கோவை வடக்கு வட்டாட் சியர் அலுவலகத்தில் 29.8.2010 ஞாயிறு அன்று அவசரமாக திண்ணை ஒன்றைக் கட்டி, அதன் மீது ஒரு விநாயகன் சிலையும் வைக்கப்பட்டது. திங்கள் காலை அலுவலகம் வந்த ஊழியர்களும், பொது மக்களும் இந்த திடீர் விநாயகன் சிலை கண்டு திகைப்படைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கழகத் தோழர்கள், மாநகர தலைவர் கோபால், அமைப்பாளர் செல்வம், கதிரவன், வடக்கு மாவட்டத் தலைவர் இராமசாமி, மாநகர செயலாளர் இ.சாஜித் உள்ளிட்ட தோழர்கள் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகம் சென்று, அங்கிருந்த துணை வட்டாட்சியரிடம், அரசு அலுவலகத்தில் மதவழிபாடு சிலைகள் அமைப்பது அரசு ஆணைக்கு எதிரானது மற்றும் நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என்றும் கூறி மனு அளித்தனர்.  இதன் நகல் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடமும் வழங்கப்பட்டது. அதில் 2 நாட்களுக்குள் சிலை அகற்றப்படாவிட்டால், அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணனிடம் நேரிலும், தொலைபேசியிலும் சமரசம் செய்ய முயன்றனர். கழகப் பொதுச்செயலாளர் உறுதியாக சிலை அகற்றம் என்பது மட்டுமே தீர்வு என்று தெரிவித்தார். 6.9.2010 அன்று காலை, வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று கழக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்திற்கு முந்தைய நாள் 5.9.2010 அன்று அந்த விநாயகன் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. 

சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விநாயகன் சிலை, கழக முற்றுகைப் போராட்ட அறிவிப்பால் அகற்றப்பட்டது. கழக கொள்கை உறுதிக்கு கிடைத்த வெற்றியேயாகும்.                         செய்தி: சாஜித் 

சங்கரமடம் தாக்கப்பட்ட வழக்கில் சேலம் தோழர்கள் விடுதலை 

திருச்சி சீரங்கம் பெரியார் சிலை தாக்கப்பட்டபோது, அதற்கு தமிழகம் முழுவதும் தோழர்கள் எதிர்வினை ஆற்றினர். சேலம் சங்கர மடமும் தாக்கப்பட்டது. அந்த வழக்கிலிருந்து தோழர்கள் மோ. பாலு, இரா. டேவிட், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழ்தேச பொதுவுடமை கட்சி பிந்துசாரன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க இனியன் ஆகியோரை 3.9.2010 அன்று சேலம் நீதிமன்றம் விடுதலை செய்தது. கழக சார்பில் வழக்கறிஞர் அன்பு வாதாடினார். 

பெரியார் பெருந்தொண்டர்கள் நினைவு கல்வெட்டு - கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார்

 30.8.2010 அன்று கழகத்தின் சார்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் ‘குடிஅரசு’ நூல் அறிமுக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சத்தியமங்கலம் பகுதியில் தன் வாழ்நாள் முழுவதும் பெரியாரின் தொண்டர்களாக, பெரியார் கொள்கைகளைப் பரப்புவதையே தன் இலட்சியமாகக் கொண்டும், பல போராட்டங்களிலும் பங்கெடுத்து, இயக்கம் வளர்த்த மறைந்த பெரியார் பெருந் தொண்டர்களாக ஆசிரியர் நவநீதன், வடவள்ளி ரங்கன் ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நினைவு கல்வெட்டை சத்தி - திம்மையன் புதூரிலும், வடவள்ளியிலும் திறந்து வைத்தார். கழகக் கொடியினையும் அவ்விடங்களில் ஏற்றி வைத்தார். பொதுக்கூட்டம் சத்தியில் உள்ள வடக்குப் பேட்டையில் துவங்கியது. முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இன்னிசைக் குழுவினர் கழகப் பாடல்களை பாடினர்.

மாவட்ட அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி தலைமையில் புதுரோடு சிதம்பரம், இறையிலன் மூர்த்தி முன்னிலையில் மேட்டூர் கலைமணி, மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன், கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி ஆகியோர் பேசிய பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, குடிஅரசு நூலை அறிமுகம் செய்து பேசினார். இறுதியாக வேலுச்சாமி, சுந்தர்ராசு ஆகியோர் கழகத் தலைவரிடமிருந்து குடிஅரசு நூல்களைப் பெற்றுக் கொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் இராசேந்திரன் நன்றி கூறினார். இந்தப் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என இந்து முன்னணியினர் காவல்துறையிடம் மனுச் செய்தனர். அதை நிராகரித்து அனுமதி வழங்கினர்.

Pin It