கழகத்தின் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத்தை, வன்முறைக் கும்பல் கடந்த 12 ம் தேதி இரவு 11மணியளவில் பாறாங்கற்களைத் தூக்கி எறிந்து தாக்கியதில், வீட்டின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் சேதமடைந்தது. ‘குடிஅரசு தொகுப்பு நூலை வெளியிட்ட மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு, பெரியாரை வர்த்தகமாக்கும் கி.வீரமணியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சு ஏடுகளில் வந்த நாளில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. செய்தியறிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரன் மற்றும் சென்னை தோழர்கள் 12 ஆம் தேதி இரவே திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லம் விரைந்தனர். காவல்துறையில் புகார் தரப்பட்டது.
 
அடுத்த நாள் காலை கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் துரைசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு ஆகியோர் தோழர் தங்கராசு இல்லம் சென்று, நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய தோழர் நல்லக்கண்ணு, வன்முறையைக் கண்டித்துள்ளார்.
 
“பெரியாருடன் இணைந்தும், பெரியார் மறைவிற்குப் பின்னரும் தமிழருக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் தொண்டாற்றி வருபவர் திருவாரூர் தங்கராசு. பெரியார் கருத்துகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்பவர். அவரது கார் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசும் காவல்துறையும் சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார். கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
“பெரியார் இயக்கத்தின் மூத்த தலைவரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருபவரும், தமிழக அரசின் பெரியார் விருது பெற்றவருமான திருவாரூர் தங்கராசு அவர்கள் இல்லத்தின் மீது கடந்த 12 ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் வன்முறை சக்திகள் பாறாங்கற்களை தூக்கி எறிந்து, அவரது காரை சேதப்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் கடந்த 11.6.2010 அன்று தி.க. தலைவர் கி.வீரமணி தொடர்ந்த வழக்கில் வெற்றிப் பெற்று பெரியார் திராவிடர் கழகம் நடத்திய விழாவில் ‘குடிஅரசு’ தொகுப்பு நூலை வெளியிட்டு அவர் பேசியது, ஜூன் 12ஆம் தேதி இதழ்களில் வெளிவந்தது. அன்றைய தினம் இரவே தாக்குதல் நடந்துள்ளது. எழுச்சியுடன் நடந்த அந்த விழாவை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே - இத் தாக்குதல்களை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சமுதாய இயக்கத்தைச் சார்ந்த 85 வயதை நெருங்கும் பெரியார் தொண்டருக்கு தமிழ்நாட்டில் இத்தகைய அச்சுறுத்தல் நடப்பதை அனுமதிக்கக் கூடாது. காவல்துறை, எந்த நிர்ப்பந்தத்துக்கும் பணிந்து விடாமல், குற்றவாளிகளைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.”

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

Pin It