ஏழுமலையான்: அடேய் விநாயகா! உனக்கு பிறந்த நாள் வரப் போகிறது; உனது பக்தர்கள் விழா எடுக்கிறார்கள் நீ மகிழ்ச்சியில் துள்ளிக் கிடக்கிறாய்! எனது நிலையைப் பார்த்தாயா? என்னை தரிசிக்க வரும் பக்தர்களை சிறுத்தைப் புலி மிரட்டுகிறது; இப்போது கரடியும் சேர்ந்து மிரட்டுகிறது! பக்தர்கள் வருவதற்கே பயப்படுகிறார்களப்பா.

விநாயகன் : இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை? அந்த சிறுத்தையையும், புலியையும் உனது கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூட சக்தி இல்லாமல் போய் விட்டதா, உனக்கு!

ஏழுமலையான்: அட, யானைத் தலைவா தும்பிக்கையை மூடப்பா! நம்ம இரண்டு பேருக்குமே எந்த சக்தியுமே இல்லை என்பது உனக்கே தெரியாதா? ஏதோ, தெரியாதவன் போல் நடிக்கிறாயே! உனக்கு சக்தி இருந்தால், இரும்பு ஏணியில் வைத்து தூக்கி, அடித்து உடைத்துத் தானே உன்னை கடலில் கொண்டு போய் வீசுகிறார்கள், அதைத் தடுத்து நிறுத்தினாயா? விதிக்கு வீதி, உனது சிலைக்கு காக்கி சட்டை கள் தானே பாதுகாப்புத் தருகின்றன! இது மானக் கேடு அல்லவா?

விநாயகன் : மானம் பற்றியெல்லாம் பேசாதே; கிருஷ்ண தேவராயர் வாங்கிக் கொடுத்த நகைகளைக் காப்பாற்றிக் கொள்ள உனக்கு துப்பு இல்லை. உனக்குத் தெரியாமல் எவனோ அடிச்சிட்டுப் போயிட்டான். உண்டியலில் ஊழல், நிர்வாகத்தில் ஊழல்; லட்டு தயாரிப்பில் ஊழல்; அர்ச்சனை டிக்கெட்டில் ஊழல்; உனது கோயில் ஊழியரே ஊழல் பிரச்சினையில் தற்கொலை செய்கிற அளவுக்கு உனது சக்தி நாறிப் போய் கிடக்குது!

ஏழுமலையான் : உண்மைதான், உண்மைதான்; ஒப்புக் கொள்கிறேன். எனது கோயில் ஊழியர்களே நிர்வாகத்தை எதிர்த்து என் கண்ணெதிரே போராடுகிறார்கள். அவர்கள்கூட, நான் ஒருவன் கல்லுப்போல இங்கே உட்கார்ந்திருக்கிறேனே, என்னிடம் வந்து முறையிடலாம் என்று கூட நினைக்கவில்லை. என் சக்தி மீது அவ்வளவு அபார நம்பிக்கை அவர்களுக்கு. ஆனாலும், என் சக்தி இப்படி சந்தி சிரிக்கிறது என்றால், உன்னை களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும்; ரசாயனப் பொருள்களால் செய்து, சுற்றுச் சூழலை பாழடிக்கக் கூடாது என்று அறிவித்து விட்டார்களே? சுத்த களிமண்ணாக்கி விட்டார்களே, இதெல்லாம் அவமானம்அல்லவா?

விநாயகன் : சரி, சரி; எல்லாம் சரிதான்; நமக்குள் சண்டைப் போட்டுக் கொண்டு, நாம் சக்தியற்ற வெத்துவேட்டு, வெறும் கல் என்பதை நாமே, டமாரம் அடித்துக் கூறிக் கொண்டிருக்க வேண்டுமா? நமக்கு ஒரு மண்ணாங்கட்டி சக்தியும் கிடையாது என்பது, பக்தி மரமண்டைகளுக்குத் தெரியாதவரை, நமது காட்டுல மழைதான்! கரடி வந்தால் என்ன? கடலில் போட்டால் என்ன? அதோ, புரோகிதர்களும், இந்து முன்னணியும், போலீசும் நமக்கு பாதுகாப்பாக வந்துன்டே இருக்கா..... பார்!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It