ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதங் களையும், உளவு சேவைகளையும் வழங்கியது இந்தியப் பார்ப்பன ஆட்சி. கோவைக்கு பயிற்சிக்கு வந்த சிங்கள விமானப் படைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தான் சிங்கள விமானப் படையைத் தமிழகத்திலிருந்து திரும்பச் செய்தது.

அதேபோல் மே 2 ஆம் தேதி 80க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ லாரிகள் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு கொச்சி துறைமுகத்துக்குப் போய், அங்கிருந்து கொழும்பு போகிறது என்ற தகவல் பரவியவுடன், அதைத் தடுத்தேயாக வேண்டும் என்ற உணர்வுடன் கோவைப் பகுதி கழகத் தோழர்கள் நீலாம்பூர் நெடுஞ்சாலையில் திரண்டனர். கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், ம.தி.மு.க. தோழர்கள், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள், மனித உரிமை அமைப்பினர், தமிழின உணர் வாளர்கள், பொது மக்கள், பெண்கள் உள்ளிட்ட 300 பேர் திரண்டு, வாகனங்களை மறித்தனர். ஈழத் தமிழினத்தைப் பாதுகாக்க இராணுவ வாகனத்தையே மறித்த இந்தப் போராட்டம், தமிழகத்தில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களையே வியப்பில் ஆழ்த்தியது. அர்ப்பணிப்பும், தியாகம் நிறைந்த தமிழர்கள் ஏராளம் இருக்கிறார்கள் என்பதை நாட்டுக்கு உணர்த்தியது. தமிழின உணர்வாளர்கள் மகிழ்ந்தார்கள். விளைவுகளை எதிர்பார்க்காமல், விலை கொடுக்க பெரியார் திராவிடர் கழகம் தயாரானது.

முதலில் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.  இரண்டாவதாக - ம.தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சந்திரசேகர் மீது பாய்ந்தது. மூன்றாவதாக - பெரம்பலூர் கழக மாவட்ட அமைப்பாளர் லெட்சுமணன் மீதும், நான்காவதாக - ம.தி.மு.க. தோழர் வேலுசாமி, அய்ந்தாவதாக - கழகத் தோழர் சூலூர் வீரமணி என்று பாதுகாப்பு சட்டங்கள் பாய்ந்தன. தேசிய பாதுகாப்பு சட்டம், கழகத் தோழர் சூலூர் வீரமணியைத் தவிர, மற்ற அனைவர் மீதும் ரத்தாகிவிட்டது. இதில் கோவை இராமகிருட்டிணன் தவிர, மற்றவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறிமத்திய அரசே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கதாகும். திராவிடர் கழகத்தின் விடுதலை நாளேடு, கழகத் தோழர்கள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டது. பார்ப்பன ஏடுகளும் அது போன்றே செய்தி வெளியிட்டன. 3 மாத சிறைவாசத்துக்குப் பின் தடைகள் தகர்ந்தன. கோவை இராமகிருட்டிணன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பெரம்பலூர் லட்சுமணன் மீதான சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

தடைகளைத் தகர்த்து, தோழர்கள் பிணையில் விடுதலை பெற்று வரும் நிலையில், கடந்த 1.8.2009 அன்று பொதுச்செயலாளர் கோவை இராம கிருட்டிணன், பெரம்பலூர் இலட்சுமணன் ஆகியோர் விடுதலையானார்கள். சிறை வாயிலில் எழுச்சி மயமான வரவேற்பு வழங்கப்பட்டது. வரவேற்பு பற்றி கழகப் பொறுப்பாளர் வழக்கறிஞர் சாஜித் கோவையிலிருந்து தந்துள்ள தகவல்கள்:

பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லெட்சுமணன் ஆகியோர் காலை 10 மணிக்கு சிறையிலிருந்து வெளியே வந்த போது, பல்லடம் நகர கழகத் தோழர்களின் ஜமாப் எழுச்சி இசையோடு கழக செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கழகக் கொடிகளுடன் நூற்றுக்கணக்கில் தோழர்கள் திரண்டு, முழக்கமிட்டு, வரவேற்ற காட்சி, உணர்ச்சிமயமாக இருந்தது. கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து தனிவாகனங்களில் தோழர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். ம.தி.மு.க., ஆதித் தமிழர் பேரவை, புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர்.

வழக்கில் கைதான 52 தோழர்களுக்கும் ஆடைகள் போர்த்தப்பட்டது; அனைவரும் பொதுச்செயலாளருடன்  புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னையிலிருந்து வழக்கறிஞர் குமாரதேவன் வரவேற்பில் கலந்து கொண்டார். வழக்கில் உதவிய வழக்கறிஞர்கள் எஸ். துரைசாமி, ப.பா. மோகன், இளங்கோவன், குமாரதேவன், சம்பத், லெனின், வெண்மணி, ஆனந்தராசு, விஜயராகவன், பாலா சந்தர், பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வி மற்றும் ம.தி.மு.க. வழக்கறிஞர் சூரி, நந்த கோபால், மோகன்ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கொளத்தூர் மணி தலைமையில்

கோவை நீலாம்பூர் இராணுவ வாகன தாக்குதல் வழக்கில் முதல் கட்டமாக கழகத் தோழர்கள் 9 பேர் உட்பட 11 பேர் 16.7.2009 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். சிறையிலிருந்து வெளிவந்த தோழர்களுக்கு சிறைவாயிலில் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் உற்சாக வரவேற்பு வழங்கப் பட்டது. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் சிறைவாயிலில் திரண்டு நின்று கழக கொடிகளுடன் முழக்கமிட்டு வரவேற்றனர். ஆவாரம்பாளையம் கிளை கழக தோழர்கள் ஜமாப் இசை நிகழ்ச்சி நடத்தினர். கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் போன்ற பகுதிகளிலிருந்து தோழர்கள் பெரும் திரளாக கொட்டும் மழையிலும் எழுச்சியுடன் வரவேற்றனர்.

சிறை மீண்ட தோழர்கள்: இராவணன், திருப்பூர் சண்முகம், பொள்ளாச்சி பிரகாசு, கலங்கல் வேலுசாமி, விக்னேஷ், சண்முகசுந்தரம், அம்பேத்கர், பாடகர் தியாகு, கொளத்துப்பாளையம் குமார் ஆகிய கழக தோழர்களும். பு.இ.மு. வள்ளுவ ராசன், சங்கத் தமிழ்ப் பேரவை சிவபிரியன் உள்ளிட்ட 11 பேர் விடுதலையடைந்தனர். தோழர்கள் அனைவரும் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தனர். பின் கோவை பெரியார் படிப்பகத்தில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக கோவை இராணுவ வாகன தாக்குதல் வழக்கில் தோழர்கள் 13 பேர் 21.7.2009 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.  சிறை மீண்ட தோழர்களை சிறை வாயிலில் கழகத் தோழர்களும் மாநகர, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தோழர்கள் வரவேற்றனர்.

21.7.2009 அன்று பிணையில் விடுதலை செய்யப் பட்ட தோழர்கள்:  பல்லடம் விஜயன், ஜெகதீசன், சூரி (எ) ஆறுமுகம், சூலூர் பன்னீர் செல்வம், அ.ப. சிவா, பா. நேருதாசு, மா. பிரகாசு (அனுப்பட்டி), பா. தமிழரசன், ச. ஆனந்த், கா. சோமசுந்தரம், ப. செல்வகுமார், தே. சீனிவாசன், பாலமுரளி.

Pin It