புதுவை வாழ் மாணவர் உரிமைகளை பறிக்கும் புதுவை அரசு சட்டத்தை எதிர்த்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாபெரும் கண்டன பேரணி நடந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு, தற்போது பிராந்திய அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அகில இந்திய இடஒதுக்கீடு போக மீதியுள்ள மொத்த இடத்தில் காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகே விற்கு 4 சதவீதமும், ஏனாமிற்கு 3 சதவீதமும் வழங்கப் படுவதால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாண வர்களாக இருந்தாலும்கூட புதுச்சேரி பகுதியை சார்ந்தவர்கள் 200க்கு 194 வாங்கினாலும் விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்காத நிலை உள்ளது.
எனவே, 23.8.2010 திங்கட்கிழமை அன்று காலை 9 மணியளவில் புதுவை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, பிராந்திய இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வலியுறுத்தி, கண்டனப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே தொடங்கிய சுமார் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்ட இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வீராம் பட்டினம் கவுன்சிலர் பா. சக்திவேல், தேங்காய் திட்டு கவுன்சிலர் சு. பாஸ்கரன், புரட்சியாளர் அம்பேட்கர் மக்கள் படை சி. மூர்த்தி, பார்வர்டு பிளாக் உ. முத்து, மக்கள் ஜனசக்தி புரட்சி வேந்தன், செந்தமிழர் இயக்கம் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கம் இரா. அழகிரி, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் கோகுல் காந்தி நாத், கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கிய பாசறை, செம்படுகை நன்னீரகம், மண்ணின் மைந்தர் நல உரிமை சங்கம், மாணவர் கல்வி அறக்கட்டளை, புதிய வேள்வி மக்கள் இயக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் தங்கிய மற்றும் வளர்ச்சி இல்லாமல் இருக்கின்ற பகுதிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு, சிறப்புத் திட்டங்கள், பள்ளிகள் திறப்பது போன்ற உதவிகளை அரசு செய்வதில் எந்த தடையும் இல்லை; யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதும் இல்லை. இந்த பிராந்திய இடஒதுக்கீடு என்பது புதுவை மாணவர்களுக்கு மட்டும் இல்லாத நிலையில், புதுவை மாணவர்கள் ஏற்கனவே பெற்று வந்த உரிமைகளும்கூட, பொதுப் போட்டி என்ற அடிப்படையில் மற்றப் பகுதிகளில் இருப்பவர்களும் எடுத்துக் கொள்கிற வாய்ப்பு இருக்கிற இந்த நிலையில்தான், சமச்சீரான வாய்ப்பு வரவேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி, பிராந்திய ஒதுக்கீடு என்ற அடிப்படை யில் புதுச்சேரி மாணவர்களின் உரிமைகள் பறிக்கப் படக் கூடாது. அவர்கள் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது. எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்கின்ற அடிப்படையில்தான் இந்த ஆர்ப்பாட் டம் நடந்துக் கொண்டிருக்கிறது என்று விளக்கிப் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அரசியல் சட்டத்தில் எங்கும் இல்லாத இந்த பிராந்திய இடஒதுக்கீடு திட்டத்தை, புதுவை அரசு உடனே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
பின்னர், புதுவை முதல்வர் அலுவலகத்திற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் சென்று கோரிக்கை களை மனுவாக வழங்கப்பட்டது.
புதுவையில் கழகக் கலந்துரையாடல்
23.8.2010 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மில்லர் அரங்கில், கழகத்தின் புதுவை மாநில மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், புதுவை மாநில தலைவர் லோகு அய்யப்பன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், புதுவை மாநில அமைப்பாளர் இர. தந்தைபிரியன் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் உரையில் -
“நாம் ஏற்கனவே இரட்டை குவளை உடைப்புப் போராட்டம் தொடங்கினோம். கடந்த ஆண்டு ஈழப் பிரச்சினையின் அவசியம் கருதி அதில் ஈடுபட்டோம். எனவே மீண்டும் பெரியாரின்அடிப்படைக் கொள்கையான சாதி ஒழிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முதலில் தீண்டாமை பற்றி பட்டியல் தயாரித்து, மனித உரிமை சமூக நீதி பிரிவு (தீண்டாமை ஒழிப்புப் பிரிவு) அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, பிறகு வழக்கு தொடங்குவது என படிப்படியாக நம் போராட்டம் நடைபெற இருக்கிறது. அரசின் கவன ஈர்ப்புக்காக திருச்சி கிறித்துவ சுடுகாட்டிலுள்ள சுவரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அணி திரட்ட வேண்டும், வழக்கமான கலந்துரையாடல் கூட்டங்கள் எல்லாம், ஏன் இந்த வேலைத் திட்டங்களை செய்யவில்லை என்பதைப் பற்றி பேசுவதாகவே அமைந்துவிட்டது. இனி எப்படி செய்யப் போகிறோம் என்ற பேசுவதற்கு இக்கலந்துரையாடல் கூட்டம் பயன்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தோழர்கள் வீராசாமி, விசயசங்கர், சார்லஸ், வீரமோகன், சுப்பு, இளங்கோ, சுரேஷ் ஆகியோர் தங்களது கருத்துகளைக் கூறினர்.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக பல செய்திகள் விவாதிக்கப்பட்டு, அதற்கு விளக்கம் தெரிவித்த பிறகு, இறுதியாக புதுவை மாநில தலைவர் லோகு அய்யப்பன் உரையாற்றினார். அதிக எண்ணிக்கையில் குடிஅரசு தொகுதிகளை விற்பனை செய்து தருவதாகவும், அக்.2 போராட்டத்தில் குறைந்தபட்சம் முன்னூறு தோழர்கள் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. தோழர்கள் சுமார் 100 பேர் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- அ.கோகுலகண்ணன்