தமிழ் ஈழத்தில் திட்டமிட்ட இனப்படுகொலையை இந்தியாவின் உதவியுடன் சிங்களப் பேரினவாத இலங்கை அரசு நடத்தி முடித்து, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிலையிலும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்தி தொடர்ந்து தோழர் அ. மார்க்ஸ் தமிழகம் முழுதும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி சென்னை ‘அய்கப்’ அரங்கில் நடந்த கூட்டத்தில், அ. மார்க்ஸ் பேசினார். அவர் அண்மையில் மேற்கொண்ட இலங்கைப் பயண அனுபவம் பற்றி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டக் களப்பு மாவட்டத்தில், கருணா, பிள்ளையான் போன்ற அரசு இலங்கை ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அ.மார்க்ஸ் சென்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டையே மய்யமாக வைத்து அவர் பேசினார். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவே இல்லை என்றும், விடுதலைப் புலிகள் செய்த தவறுகளினாலேயே தமிழர்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளானர்கள் என்றும் கடுமையாக அவதூறுகளை அவர் வீசிக் கொண்டே இருந்தபோது பார்வையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியப் பார்ப்பன ஆட்சியின் குரலையும், பார்ப்பன ஊடகங்கள் இந்து, சுப்ரமணியசாமி, துக்ளக் சோ குரலையும் எதிரொலிக்கும் அ.மார்க்சைப் பார்த்து, சரமாரியான கேள்விகளை பார்வையாளர் எழுப்பினர்.

இலங்கை அரசு நடத்தி முடித்த இனப்படுகொலை பற்றியும், பல லட்சம் தமிழர்கள் அகதிகளாக வாழும் அவலம் பற்றியும் எதுவும் பேசவே மாட்டீர்களா? துக்ளக் சோ, சுப்ரமணியசாமி குரலைத்தான், ஒலிப்பீர்களா? என்று, எதிர்ப்புகள் எழத் தொடங்கின. தமிழனின் கோவணத்தையும் விடுதலைப் புலிகள் உருவிட்டனர். இனி, அவர்கள்தலை எடுக்கவே முடியாது என்று துரோகக் குழுக்களைச் சார்ந்த சில ஈழத் தமிழர்கள் மார்க்சுக்கு ஆதரவாக மேடைக்கு வந்து பேசத் தொடங்கியபோது எதிர்ப்புகள் மேலும் அதிகரித்தன. கடும் அமளிகளுக்கு இடையே கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

-பெரியார் முழக்கம் செய்தியாளர்

Pin It