22,000 சொந்த நாட்டு மக்களின் மரணத்தை புறந்தள்ளி, அமெரிக்க முதலாளியை காப்பாற்றத் துடித்த ராஜீவ்காந்தி, தேச பக்தரா? 

• மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமெரிக்க நிறுவனமான யூனியன்கார்பைடு தொழிற்சாலையிலிருந்து விஷ வாயு வெளியேறிய நாள். 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 12.45 வரை அந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

• கார்பைடு ஆலையின் தொட்டி எண்.607-லிருந்து 47 டன் விஷ வாயு வெளியேறி காற்றில் கலந்தது. போபால் நகரில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 8 லட்சம். பாதிப்புக்கு உள்ளானோர் 5 லட்சம் . உறக்கத்தில் இருந்த நிலையிலேயே பலர் மாண்டனர். இறந்தவர்கள் சுமார் 22000 பேர். 

• செவின், டெமிக் எனும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரிப்பது இந்த தொழிற்சாலை. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருள்களில் ஒன்று ‘மெத்தில் அய்சோ சைனைட்’. இந்த வேதிப் பொருளையும், இந்தத் தொழிற்சாலை தயாரித்தது. உயிருக்கு ஆபத்துகள் நிறைந்த இந்தத் தயாரிப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி யூனியன் கார்பைடு நிறுவனம் கவலைப்படவே இல்லை. இந்த ஆபத்தான வாயு வெளியேறும் நிலை வந்து விட்டால், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இந்தத் தொழிற்சாலையில் எவ்வித அறிவிப்பும் காணப்படவில்லை. மக்களிடமும் இது பற்றி முன்னெச்சரிக்கையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்பட்டதில்லை. 

• இப்படி ஒரு பெரும் விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தெரியும். தொழிற்சாலையை மேற்பார்வையிட வந்தது விஞ்ஞானம் மற்றும் தொழில்துறை ஆய்வுக்குழு; குழுவின் தலைவராக இருந்தவர் - அதன் இயக்குனர் எஸ். வரதராஜன் என்ற விஞ்ஞானி. பூமிக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த சோதனைக் கூடத்தை சோதனையிட்டபோதே - 610 ஆவது எண் தொட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த வாயுவின் அளவு மிக மிக அதிகமாக இருந்தது; தொட்டியைக் கழுவும் போது தண்ணீர் புகும் வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரித்திருந்தது; குழு எச்சரித்தது போலவே தான் நடந்தது. யூனியன் கார்பைடு நிறுவனம், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவே இல்லை.  

• யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது. உலகம் முழுதும் இது தொழிற்சாலைகளையும் தனது நிறுவனத்தோடு இணைக்கப்பட்ட ஆலைகளையும் தன்னிடமிருந்து மூலப் பொருட்களை வாங்கி செயல்படும் தொழிற்சாலைகளையும் இந்நிறுவனம் நடத்தியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கிளைகளாக இந்தியாவில் 14 தொழிற்சாலைகள் நடந்தன. போபாலில் உள்ள இந்தத் தொழிற்சாலையின் நிர்வாகப் பொறுப்புகள். இந்தியாவில் அதன் கிளை நிறுவனங்களைக் கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்பில் விடப்பட்டன. போபாலில் இந்தத் தொழிற்சாலை முதலில் தொடங்கியபோது, பூச்சிக்கொல்லி மருந்தான ‘செவின்’ இங்கு தயாரிக்கப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. பிறகு, போபாலிலேயே அதை உற்பத்தி செய்யவும், அதற்கு தேவையான மெத்தில் அய்சோசைனட் (எம்.அய்.சி.) என்ற உயிருக்கு ஆபத்தான வாயுவையும் போபாலிலேயே தயாரிக்கும் முடிவையும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் எடுத்தனர்.  

• இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 12 பேர். அமெரிக்காவிலுள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் - அதில் ஒருவர். அவர் தலைமறைவாகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு, வழக்கிலிருந்து தனியே பிரிக்கப்பட்டார். 26 ஆண்டுகாலமாக எந்த ஒரு விசாரணைக்கும் அவர் வரவில்லை. அதேபோல் குற்றம்சாட்டப்பட்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனமும் - ஹாங்காங்கில் இயங்கி வரும் அதன் கிளை நிறுவனமும் தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அதன் தலைமை அதிகாரிகள் வழக்கிலிருந்து பிரிக்கப்பட்டனர். (ஹாங்காங்கில் செயல்படும் யூனியன் கார்பைடு துணை நிறுவனத்தின் பெயர் ‘யூனியன் கார்பைடு ஈஸ்ட்டர்ன் கம்பெனி’ என்பதாகும். (போபால் ஆலை இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் செயல்பட்டது.) இந்த மூன்று நிறுவன அதிகாரிகளும் எந்த ஒரு வழக்கு விசாரணைக்கும் வரவில்லை. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்திய கிளை அதிகாரிகள் 8 பேர் மீது வழக்கு நடந்தது. அவர்களில் பெரும்பான்மை அதிகாரிகள் பார்ப்பனர்கள். ஓரிருவர் உயர்சாதியினர். (பெயர் விவரம்: கேசுப் மகிந்திரா, கிஷோர் கம்தார், ஜெ. முகுந்த், டாக்டர் ஆர்.பி. சவுத்ரி, எஸ்.பி. சவுத்ரி, கே.வி. ஷெட்டி, எஸ்,அய். குரேஷி) 

• நீதிபதி தீர்ப்பில் கடுமையான குறைகளை சுட்டிக் காட்டி 2 ஆண்டு சிறையும், 5 லட்சம் அபராதமும் விதித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவரைத் தவிர (ஒருவர் போபால் ஆலையின் மேற்பார்வையாளரான ஷெட்டி; மற்றொருவர் ஆபரேட்டர் வேலை செய்த குரேஷி) குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவரும் வழக்கு விசாரணைக்கு வர வேண்டிய அவசியமில்லை என்று, மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் விதிவிலக்கு அளித்து விட்டது.  

• போபால் நகர நீதிமன்ற நீதிபதி மோகன் திவாரி வழங்கிய தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பேராபத்து நிகழக்கூடிய வாய்ப்புகள் நன்றாகவே தெரியும் என்று கூறி, அதற்கான சான்றுகளையும் விளக்கியிருந்தார். 

• இந்த வழக்கை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு சார்பில் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) நடத்தியது. 178 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களைக் கேட்ட நீதிபதி, ஒரு கருத்தை உறுதியாக சுட்டிக்காட்டியிருந்தார். யூனியன் கார்பைடு நிறுவனம், அமெரிக்காவிலோ அல்லது உலகம் முழுதும் நடத்தி வந்த நிறு வனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலவோ போபால் நிறுவனத்தையும் நடத்தியது என்ற கருத்தை ஏற்கவே முடியாது என்று நீதிபதி கூறினார். 

• அரசு தரப்பு சாட்சியங்களில் ஒருவரான விஞ்ஞானி வரதராஜன், பாதுகாப்பில் இருந்த பல குறைகளை சுட்டிக் காட்டினார். அவர் சுட்டிக் காட்டிய சில முக்கிய கருத்துகள்: 

 ஆபத்தான எம்.அய்.சி. வாயு - திரவ வடிவத்தில் உள்ளதாகும். அதில் காற்று கலக்கும்போது ஆவியாக வெளியேறும். காரணம் - அதில் ‘கார்பன் மானாக்சைடு’ அடங்கியுள்ளது. எனவே இந்த வேதிப் பொருளை அதிக அளவில் இருப்பாக வைத்துக் கொள்ளக் கூடாது. தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ‘எம்.அய்.சி.’ பெருமளவில் தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதுகூட பாதுகாப்பு இல்லாமல் (ஸ்டீல் டிரம்களில் வைக்காமல்) தொட்டிகளிலேயே சேமிக்கப்பட்டிருந்தது. இதை யூனியன் கார்பைடு நிறுவனமே ஒப்புக் கொண்டிருக்கிறது. கசிவைத் தடுக்கக் கூடிய தொழில் நுட்பங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. தேவையான குளிர்சாதன அமைப்புகளும் இல்லை. (இவைகளுக்கு எல்லாம் செலவிட வேண்டியதில்லை என்ற நோக்கத்துடனேயே அலட்சியம் காட்டப்பட்டுள்ளன) 

• இந்தக் குறைபாடுகளையெல்லாம் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மற்றொரு முக்கிய கருத்தையும் சுட்டிக்காட்டியது. மிக மிக மோசமான குறைபாடு தொழிற்சாலைக்கு தேர்வு செய்யப்பட்ட இடமாகும். மக்கள் நெருக்கமாக வாழக்கூடிய ஆபத்துகள் வரும்போது தப்பித்துப் போக முடியாத சுகாதார வசதிகளே இல்லாத, சமூக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் வாழ்ந்த பகுதியில் இத்தகைய ஆபத்து நிறைந்த தொழிற்சாலையை நிறுவ அனுமதி தரப் பட்டதை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.

• ஆபத்தை விளைவிக்கக் கூடிய எம்.அய்.சி.யை (மெத்தில் அய்கோசைனைட்) 15 டிகிரிக்குக் கீழான குளிர் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். சைபர் டிகிரி குளிர் நிலையில் வைப்பதுதான் மேலும் பாதுகாப் பானது. ஆனால், குளிர்நிலை ஏற்பாடுகள் ஏதுமின்றி வெளியிலுள்ள வெப்ப நிலையிலேயே - அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் 3 மாதங்கள் இந்த ஆபத்தான வாயுவை சேமித்து வைத் துள்ளார்கள். 610-வது எண் கொண்ட தொட்டியில் இந்த அலட்சியத்தின் காரணமாக 500 லிட்டர் அளவு தண்ணீர் தொட்டிக்குள் நுழைந்துவிட்டது. எத்தகைய வெப்ப நிலையில் சேமிக்கப்பட்டிருந்தது என்பதைப் பதிவு செய்யவே இல்லை. வீண் செலவு என்று, குளிரூட்டும் வசதிகளைத் துண்டித்துவிட்டனர். வாயு கசிந்தால் எச்சரிக்கை செய்யக்கூடிய கருவிகள் செயலிழந்து கிடந்தன. வாயுவைக் கொண்டு செல்லும் குழாய்களில் ஓட்டைகள் விழுந்து பழுதடைந்து கிடந்தன. போபால் நீதிபதி மோகன் திவாரி, தனது தீர்ப்பில் இந்த அலட்சியங்களை எல்லாம் பதிவு செய்துள்ளார்.  

• போபால் நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டிய மேலும் சில கருத்துகள்: 

1. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய அதிகாரி கேசுப் மகேந்திரா விஷ வாயு வெளியேறும் வாய்ப்புகள் இருந்தது என்பது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த அதிகாரி தான் நிர்வாகக் குழுவின் தலைவர், ஒவ்வொரு முறை நடந்த ஆய்வுக் கூட்டங்களுக்கும் அவரே தலைமை ஏற்றுள்ளார். எனவே, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பாதுகாப்பு தொழில் நுட்ப ஏற்பாடுகள் பற்றி தமக்கு எதுவுமே தெரியாது என்று அவர் கூறுவதை நம்ப முடியாது. 

2. அது மட்டுமல்ல, அமெரிக்காவின் தலைமை யகத்திலிருந்து பார்வையிட வந்த குழு, இந்த குறைபாடுகளையும் ஆபத்துகளையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது.  

3. தொழிற்சாலை ஆபத்தான நிலையில் இயங்கி வருகிறது என்று கூறப்பட்ட அறிக்கைகள் எல்லாவற்றையும் பொறியாளர்களும், நிர்வாக அதிகாரிகளும் முழுமையாக அலட்சியப்படுத்தி விட்டனர்.  

4. இந்த தொழிற்சாலை தயாரிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளான டெமிக், செவின் ஆயிவற்றுக்கு மிகக் குறைந்த அளவிலேயே 3 டன் மட்டுமே தேவைப்படும். எம்,.அய்.சியை (மெத்தியில் அய்கோ சைனைட்) 42 டன் அளவுக்கு ஆபத்தானது என்று தெரிந்தும் சேமித்து வைத்திருந்ததோடு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதிலும் முழுமையாக அலட்சியம் காட்டியுள்னர். நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தை அமெரிக்காவிலிருந்து வந்த குழுவும் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்துள்ளது.  

• 13 ஆண்டுகாலம் வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. போபால் தலைமை நீதிபதி 7 பேருக்கு (எட்டு பேர்களில் ஒருவர், விசாரணை நடக்கும் போதே இறந்து விட்டார்) இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம் விதித்தார். 

• கொடூரமான குற்றத்துக்கு இவ்வளவு குறைவான தண்டனை கிடைத்ததற்கு காரணம் - உச்சநீதிமன்றம் தான். போபால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும்போதே குற்றம்சாட்டப்பட்டிருந்த கேசூப் மகேந்திரா என்ற பார்ப்பன அதிகாரி, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளின் பிரிவுகளை மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் போனார். போபால் மாவட்ட நீதிமன்றமும், ஜபல்பூர் உயர்நீதிமன்றமும் சட்டப் பிரிவை மாற்றக் கோரும் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் உச்சநீதிமன்றம் போனார். அவர்கள் மீது 304 (பகுதி 2) என்ற இந்தியதண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கலாம். இந்தப் பிரிவை மாற்ற வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று, தண்டனைச் சட்டம் 304-ன் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். சாதாரணமாக வாகன விபத்து குற்றத்தில் பதிவு செய்யப்படும் சட்டப் பிரிவு இது. இதற்கு அதிகமான தண்டனை இரண்டு ஆண்டுகள் தான். எனவே போபால் நீதிபதியின் கரங்களை உச்சநீதிமன்றம் கட்டிப்போட்டதால், அவரால் இரண்டு ஆண்டுகளுக்குமேல் தண்டனை தரப்பட முடியவில்லை.

• தண்டனை சட்டப் பிரிவு மாற்றப்பட்டதை எதிர்த்து முறையாக மேல்முறையீடு செய்ய வேண்டிய சி.பி.அய்.யும் மேற்முறையீடு செய்ய முன் வரவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்ற சி.பி.அய். துணை போனது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். அகமதி பதவி ஓய்வு பெற்றவுடன், அதற்கான பரிசினை பெற்றுக் கொண்டார். 1997 இல் போபால் நினைவு மருத்துவமனைக்கான அறக்கட்டளை தலைவர் பதவி அவருக்கு கிடைத்தது.

(மீதி அடுத்த இதழில்) 

 (புதுவை - ஆத்தூர் கூட்டங்களில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம்)

Pin It