு, “ஆண்டவன் சாம்ராஜ்யத்துக்குள்” மட்டும் ‘அடைக்கலமாகி’விட்ட எந்த மதவாதியும் கிடையாது. சங்கராச்சாரிகளுக்கும், பாதிரியார்களுக்கும், முல்லாக்களுக்கும்கூட அரசு பாதுகாப்புதான் தேவைப்படுகிறது. கடவுள் தண்டிப்பார் என்று நீதிமன்றங்கள் தண்டிக்காமல் இருந்துவிடாது. நரகத்தில் தண்டனை கிடைத்துவிடும் என்று நம்பி சிறைச்சாலைகள் இழுத்து மூடப்பட்டுவிடவில்லை.
 
கீதையை மட்டுமே நம்புவேன்; குர்ரானை மட்டுமே ஏற்பேன்; பைபிளுக்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்று எவரும் கூறி சட்டத்திலிருந்து தப்பித்துவிடவும் முடியாது. மதங்களைப் பற்றிய குறைகளை சுட்டிக்காட்டுவதாலேயே, மத உணர்வைப் புண்படுத்துவதாக கூப்பாடு போடுகிறவர்கள், கடவுள், மதங்களின் உரிமைகளை அரசுகளும், சட்டங்களும், செல்லாக்காசுகளாக்கி விட்டதைப் பற்றி வாய் திறப்பதே கிடையாது. அந்த அரசுகளை ஏற்றுத்தான் வாழ்கிறார்கள்.
 
சமூகத்தின் போக்குகளில் உருவாகி வரும் மாற்றங்கள் வாழ்க்கையில் பண்பாட்டில் எதிரொலிக்கத்தான் செய்யும் இந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய கருத்தியல்கள் - கடவுள், கோட்பாடுகளிலோ, மதங்களுக்கான விதிகளிலோ இல்லை என்பதை எவருமே மறுத்துவிட முடியாது. வழிபாட்டுத் தலங்களை மட்டுமே நாடிச் சென்றவர்கள், தங்களின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கான தீர்வுகள் - அவற்றில் கிடைக்காத நிலையில் அதே நம்பிக்கையைப் பயன்படுத்தி, ‘ஆன்மீக’த்தைக் கடை பரப்பிய சாமியார்களை நோக்கிச் சென்றனர். இரண்டுக்குமே அடிப்படை - கடவுள் மீதான நம்பிக்கை தான். சாமியார்களோ மூச்சுப் பயிற்சி, வாழ்வியல் கலை மற்றும் தன்னம்பிக்கை கருத்துகளை, பக்தி, ஆன்மீகத்தோடு குழைத்து பரப்பி, கடவுள் நம்பிக்கையை அழிய விடாமல் காப்பாற்ற முயன்றனர். சாமியார்கள் பன்னாட்டு நிறுவனங்களை முன்மாதிரியாகக் கொண்டு, தங்கள் ஆன்மீக வர்த்தகத்தைக் கட்டி எழுப்பி, மக்களைக் கடும் குழப்பத்தில் மூழ்கச் செய்து சுரண்டி வந்தனர்.
 
கடவுள் நம்பிக்கையிலிருந்து மீள முடியாதவர்கள் அல்லது அதற்கு முயற்சிக்க விரும்பாதவர்கள், மீண்டும் மீண்டும், தங்களின் நம்பிக்கைகளுக்கு, புதிய விளக்கங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு - சாமியார்கள் வலையில் வீழ்ந்தனர். ஒருபுறம் மருத்துவம், உளவியல், அறிவியல் ஆய்வுகள், உண்மைகள் வளர்ந்து, மனித வாழ்வுக்கு புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. மற்றொருபுறம், கடவுள், மத நம்பிக்கைகள் முற்றிலும் வீழ்ந்து விடாமல் தடுக்கும், புதிய முயற்சிகள். ஆன்மீகம், சாமியார்கள் என்ற போர்வையில் நடந்து வந்தன. இந்த முரண்பாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் கூர்மையடையும்போது அம்பலப்பட்டு போகிறவர்கள் - சாமியார்களும், மதங்களும், கடவுள் கோட்பாடுகளும்தானே தவிர, விஞ்ஞானமோ, அறிவியல் கோட்பாடுகளோ அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
சமூகத்தையும், அதன் உறுப்பினர்களான மக்களையும், சமத்துவமாகவும், தோழமையாகவும் நேசிக்கக் கூடிய ஒரு உயர்ந்த மனிதப் பண்பாட்டைக் கட்டி எழுப்புவதற்கு - மதங்களோ, கடவுள்களோ, துணைக்கு வரப்போவது இல்லை என்பதோடு, அவைகள் தடைக்கற்களாக நிற்கின்றன. காலாவதியாகி விட்டன! காலம் முடிந்து போன மருந்துகளை உட்கொள்வது ஆபத்துகளையும் பக்க விளைவுகளையுமே ஏற்படுத்தும். கோயில்களை மட்டுமே நாடிப் போனவர்கள் , பிறகு ஆன்மீகத் தோற்றத்தில் கடை பரப்பிய பாபாக்களையும், சாமியார்களையும் நாடி ஓடத் தொடங்கியதே - கடவுள், மதக் கோட்பாடுகள் செல்லாக்காசுகளாகிவிட்டதை வெளிச்சப்படுத்துகின்றன. இப்போது, ஆன்மீக சாமியார்களும் அம்பலமாகிவரும் நிலை வந்துவிட்டது.
 
இனியும், வாழ்க்கைக்கான தீர்வுகளையும், கருத்துத் தேடல்களையும், கடவுள், மதங்களுக்குள் தேடுவதில் எந்தப் பயனும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வரவேண்டும் என்பதையே, இப்போது அம்பலமாகி வரும் சாமியார்களின் மோசடிகள் கல்வெட்டைப்போல், உணர்த்தி நிற்கும் உண்மையாகும். 1900 ஆம் ஆண்டு வெளிவந்த ரயில்வே அட்டவணையைப் பார்த்துக் கொண்டு, 2010 இல் ரயிலைப் பிடிக்க புறப்படுவதற்கும், கடவுள், மதம், சாமியார்கள் காட்டிய வழியில் போய் வாழ்க்கையை எட்டிப் பிடிக்க முயற்சிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரயிலையும், வாழ்க்கையையும் தவற விடவேண்டியதுதான்.
 
கடவுள் என்ற ஒன்றே இல்லை என்ற உறுதியான விஞ்ஞானத்தின் முடிவை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, முழுமையாக இந்த தூசி படிந்த பழமைவாதத்திலிருந்து மீள முடியும் என்பதை வலியுறுத்துகிறோம். மீண்டும் பெரியார் கூறுவதையே கூறுகிறோம்:

“கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை;
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.”

- விடுதலை இராசேந்திரன்

Pin It