மும்பை தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய அருணா சென்பக் 37 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, நாய்ச் சங்கிலியால் கொடூரமாக தாக்கப்பட்டதிலிருந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டு செயலிழந்து விட்டார். உயிருக்கு போராடும் அவரை, மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் காப்பாற்றி அதைக் கடமையாக ஏற்று செயல்படுத்தி வருகின்றனர். அவரைக் கருணைக் கொலை செய்து விடலாம் என்று பெண் வழக்கறிஞர் ஒருவர் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

இந்தியாவில் ‘கருணைக் கொலை’ செய்வதற்கான சட்டம் இல்லை. நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவில், ஒரிகான் வாஷிங்டன் மாநிலங்களில் கருணைக் கொலை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கருணைக் கொலை அனுமதிக்கும் சட்டம் இந்தியாவில் இல்லாத நிலையில் அவர் உயிர் பிழைத்திருக்க அளிக்கப்படும் மருத்துவ முறைகளை நிறுத்தி அமைதி வழி மரணத்துக்கு அனுமதிக்கலாம் (ய யீயளளiஎந நரவாயயேளயை) என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதைக்கூட அந்தப் பெண்ணைப் பாதுகாத்து வரும் மருத்தவர்கள் சார்பில் முன்மொழியப்பட்டால், நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்றலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அருணாவை 37 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வரும் அந்த மருத்துவமனை பெண் தாதியர்கள் அருணாவைத் தொடர்ந்து காப்பாற்றுவோம்; மரணிக்க அனுமதியோம் என்று மறுத்து விட்டதோடு உச்சநீதிமன்றம் தங்கள் உன்னதமான சேவைக்கு வழங்கியுள்ள பாராட்டை மகளிர் நாள் வெற்றிச் செய்தியாக அறிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர்.

 

ஒவ்வொரு நாளும் மரணத்தோடு போராடுகிற ஒருவரை அந்தத் துயரத்திலிருந்து மீட்க மரணமடையச் செய்து விடுவதே நல்லது என்ற கருத்து மனித உரிமை கண்ணோட்டத்தில் முன் வைக்கப்படுகிறது. ‘பிறப்பும் இறப்பும் ஆண்டவனிடம் தான் இருக்கிறது’ என்ற மதக் கோடுபாடுகளுக்கு இது எதிரானது. கணவன் இறந்தவுடன் மனைவியும் சாக வேண்டும் என்று ‘இந்து’ மதம் கூறியதாகக் கூறி, பல பெண்கள் கணவர்களோடு உடன்கட்டை ஏற்றப்பட்டார்கள். அவை கருணையற்ற கொடூர கொலைகள். இப்போதும் பட்டினி கிடந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் ‘தற்கொலை’ முறை சமண மதத்தின் பெயரில் நடக்கிறது. இப்படி கடவுள் மதங்களின் பெயரால் மனிதர்களின் உயிர் வாழும் உரிமைகளைப் பறிப்பதை நாகரிக சமூகம் ஏற்காது.

 

இந்தியாவில் தற்கொலைக்கு முயல்வதே குற்றம். எனவேதான் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தவர்கள் மீது தற்கொலக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அருணா வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் தற்கொலைக்கு முயலுவதை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவை திருத்துவதற்கான காலம் வந்து விட்டது என்று கூறியிருக்கிறது. விரக்தியில் தற்கொலைக்கு தள்ளப்படும் ஒருவருக்கு தேவை ஆதரவே தவிர, தண்டனையல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிக  மார்க்கண்டேய கட்ஜீ மற்றம் கியான் சுதாமிஸ்ரா ஆகியோர் இத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இதே கண்ணோட்டத்தில் தூக்குத் தண்டனையையும் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். கருணைக் கொலையிலும் தற்கொலை முயற்சியிலும் செலுத்தப்படும் புதிய கண்ணோட்டத்தை, ஏன் தூக்குத் தண்டனையை ஒழிப்பதிலும், நீதிமன்றங்களும் அரசுகளும் செலுத்தக் கூடாது?

 

உலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு நாடுகள் விடை கொடுத்து வரும் சூழலில், இந்தியாவில் மட்டும், சர்வதேசக் குரலுக்கு எதிரான தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்தில் வைத்துக் கொண்டிருக்கலாமா? 

Pin It