அயோத்தித் தீர்ப்பின் பரபரப்பு ஓய்ந்து விட்டது. ஊடகங்கள் அதை அறவே மறந்து விட்டன. காமன்வெல்த்து விளையாட்டு ஊழல், அலைக்கற்றை ஊழல், தேர்தல் கூட்டணி பேரங்கள், இராசா கைது என அடுத்தடுத்துப் பரபரப்பூட்டும் செய்திகளுக்கு அவை தாவிக் கொண்டுள்ளன.

அரசியல் கட்சிகளும் அடுத்த சில நாள்களிலேயே தீர்ப்பைப் பற்றிக் கருத்தறிவிப்பைக் கைவிட்டு வி;ட்டன. தீர்ப்பு மசூதி இடிப்பைப் 'புனிதம்' ஆக்கியுள்ளதில் பாரதிய சனதா கட்சியும், இந்துத்துவ ஆற்றல்களும் மனம் நிறைந்து போயுள்ளன. இனி இந்துத்துவக் கனவை நீதிமன்றங்களே நிறைவேற்றி விடும் என்பதால் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதில் அவை கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன. காங்கிரசுக் கட்சிக்கும் தீர்ப்பில் மாறுபாடு ஒன்றும் இல்லை என்பதாலும், இப்படியான தீர்ப்பைத்தான் அது எதிர்பார்த்திருந்ததாலும் தீர்ப்பை வெற்றி தோல்வி எனக் கருதாமல் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. தீர்ப்பு தங்களுக்கு பாதிப்பு எனக் கருதுவோர், உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லலாம் எனவும் அதுவரை நிகழ் தகுநிலை(status quo) காப்பாற்றப்படும்....... என்றும் உறுதி கொடுத்தது. முசுலீம் வாக்குகள் தீர்ப்பால் திசை மாறிவிடக் கூடாது என்பதே என்றும் போல் அதன் ஒரே கவலையாய் இருந்தது.

இடதுசாரிக் கட்சிகள் வழக்கம் போல் தங்கள் கவலையை வெளிப்படுத்தி விட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான அடிப்படைப் பணிகளில் மூழ்கி விட்டன. பகுத்தறிவுப் பகலவன் கருணாநிதி நாட்டில் அமைதி நிலவ வேண்டி இரு பிரிவினரும் தீர்ப்பில் நிறைவு காண வேண்டும் என அறிவுறுத்தியதும், பின்னர் தம் பகுத்தறிவுக்குப் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையில் இராமர் பிறப்பைப் பகடி செய்ததும் இங்கு சிறப்பாய் நினைவு கூரத்தக்கது.

இடதுசாரிச் சிந்தனையாளர்களும், வரலாற்றறிஞர்களும், வழக்கறிஞர்களும்தாம் அயோத்தி தீர்ப்புக் குறித்தும், அதன் தீவிளைவுகள் குறித்தும் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தவர்கள். அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். அது போலவே ஆழந்தகன்ற கட்டுரைகளை வெளியிட்ட ' Economic & Political Weekly' ஆங்கில இதழையும் நன்றியுடன் பாராட்ட வேண்டும்

அயோத்தித் தீர்ப்பின் மீது அக்கறை காட்டாத தமிழரும் உளர். அயோத்தி இராமனுக்கும் தமிழருக்கும் என்ன உறவு என்ற அவர்களின் கேள்வி பொருள் பொதிந்ததே. ஈழத் தமிழர் படுகொலையை முன்னின்று நடத்திய 'இந்திய' அரசு இலக்கக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது கண்டு கொள்ளாத 'இந்தியர்'கள், நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சாகடிக்கப்பட்ட போது கண்டிக்க மனமில்லாத 'இந்திய' அரசியலாளர்கள், அறிவாளர்கள். மெய்ம்மை இவ்வாறிருக்க இந்திய நிகழ்வுகளுக்காகத் தமிழர்கள் ஏன் கண்ணீர் விட வேண்டும்? பிழையே அற்ற கேள்வி. தமிழர் ஒவ்வொருவரிடமும் கிளர்ந்தெழ வேண்டிய அறச்சினம். ஆனால் அயோத்தித் தீர்ப்பைப் புரிந்து கொள்வது நம் 'இந்திய'த் தெளிவை ஆழப்படுத்தும். அயோத்தித் தீர்ப்பின் முன்னும் பின்னுமான வரலாறு மேலும் அதில் வெளிச்சம் பாய்ச்சும். நம் சினம் பாய வேண்டிய திசையிலக்கைக் காட்டும்.

பாபர் மசூதி தொடர்பான சிக்கல் 1857 வாக்கிலேயே தொடங்கி விடுகிறது. இந்து வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மசூதியின் கிழக்கு முற்றத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். அதன் தென்மூலையை இராமர் பிறந்த இடமாக அறிவித்து இராமர் மேடை அமைத்துக் கொள்கிறார்கள். ஆக, இராமர் அந்த மசூதிக்கு வெளியே தென்கிழக்கு மூலையில் பிறந்ததாகத்தான் பூசல் தொடங்குகிறது. பாபர் மசூதியின் மேலாளர் என்று சொல்லப்பட்ட மவுல்வி முகம்மது ஆசார் என்பவர் மசூதியின் முற்றம்....... வன்முறையில் கைப்பற்றப் பட்டுள்ளதாகக் கூறி வழக்குத் தொடுக்கிறார். இதுதான் பாபர் - எதிர் - இராமர் - வழக்கு வரலாற்றில் முதல் வழக்கு.

இந்து முசுலீம்களுக்கு இடையேயான கலவரம் அதற்கு முன்னர் 1853இலேயே தொடங்கி விடுகிறது. 1859 வரை தொடரும் அக்கலவரத்தில் ஏறத்தாழ 70 பேர் கொல்லப்படுகின்றனர். ஆங்கிலேய அரசு இராமர் மேடைக்கும் மசூதிக்கும் இடையே வேலி அமைத்து இந்து முசுலீம் வழிபாட்டு இடங்களைப் பிரி;க்கிறது. அதன் பிறகு இந்துக்கள் கிழக்கு வாயில் வழியாகவும், முசுலீம்கள் வடக்கு வாயில் வழியாகவும் தங்கள் வழிபாட்டு இடங்களுக்குச் செல்கின்றனர்.

கிழக்கு முற்றத்தை மீட்டுத் தரும்படி முசுலீம்கள் 1860, 1877, 1883, 1884 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து வழக்குத் தொடுக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது. 1885இல் இராமர் கோயில் தலைமைப் பூசாரியான இரகுபார்தாஸ் இந்துக்களின் சார்பில் முதன்முதலாக ஒரு வழக்குத் தாக்கல் செய்கிறார். இராமர் மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சட்டப்படி தங்களுக்குச் சொந்தமாக்கும் படியும் மேடையின் மேல் கூரை அமைத்துக் கொள்ள இசைவு வழங்கும்படியும் அவ்வழக்கில் அவர் கோருகிறார். மவுல்வி முகம்மது அசார் இவ்வழக்கில் தம்மை எதிர்த் தரப்பாக இணைத்துக் கொள்கிறார். வழக்கை உசாவிய பைசாபாத்; சார்பு நீதிமன்ற நீதிபதி பண்டிட் அரிகிசன் சிங், இராமர் மேடை மீதான இந்துப் பூசாரியின் உரிமையை ஏற்றுக் கொண்டாலும், மசூதியின் அருகிலேயே கோவில் கட்ட அனுமதித்தால் அமைதிக்குத் தீங்கு நேரிடும் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.

இரகுபார் தாஸ் விடுவதாக இல்லை. மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். மாவட்ட நீதிபதி எப்.இ.ஏ. சாமியர் (கு.நு.யு. ஊhயஅநைச) மசூதியை நேரடியாகப் பார்வையிட்டு விட்டு, 1886 மார்ச்சு 18இல் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார். அவருடைய தீர்ப்பில் கீழ்க்கண்ட வரிகள் மிகவும் பொருள் பொதிந்தவை.

'புனித இடம் என்று இந்துக்களால் சிறப்பாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டது பெரிதும் கெடுவாய்ப்பாகும். ஆனால் அது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு. அக்குறையை நேர் செய்ய இப்பொழுது மிகவும் காலம் கடந்து விட்டது. தொடர்புடையவர்களை இருக்கின்ற நிலையை இருக்கிறவாறே பேணச் செய்வதுதான் ஆகக்கூடிய செயலாகும்." மேலும் அவர் இவ்வழக்கு முசுலீம் பேரரசர் ஒருவர் இழைத்ததாகக் கருதப்படும் வரலாற்று அநீதிக்கு தீர்வு காணத் தொடுக்கப்பட்டதே என்றும் பதிவு செய்கிறார். (சட்டத்தில் தெய்வச் சிலைகள் - Idols in law  EPW திசம்பர் 11 - 2010)

       மனம் தளர்ந்து விடாத தாஸ் அவுத் நீதிமன்ற ஆணையர் டபிள்யூ. யங் கிடம் மேல்முறையீடு செய்கிறார். ஆனால் அவரும் முறையீட்டைத் தள்ளுபடி செய்கிறார் (1886 நவம்பர் 1). அவர் தம் ஆணையில் இம்முறையீடுகளை 'அத்துமீறுபவை' எனக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது (மேலே சுட்டிய அதே கட்டுரை).

வழிபாட்டுத் தலங்கள் மீதான உரிமை கோரும் வேறு வழக்குகளும் ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்றுள்ளன. அப்படியொரு வழக்கை வழக்கறிஞர் பி.ஏ. செபாஸ்டியன் விவரிக்கிறார். கி.பி. 1722 தொடங்கி லாகூரில் சாகி;த் காங் என்ற முசுலீம் மசூதி ஒன்று இருந்து வந்துள்ளது. கி.பி. 1762இல் அம்மசூதி மகாராசா ரஞ்சித்சிங் என்ற சீக்கிய மன்னரின் ஆட்சிக்கு உட்படுகிறது. அன்று முதல் அது சீக்கியர் வழிபடும் குருத்துவராக மாற்றப்படுகிறது. 1935இல் அதை மீண்டும் முசுலீம்களிடம் கையளிக்கக் கோரி வழக்குத் தொடங்கப்படுகிறது.

வழக்கை உசாவிய பிரிட்டன் அரசப் பேரவை உரிமை வரையறை சட்டப்படி அதைத் தள்ளுபடி செய்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் ஓரிடத்தைத் தொடர்ந்து துய்த்து வந்தால் உண்மையிலே அவ்விடம் வேறொருவருக்கு உரிமையானதாக அதற்குமுன் இருந்திருந்தாலும், அது தொடர்ந்து துய்த்து வந்தவருக்கே சொந்தமாகிறது என்பதே உரிமை வரை யறைச் சட்டம். இதன்படி மசூதி குருத்துவாராக மாறி நீண்ட காலமாகி விட்டதால் சீக்கியர்களுக்கே அது உரித்தாகி விடுகிறது. மேலே விவரித்த பாபர் மசூதி தொடர்பான இரகுபார் தாஸ் வழக்கும் இந்த அடிப்படையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சியும் இங்கே கவனத்திற்குரியது. 1930களில் தோற்றம் பெற்ற இந்துத்துவா இயக்கங்களின் விளைவாக 1934இல் பாபர் மசூதியைச் சுற்றிக் கலவரம் நடைபெறுகிறது. அதில் பாபர் மசூதிக்குச் சிறிது சேதம் ஏற்படுகிறது. உடனே ஆங்கிலேய அரசு அச்சேதத்தைச் செப்பனிடுகிறது. அத்துடன் இல்லாமல் அதற்கான செலவைச் சேதம் விளைவித்த இந்துக்களிடமிருந்து தண்டமாகப் பெறுகிறது. (ஆனந்த் டெல்டும்ப்டே - - எங்கே செல்கிறது இந்தியர்களின் நம்பிக்கை கனம் நீதிபதிகளே? EPW நவம்பர் 13, 2010)

ஆனந்த் டெல்டும்ப்டே இன்னொரு நிகழ்வையும் குறிப்பிடுகிறார். அஃது அம்பேத்கர் தொடர்புடையது. அதுவும் உடைமை உரிமை தொடர்பானதுதான். மகதிலிருந்த சவதார் குளத்தில் அம்பேத்கர் தலைமையில் நடைபெறவிருந்த அறவழிப் போராட்டத்திற்குத் தடை விதிக்குமாறு கோரி சாதி இந்துக்கள் வழக்குத் தொடருகின்றனர். சவதார் குளம் தங்களின் தனிச்சொத்து. தீண்டாதவர்களுக்கு அதில் உரிமை இல்லை. அவர்கள் அத்துமீறி நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதே அவர்களின் வழக்கு. மகத் நீதிமன்றமும் அறவழிப் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து விடுகிறது. அம்பேத்கர் விடா முயற்சியுடன் தொடர்ந்து வழக்காடுகிறார். ஆங்கிலேய நீதிமன்றம் குளம் பொது உரிமையானது என்பதை ஏற்றுக் கொள்கிறது. அம்பேத்கரும் வெற்றி பெறுகிறார்.

அது ஆங்கிலேயர்களின் கீழான அடிமைக் காலம். தங்களின் அடிமைகளைப் பிரித்தாள வேண்டிய தேவை அவர்களுக் கிருந்தது. பிரித்தாளவும் செய்தனர். எனினும் தங்களின் குறுகிய நோக்கங்களுக்காக நீதிமன்றம் போன்ற ஆட்சி அமைப்;புகளின் பெருமைக்கு இழிவு நேரும்படி அவர்கள் நடந்து கொள்ளவி;ல்லை. அதனால்தான் இரகுபார் தாஸ் வழக்கில் முசுலீம்களின் உரிமை நிலை நாட்டப்பட்டது. மகத் வழக்கில் ஒடுக்கப் பட்டோருக்கு நீதி கிடைத்தது. பெரும்பான்மை இந்துக்களின் கடவுள் பற்றும் நம்பிக்கைகளும்; வெற்றி பெறவில்லை.

(சு)தந்திர இந்தியாவில் எல்லாமே தலைகீழாக மாறி விடுகிறது. 1949 திசம்பர் 22 நள்ளிரவில் மசூதியின் கதவுகள் உடைக்கப் படுகின்றன. இராமர் சீதை சிலைகள் மசூதியின் மையப்பகுதியில் வைக்கப்படுகின்றன. 50 பேர் கொண்ட கும்பல் இதனைச் செய்கிறது. பொது அமைதியைக் கெடுக்கின்ற குற்றச்செயல் இது. இந்தியக் குற்றவியல் சட்டம் 144, 145களின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குற்றவியல் சட்டம் 441இன் கீழ் வேறொருவருக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்த குற்றமும் ஆகும் இது. சட்டத்தின் ஆட்சியைப் பேணுகின்ற, அனைவர்க்குமான அரசாக இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? சிலைகள் அகற்றப் பட்டிருக்கும்? குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருப்பர்.

ஆனால் நடந்தது என்ன? ஒரு நாடகமே அரங்கேற்றப்படுகிறது. அப்போதைய தலைமை அமைச்சர் நேரு, தம் கவலையை வெளிப்படுத்தி வல்லபாய் பட்டேல் (துணைத் தலைமை அமைச்சர்), இராசாசி (கவர்னர் ஜெனரல்), கோவிந்த வல்லபந்த் (அப்போதைய உத்திரப் பிரதேச முதலமைச்சர்), தம் நெருங்கிய நண்பர் கே.ஜி. மசுருவாலா ஆகியோருக்குத் தொடர் கடிதங்கள் எழுதுகிறார். நேருவும், பட்டேலும் உ.பி முதல்வரைச் சிலைகளை அகற்றச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோருகிறார்கள்.

முதல்வரும் சிலைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பைசாபாத் துணை ஆணையர் கே.கே.கே. நாயருக்கு ஆணையிடுகிறார். ஆனால் அவர் முதல்வர்; ஆணையை ஏற்க மறுக்கிறார். சிலைகள் வைக்கப்பட்டது சட்டப்படிக் குற்றம் என்றாலும், அகற்றினால் சட்டம் - ஒழுங்கு கெட்டு விடும் என்கிறார். அரசுக்கு அவர் மாற்றுத் திட்டங்களை முன்வைக்கிறார்: மசூதியை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்துக்களும் முசுலீம்களும் உள் நுழையத் தடை விதிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூசாரிகளை இராமர் சீதை சிலைகளை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும். இந்துக்களும் முசுலீம்களும் தங்கள் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ளலாம். நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக்கக் கூடாது. அரசுக்கு அவர் முன்வைத்த திட்டங்களே பின்னர் நடந்தேறின. ஓய்வுக்குப் பின் கே.கே.கே. நாயர் ஜன சங்கத்தில் (அன்றைய பாசக) இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

கே.கே.கே. நாயர் அரசுக்குக் கடிதம் எழுதிய இரண்டே நாள்களில் பைசாபாத் கீழ்மன்ற நீதிபதி எம்.சிங் மசூதியைக் கையகப்படுத்திப் பிரியா தத்ராம் என்ற இந்துவை நடுநிலைக் காப்பாளராக அமர்த்தி ஆணையிடுகிறார். ஒவ்வொரு நாளும் இராமர் சீதை சிலைகளுக்குப் பூசை செய்ய நான்கு பூசாரிகளுக்கு இசைவு வழங்குகிறார். இவ்வாறாக மசூதி கோவிலாகும்.... படலம் தொடங்கி வைக்கப்படுகிறது.

1950 சனவரி 19இல் உரிமையியல் நீதி பதி பீர்சிங் முசுலீம் கள் மசூதிக்குள் நுழையவும்..... தொழுகை நடத்த வும் இடைக்காலத் தடை விதிக்கிறார். ஆனால் இந்துக்கள் தொடர்ந்து பூசை நடத்த இசைவளிக்கிறார். 1955 ஏப்ரல் 26இல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொள்கிறது. 1986 பிப்ரவரி 1இல் பைசாபாத் மாவட்ட நீதிபதி மூடப்பட்ட கதவைத் திறக்க ஆணையிடுகிறார். முசுலீம்களுக்கு அல்ல, இந்துக்களுக்கு- இராமர் சீதையை உள்ளே சென்று வழிபட. பின்னர் உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்கிறது. 1992 திசம்பர் 6இல் உலகமே பார்த்திருக்க முசுலீம்கள் துடிதுடிக்கக் கரசேவகர்களால் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்படுகிறது. 2010 செப்டெம்பர் 30இல் மசூதி இருந்த இடம் இராமர் பிறந்த இடமாக அறிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த நிகழ்ச்சிகளைக் கூர்மையாகக் கவனித்தால் 1949 அத்துமீறல் தொடங்கி எல்லாம் திட்டமிட்டு நிறை வேற்றப்பட்ட நிகழ்ச்சிகளாகவே தோன்று கின்றன. நமக்குக் கிடைக்கின்ற சான்றுகள் இந்த ஊகத்தை மெய்ப்பிப்பதாகவே உள்ளன.

நீதிபதி கான் தம் தீர்ப்பில் ஒரு கடிதத்தை வெளிப்படுத்துகிறார். 1949 நிகழ்ச்சியை நன்கு புரிந்து கொள்ள இக்கடிதம் உதவுகிறது. இது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிரிபால் சிங் துணை ஆணையர் கே.கே.கே. நாயருக்கு எழுதியது.     சிலை மசூதிக்குள் வைக்கப்படுவதற்கு ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பே (1949 நவம்பர் 29) இதை அவர் எழுதியுள்ளார்.

மசூதியைச் சுற்றியும் யாகம் செய்வதற்கான பெரிய குண்டங்கள் தோண்டப்படுவதாகவும் செங்கற்களும், சுண்ணாம்பும்........ கொட்டி வைக்கப் பட்டுள்ளதாகவும், அவர் அக்கடி தத்தில் குறிப் பிடுகிறார். அயோத் தியில் மசூதி உள்ள இடத்தைப் பார்வையிட்ட...... பிறகே அவர் இக்கடிதத்தை எழுதி இருக்கிறார். முழு நிலவின் பொழுது இந்துக்கள் பெரிய யாகத்திற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் மசூதியைச் சுற்றி பேரளவில் முற்றுகையிட்டு முசுலீம்களை அச்சுறுத்தி, மசூதியை அவர்கள் நெருங்கவிடா வண்ணம் செய்து, இறுதியில் வேறு வழியின்றி மசூதியைக் கைவிட்டு விட நெருக்கடி தருவதே அவர்களின் திட்டமாகத் தோன்றுகிறது என்றும் அவர் எழுதுகிறார். அன்று மசூதிக்குள் வலிய நுழைந்து தெய்வச் சிலைகளை நிறுவ இருப்பதாக ஒரு வதந்தி உலவுவதாகவும் அவர் தம் கடிதத்தில் தௌ;ளத் தெளிவாகக் குறி;ப்பிடுகிறார்.

ஆக, நடக்கப் போவது என்னவென்று கே.கே.கே. நாயருக்கு முன்கூட்டியே தெரியும். அவருக்குத் தெரிந்தது மற்ற அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமலிருக்க வாய்ப் பில்லை. முதல்வர் வல்லப பந்திற்கும் தெரியும். தலைமை அமைச்சர் நேருவுக்கும் தெரிந்திருக்கலாம். இவர்களுக்கு தெரியாமல் இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்காத துணை ஆணையர் மீது துறை நடவடிக்கை எடுத்திருப்பர். முதல்வர் ஆணையையே நிறைவேற்ற மறுத்த துணை ஆணையர் எந்தச் சிக்கலுமின்றி ஓய்வு பெறுகிறார்.

நேரு தன் நண்பர் மசுருவாலாவிற்கு எழுதிய கடிதத்தில் மாவட்ட அதிகாரி தவறாக நடந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். முதல்வர் பந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக வருந்துகிறார். (அரசியல் அயோத்தியாவிலிருந்து சட்ட அயோத்தியா வரை - - வித்யா சுப்பிரமணியம் - இந்து 2010இ அக் 16)

நேரு இன்றைய கருணாநிதி போல் கடிதங்கள் எழுதிப் புலம்பியதைத் தவிர வேறு எந்தத் திட்டவட்டமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. கருணாநிதி புல் பிடுங்கும் அதிகாரம் கூட இல்லாத பதவிப் பொம்மை, நேருவோ அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட தலைமை அமைச்சர். ஆனால் செயல்படத் தவறிய முதலமைச்சர் பந்த் மீது எந்நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. ஆனால் இதே நேரு பின்னாளில் எந்தச் சட்ட ஒழுங்குக் கேட்டிற்கும் காரணமாகாத நம்பூதிரிபாடு அரசை மகள் இந்திராவின் ஆலோசனையுடன் கேரளாவில் கவிழ்த்தார்.

1949 திசம்பர் 26இல் முதல்வர் பந்திற்கு அவர் விடுத்த தொலைவழியில் சிலை வைப்பு 'தீதான முன்காட்டு' என்றும் அது 'மோசமான விளைவுகளை' ஏற்படுத்தும் என்றும் அவர் தெளிவாகவே குறிப்பிடுகிறார் (அதே கட்டுரை). ஆனால் அந்த மோசமான விளைவுகளைத் தடுத்து நிறுத்த இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? காங்கிரசாரைக் குறித்தும் கடுமையாக நொந்து கொள்கிறார். “கடந்த காலத்தில் காங்கிரசின் தூண்களாக இருந்தவர்களின் மனங்களையும் நெஞ்சங்களையும் வகுப்புவாதம் நிறைத்துக் கொண்டதாக” வருந்தும் அவர், காங்கிரசைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் முடக்குவாதம்- பீடித்திருப்பதாகவும் சாடுகிறார் (அதே கட்டுரை).

நேருவின் இக்கூற்றை பாருங்கள்: “ஏதோ ஒரு அல்லது வேறு காரணத்திற்காக அல்லது ஒருகால் வெறும் வாய்ப்பு அரசியலுக்காக இந்த நோயுடன் மிகக் கூடுதலாக இணங்கிப் போயுள்ளோம் என்று எனக்குத் தோன்றுகிறது” (அதே கட்டுரை). ஆனால் நேருவோ காங்கிரசோ இந்த வாய்ப்பரசியலை விட்டு வெளிவந்ததே இல்லை என்பதுதானே வரலாறு. இந்து உரிமையியல் சட்டம் குறித்து அவர் அம்பேத்கருக்கு வழங்கிய வாக்குறுதியையும், பின்னர் அவர் காலை வாரி விட்டதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய ஆளும் வர்க்கத்தை மேலும் நன்கு புரிந்து கொள்ள வழக்கறிஞர் அனுபவ் குப்தா கட்டுரையின் (அயோத்யாத் தீர்ப்பை ஆய்ந்து னுளைளநஉவiபெ வாந யலழனாலய தரனபநஅநவெ நுPறு திசம்பர் 11, 2010) பின்குறிப்பிலிருந்து கிடைக்கும் செய்தி துணைபுரிகிறது. அது இதுதான்: 1950இல் குசராத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயிலைச் சீரமைக்கும் பணி நடந்துள்ளது. அப்பணிக்கு வெளிநாட்டிலுள்ள இந்தியத் தூதரகங்கள் நீரூம் மண்ணும் அனுப்பி வைக்கும்படி கேட்கப்பட்டுள்ளன. இச்சுற்றறிக்கைச் செய்தியே பீஜிங்கிலிருந்த இந்தியத் தூதுவர் கே.எம். பணிக்கரால்தான் வெளிப்பட்டுள்ளது. சுற்றறிக்கையைப் பார்த்துப் பதறிப்போன அவர் அதை வெளிப்படுத்தி விடுகிறார். அப்போதைய உணவுத் துறை அமைச்சர் கே.எம். முன்சிதாம் இச் சுற்றறிக்கையை அனுப்பியவர். வழக்கம் போல் நேரு கடுஞ்சினத்துடன் முன்சியைக் கடிந்து கொள்கிறார். மிகவும் சங்கடமளிக்கும் செயல் (ஆழளவ நஅடியசசயளளiபெ) எனச் சாடுகிறார். நேருவின் கீழ்க்கண்ட வரிகள் முகாமையா னவை: “நம்முடைய சில சிந்தனை யோட்டங்கள், செயல்கள் குறித்து மற்றவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என்ற புரிதலே இங்கில்லை என அஞ்சுகிறேன்…. இந்தச் செயல் என்னை மிகவும் கலக்கமுறச் செய்துள்ளது.” இந்த இழிசெயலுக்குக் காரணமான முன்சியைப் பதவியை விட்டு நீக்கியிருந்தால் நேரு பாராட்டுக்குரியவர் ஆகியிருப்பார். ஆனால் அவ்வாறு நடக்க வில்லையே! அதனால்தானே நேரு சோம்நாத் கோயில் பணிக்குத் துணை புரிந்ததாக அத்வானி பாராட்டுகிறார். (பார்க்க: மேற்காணும் கட்டுரை. இக்கட்டுரையாளரும் சரி, மேலே குறிப்பிட்ட 'இந்து' கட்டுரையாளர் வித்யா சுப்பிரமணியமும் சரி, நேருவை உயர்த்தியே பிடிக்கின்றனர்.)

நேருவின் காலம் இப்படி என்றால் இத்தாலியப் பெண்மணியைக் கைபிடித்த 'புதிய இந்தியாவின் பிதா' இராசீவ் காந்தியின் காலம் இன்னும் கேடானது. இவர்தாம் மசூதியைக் கோயிலாக்கியவர். 1986ஆம் ஆண்டு சா பானு வழக்கு - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு - முசுலீம்களை நிறைவு செய்யக் கொண்டுவந்த சட்டத் திருத்தம் - அதனால் வரும் தேர்தலில் இந்துக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். அதன் காரணமாய் இராசீவ் காந்தி நகர்த்திய அரசியல் சதுரங்கக் காய் அத்வானியின் 'ரத யாத்திரைக்கும்' மேலானது. இதில் அவருக்குத் தேர்தல் வெற்றி கிட்டியதோ இல்லையோ, இந்துத்துவ வாதிகளுக்குப் பேரூக்கம் கிடைக்கப் பெற்றது.

1986 சனவரி 31இல் பாபர் மசூதி வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லாத அரிசங்கர் தூபே என்பவரால் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாள் பிப்ரவரி முதல் நாள் மாலை 4 மணிக்கு வழக்கு உசாவலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அரை மணி நேரம் உசாவல். பின்னர் 4.30 மணிக்கு மசூதியின் கதவுகளை இந்துக்களுக்குத் திறந்து விட ஆணை பிறப்பிக்கிறார் நீதிபதி. அடுத்த இருபது நிமிடங்களில் மசூதியின் கதவு, இல்லை இல்லை, “இராமர் கோவில்” கதவு திறக்கப்படுகிறது. ஏற்கெனவே பெருமளவில் கூடியிருந்த இந்துக்கள் உள்ளே நுழைகின்றனர்.

இந்தத் தீர்ப்பின் சூத்திரதாரி இராசீவ் காந்தி என்றால் கதாநாயகன் நீதிபதி கே.எம். பாண்டே ஆவார். மசூதி வழக்கில் எத்தொடர்பும் இல்லாத ஒருவர் மனுத்தாக்கல் செய்ய நீதிபதி இசைகிறார். வழக்கிலே தொடர்புடைய முகமது காசிம் (வழக்கு எண் 4இன் வாதி) ஒருவரைத் தவிர மற்றெவருக்கும் இப்படி ஒரு வழக்கு உசாவலுக்கு வருவது தெரியவே தெரியாது. ஆனால், மாவட்ட நடுவருக்கும், காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் வழக்குத் தொடர்பான செய்தி அறிவிக்கப்பட்டு, அவர்கள் நேரில் தோன்றி, கதவு திறக்கப்படுவதால் அமைதி கெடாது என உறுதி அளிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட முகம்மது காசிம் தம்மை வழக்கில் இணைத்துக் கொள்ளும்படியும், மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் படியும் அளித்த விண்ணப்பத்தை நீதிபதி ஏற்க மறுக்கிறார். பாண்டே நீதிபதியாகவும் நடந்துகொள்ள வில்லை. அவர் வழங்கிய தீர்ப்பில் எள்ளளவு நீதியும் இல்லை! நீதிக்கான தோற்றமும் கூட இல்லை.

பாண்டே அன்று அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம் உண்டு. அன்று அவர் முழுக்க 'அனுமாரால்' ஆட்கொள்ளப்பட்டு இருந்திருந்திருக்கிறார். உள்ளிருந்து ஒரு குரல் அவரை வழிநடத்தியிருக்கிறது. இதை அவரே தம் வாழ்க்கை வரலாற்று நூலில் (மனச்சான்றின் குரல்) வெளிப்படுத்தி உள்ளார். தீர்ப்பு வழங்கும் போது கருங்குரங்கு ஒன்று நீதிமன்றக் கூரையில் கொடிக் கம்பத்தைப் பிடித்தவாறு அமர்ந் திருந்ததாகவும், அங்குவந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அளித்த பழங்களையோ, கடலையையோ அது தொடவில்லை என்றும், இறுதித் தீர்ப்பு வழங்கியவுடன், அது அங்கிருந்து அகன்று விட்டதாகவும், தாம் வீடு திரும்பிய பொழுது, வீட்டுத் தாழ்வாரத்தில் அது அமர்ந்திருந்ததைக் கண்டு வியந்து போனதாகவும் பாண்டே மெய்சிலிர்க்க எழுதுகிறார். அவர் மேலும் எழுதுகிறார்: “ஏதோ ஒரு தெய்வீக ஆற்றல் எனப் பாவித்து வணக்கம் செலுத்தினேன்.”

பாபர் மசூதி வரலாற்றில்; அனுபம் குப்தா கூறுவதைப் போல 1949, 1986 இரண்டும் திருப்பு முனைகள். 1949இன் குற்ற இழிவையும் 1986இன் சட்ட முறைகேட்டையும் நீதிபதி கான் தம் தீர்ப்பில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளதாகக் குப்தா தெரிவிக்கிறார். பூட்டுகள் திறக்கப்பட்டது...... சிக்கலை நாடு முழுவதற்கும், ஏன், உலகளவிற்கு ஒரு நொடியில் கொண்டு சென்று விட்டது.

கான் தம் தீர்ப்பில் எழுதுகிறார்: அதற்கு முன் அயோத்தியையும் பைசாபாத்தையும் தாண்டி இத்தகராறு யாருக்கும் தெரியாது. 01.02.1986 நாளிட்ட ஆணையானது தொடர் எதிர்வினையைத் தூண்டி 06.12.1992 தகர்ப்பிற்கு இட்டுச் சென்று விட்டது. கானின் உள்ளக் கிடக்கை இங்கே அப்படியே வெளிப்பட்டுள்ளது.

1992 திசம்பர் 6 - இருபதாம் நூற்றாண்டு 'இந்திய' வரலாற்றில் பொன்னெழுத்துகளால் (?) பொறிக்க வேண்டிய நாள் அந்த நாள். இந்தியாவின் சட்டங்கள், சட்டத்தின் ஆட்சி என்பனவெல்லாம் ஓடி ஒளிந்து கொண்ட நாள். சாணக்கியனும், மனுவும் மீண்டும் ஒருமுறை தங்கள் வெற்றியைப் பதிந்து கொண்ட நாள். அரசமைப்பின் மீது உறுதி கூறிப் பதவி ஏற்றுக் கொண்டவர்கள் வாழ்த்துக் கூற, சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்கள் சுற்றிக் குழுமியிருக்க, அரசமைப்பு குழிதோண்டிப் புதைக்கப்பட்ட நாள். அரசமைப்புச் சிற்பி அம்பேத்கர் நினைவு நாள் என்பது கொலை பாதகச் செயலைத் திட்டமிட்டோருக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. தெரிந்து தெளிவான திட்டத்துடன்தான் அந்நாளைத் நேர்ந்தெடுத்துள்ளனர். அம்பேத்கர் மீண்டும் ஒரு முறை புதைக்கப்பட்டார்.

மசூதி இடிப்பு நிகழ்ச்சியை பி.ஏ. செபாஸ்டியன் இப்படிப் படம் பிடிக்கிறார். 1992 திசம்பர் 6 அயோத்தியில் ஆயிரக்கணக் கானோர் கூடினர். அவர்களை பாரதிய சனதாக் கட்சி இந்து அடிப்படை அமைப் புக்களின் உயர் தலைவர்கள் வழி நடத்தினார்கள். அவர்க ளில் பலர் மசூதியை அடித்து நொறுக் கும்படிக் கூட்டத் தினருக்கு அறைகூவல் விடுத்து உரையாற் றினார்கள். இந்திய அரசின் ஆயுதப் படைகள் பேரளவில் குவிக்கப்பட்டிருந்தன. கும்பல் மசூதியை நொறுக்கித் தரைமட்ட மாக்கியபோது, ஆயுதப் படையினர் கும்பலோடு சேர்ந்து எக்காளமிட்டனர். மசூதி இடிப்பை இந்திய அரசு துணைநின்று எளிதாக்கியது. சிலைகள் வைக்க உதவியது போலவே குற்றச் கொடுஞ்செயலாம் மசூதி இடிப்புக்குத் தன்னாலான அனைத்தையும் செய்து அதனை நிறைவேற்றித் தந்தது இந்திய அரசு. ஏற்கெனவே சுட்டிக்காட்டிய செபாஸ்டியான் கட்டுரை வழிபாட்டுத் தலம் ஒன்றை அழிப்பதற்கு அரசியல் இயக்கம் நடத்தியதும் அதில் வெற்றி கண்டதும் உலக வரலாற்றில் இதுவே முதலாவதாக இருக்க வேண்டும். இந்திய அரசு நினைத்திருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம். அதற்கான அதிகாரமும் வலிமையும் அதனிடம் இருந்தன. ஆனால் செபாஸ்டியன் விவரித்திருப்பது போல் இந்திய அரசும் சேர்ந்தல்லவா குற்றச் செயல் புரிந்துள்ளது. குற்றச் செயல் புரிவதற்கான ஊக்கியே அதுவாக அல்லவா இருந்துள்ளது?

       மசூதி இடிப்பிற்கு எந்த வகையிலும் குறைந்ததன்று அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு. முன்னது பண்பாட்டுச் சின்ன அழிப்பு, பின்னது மனித குல நீதி அழிப்பு, மனித குல அழிப்பு, மனு நீதியின் மறு உயிர்ப்பு! தீர்ப்பின் பல்வேறு பரிமாணங்களும் பல தளங்களில் விவாதிக்கப் பட்டுள்ளதால் முகாமையான புள்ளிகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

       பாபர் மசூதி தொடர்பான மொத்தம் நான்கு வழக்குகள் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. முதல் வழக்கு கோபால்சிங் விசாரத் என்பவர் 1950 சனவரி 14 இல் தொடுத்ததாகும். இராமர் சீதை சிலைகளை வழிபட உரிமை கேட்டுத் தொடுக்கப்பட்ட வழக்காகும் இது. இடத் திற்கான உரிமை இதில் கோரப்பட வில்லை.

       இரண்டாவது வழக்கு 1959 நிர்மோகி அகாரா வழக்காகும். நினைவு தெரிந்த காலந்தொட்டு தாங்கள் அங்கு வழிபாடு நடத்தி வருவதாகச் சொல்லி கோயிலின் நிர்வாகத் தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுவதே அவ்வழக்கு. அகாரா என்பது இந்து மதத்தில் ஒரு வைணவப் பிரிவாகும்.

       மூன்றாவது வழக்கு (1961 திசம்பர் 18) சன்னி வக்ப் வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்டது. சிக்கலுக்குரிய இடத்தில் மசூதி இருப்பதாக அறிவிக்கக் கோரியே முதலில் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. 1995இலேயே மசூதி இடம் தங்களுக்குரியதென அறிவிக்கக் கோரி மனுவில் திருத்தம் செய்யப்பட்டது.

       நான்காவது வழக்கே (1989) பகவான் சிறிராம் வழக்காகும். பார்ப்பனரின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் வழக்கு இது. இவ்வழக்கு வெற்றி பெறுகிறது. முதல் மூன்று வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இந்த வழக்கைத் தாக்கல் செய்தவர் தியோகி நந்தன் அகர்வால் என்பவர். விசுவ இந்து பரிசத்தின் அப்போதைய துணைத் தலைவர். ஆனால் அதற்கு முன்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

       வழக்கில் எது வெற்றி பெறும் என்பதையும், அதன் நெளிவு சுளிவுகளையும், தெரிந்தவர். இந்து மதச் சட்டத்தில் கடவுள் கோயில், கடவுள் சிலை ஆகியன சட்ட உரிமை படைத்தனவாகும். அவை நீதிமன்றத்தில் வழக்காடலாம். அதாவது அவற்றின் சார்பில் பூசாரியோ அறங்காவலரோ வழக்குத் தொடுக்கலாம். இங்கு இராமனின் “அடுத்த நண்பர்” இராம லாலாவன் சகா அகர்வால் சட்டம் தரும் உரிமையில் படிநிகராளியாக (Representative in Law) இவ்வழக்கைத் தாக்கல் செய்கிறார். அகர்வால் இறந்த பின்பு டி.பி. வர்மா இராமனின் 'சகா' ஆகிறார். அவரும் நோய்வாய்ப்படவே இப்பொழுது கரசேவக்புரத்தில் வசித்து வரும் இராட்டிரிய சுயம் சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) இன் பிரச்சாரகரான திரிலோகி நாத் பாண்டே இராமரின் சகாவாகி இராவணன்களை வென்று வெற்றிவாகை சூடியுள்ளார். சட்டங்கள் யாருக்கு எப்படித் துணை போகின்றன என்று பாருங்கள். முதல் வழக்கு (விகாரத் வழக்கு) மனு முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை (Technically Deficient) என்பதாலும், வழக்கைத் தொடுத்தவருக்குச் சட்டத்தகுநிலை இல்லை என்ற காரணம் காட்டியும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டாவது வழக்கு (நிர்மோகி அகாரா வழக்கு) காலம் கடந்த வழக்கு என்பதாலும் வழக்காடித் தம் வழக்கை மெய்ப்பிக்கத் தவறிவிட்டார் என்பதாலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

       மூன்றாவது வழக்கான வக்பு வாரியத்தின் வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடி செய்யப் பட்டதற்கான காரணங்களில் முதன்மையானது சிக்கலுக்குரிய இடம் வக்பு வாரியத்தின் உடைமையாய் நேர்வகையிலேயோ எதிர்வகையிலேயோ (In adverse possession) எப்பொழும் இருந்தது இல்லை என்பதாகும். மேலும் வழக்குத் தாக்கல் செய்த வக்பு வாரியம் சன்னி முசுலீம் பிரிவாகும். ஆனால் மசூதியைக் கட்டியவர் மீர் பாகி என்ற சியா முசுலீம் ஆவார். வழக்கு காலங்கடந்து தாக்கல் செய்யப்பட்டதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

       நான்காவது வழக்கான பகவான் சிறிராம் வழக்கே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வழக்கின் மையக் கோரிக்கைகளான இராமர் பிறந்த இடம் மசூதியின் குவி மையப் பகுதி என்பதும் கோயில் இருந்த இடத்திலேயே கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது என்பதும் பன்னெடுங்காலமாய் இந்துக்கள் அங்கே வழிபட்டு; வருகிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. வழக்காடுபவர் குழந்தை இராமர்;, அவர் எங்கும் உள்ளவர்: என்றும் உள்ளவர். அவருக்குக் காலவரம்பு விதி பொருந்தாது. அதனால்தான் 1961இல் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரியத்தின் மனு காலம் கடந்தது என்று தள்ளுபடி செய்யப்பட்டாலும் 1989இல் தாக்கலாகிய இராமர் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

       இப்படிப் பல முரண்கள் தீர்ப்பிலே உள்ளன. அவற்றிலே பெரிதும் உறுத்தலாக இருப்பது தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கும் நிலத்தை பிரித்துக் கொடுத்ததுதான். அதனால்தான், இராசீவ் தவான் போன்ற வழக்குரைஞர்கள் இதைக் 'கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு" என அழைத்தார்கள். தினமணியும் கூட அப்படித்தான் அழைத்தது. 'இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால், அவர்களுக்கும் ஆளுக்கொரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழி வகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ?" என்று அது பகடி செய்தது (தினமணி 01.10.2010 தலையங்கம்). முழு இடமும் இந்துக்களுக்கு வழங்கப்படவில்லையே என்ற வருத்தத்தில் தான் தினமணி அப்படி எழுதியுள்ளது. குருமூர்த்திகளுக்கும் சுப்பிரமணிய சுவாமிகளுக்கும் இந்த வருத்தம்...... நிறையவே உண்டு.

 5,200 பக்கங்கள் தீர்ப்பெழுதி கின்னசு சாதனை புரிந்துள்ள நீதிபதி சுதிர் அகர்வால் ஆராயப்பட வேண்டிய இரு வகைச் சிக்கல்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று மெய்ச்சான்று தொடர்பானவை, இரண்டு சட்டம் தொடர்பானவை. ஆனால் கனம் நீதிபதிகள், குறிப்பாக நீதிபதி சுதிர் அகர்வாலும், நீதிபதி தரம்வீர் சர்மாவும் நம்பிக்கைகளையும், மதநூல் செய்தி களையுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்துள்ளார்கள். ஏற்கெனவே முடிவு செய்துகொண்ட தீர்ப்பிற்கு ஏற்ப சட்டத்தை நுட்பமாக வளைத்துத் திரிப்பதற்குத் தங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி உள்ளார்கள்;. தீர்ப்பின் நம்பகத் தன்மைக்குத் துணை சேர்க்க இந்திய அகழ்வாய்வு நிறுவனத்தைத்  திறம்படப் பயன்படுத்தி உள்ளார்கள் இந்திய அகழ்வாய்வு நிறுவனம் அவர்களுக்கு வேண்டிய சான்றுகளை எல்லாம் வேண்டியவாறே தந்து உதவியது.

       குறிப்பாக நீதிபதி தரம்வீர் சர்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். நீதிபதியாக அவர் தீர்ப்பு எழுதி உள்ளார் என்பதை விட இராம ஜென்ம பூமி வழக்குரைஞராக வாதாடி உள்ளார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அவரைப் பற்றி தீ நிய+ இண்டியன் எக்ஸ்பிரஸ் (01.10.2010) சிறப்பான குறிப்புரைகளைத்; தருகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆழ்ந்த மத நம்பிக்கையாளர். பெரும்பாலும் இந்தியையே பயன்படுத்துபவர்: கடுஞ் சைவர், தம் உணவைத் தாமே சமைத்துக் கொள்பவர், பிரமச்சாரி! 1700 பக்கங்கள் அடங்கிய அவரது தீர்ப்பு மேலும் நன்கு அவரைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

 சிக்கலுக்குரிய இடமே இராமர் பிறந்த இடம் என்று அறுதியிட்டுத் தீர்ப்புரைக்கும் அவர் பாபர் கட்டியது மசூதியே கிடையாது என்கிறார். இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிராகக் கட்டப்பட்டுள்ள அக்கட்டடம் கோயிலை இடித்தே கட்டப்பட்டது என்கிறார். நினைவு தெரிந்த காலந்தொட்டு இந்துக்கள் அங்கே இராமரை வழிபட்டு வருவதால் அவ்விடம் முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என்பதே அவர் தீர்ப்பின் சாரம். அவர் தம்மை வெளிப்படையாகவே முசுலீம் எதிர்ப்பாளராகக் காட்டிக் கொள்கிறார். முசுலீம் சாட்சிகளின் அனைத்துச் சான்றுரைகளையும் ஒதுக்கித் தள்ளியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக அவுரங்க சீப்பை பாபரின் பிறங்கடை(a Descendant of Babar) என்றும், அவருடைய (அதாவது அவுரங்க சீப்புடைய) குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் இழிவு கலந்த எள்ளலோடு எழுதுவது முசுலீம் வெறுப்பின் உச்சத்தையே காட்டுகிறது. (அனுபம் குப்தா மேலே கூறப்பட்ட அதே கட்டுரை) யாரிடமிருந்து யார் நீதியை எதிர்பார்ப்பது? பாரதிய சனதாக் கட்சியில் கர்மாவிற்கும் பதவி உண்டு என்பது மட்டும் உறுதி.

       நீதிபதி சுதிர் அகர்வால் வேதங் களையும், புராணங்களையும் மற்ற பிற இந்து சமய நூல்களையும் கரைத்துக் குடித்தவராகத் தெரிகிறது. சமய நூல்களிலிருந்து நீண்ட நெடிய மேற்கோள்களைக் காட்டுகிறார். ஆனால் அவற்றை எல்லாம் எந்த வகையான அறிவியல் பார்வைகளுக்கும் உட்படுத்தாமல் அப்படியே சான்றுகளாக ஏற்றுக் கொள்கிறார். அவரின் தீர்ப்புக்கு அவையே அடிப்படையாகி உள்ளன. காட்டாக இந்து சாட்சி ஒருவர் அதர்வண வேதத்திலிருந்து காட்டும் மேற்கோளையே இராமர் பிறந்த இடத்திற்கான சாட்சியாக ஏற்கிறார். அந்த வரிகள் அயோத்தியாவை நான்கு சக்கரங்களுடன், ஏழு வாயில்களுடன் திகழ்வதாக வண்ணிக்கிறது. அங்குதான் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான இராமர் மிளிரும் ஒளியோடு குழந்தையாக முதன் முதலில் தோற்றம் தருகிறார் என்று மேலும் தொடர்கின்றன அச்செய்யுள் வரிகள் (கும்கும்ராய் Kumkum Roy - Issues of Faith - EPW திசம்பர் 11, 2010). எவ்வளவு பெரிய சிக்கலுக்கு எதைச் சான்றாகக் கொள்வது? பழமையில் ஊறிய பத்தாம் பசலி இந்துத்துவவாதியாக எந்த வெட்கமும் இன்றி அவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

       இவ்விரண்டு நீதிபதிகளில் தனித்து நிற்பவர் சிங்காத் உல்லாகான். அவ்விரண்டு நீதிபதிகளில் ஒருவர் (சர்மா) முசுலீம் எதிர், மற்றொருவர் (அகர்வால்) முஸ்லீம் அல்லாதவர், இவர் மட்டுமே முசுலீம். நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்து- முசுலீம் வழக்கில் மேற்சொன்ன இருவருக்கிடையே இவரால் என்ன செய்ய முடியும்? அவர் தம்முடைய தீர்ப்பை (285) இப்படித் தொடங்குகிறார். “தேவதைகள் நடமாட அஞ்சும் சிறிய நிலத்துண்டு (1500 சதுர கெசங்கள்) ஒன்று இங்கே உள்ளது. அது எண்ணிலடங்கா கண்ணிவெடிகளால் நிரம்பி உள்ளது. அவற்றை அகற்ற நாங்கள் கோரப்பட்டுள்ளோம். மிகவும் தெளிந்த அறிவுடையோர் இந்த முயற்சி வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தினார்;கள். முட்டாள்களைப் போல் முண்டியடிக்க எங்களுக்குத் திட்டமில்லை. தவறினால் நாங்கள் பிய்த்தெறியப்படுவோம். எனினும் இந்த இடரை நாங்கள் எதிர் கொண்டாக வேண்டும்." கானின் இக்கவித்துவ வரிகளே அவரின் நிலையை விளக்கி விடுகின்றன. மூவர் தீர்ப்பில் இவரது தீர்ப்புத்தான் தனித்த சிறுபான்மைத் தீர்ப்பு. கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லியிருப்பது போல, 1949 நிகழ்வின் குற்றத் தன்மையையும் 1986 சட்ட முறைகேட்டையும் இவர் தம் தீர்ப்பில் சரியாக வெளிப்படுத்தி உள்ளார். இராமர் பிறந்த இடமாக இவர் மசூதியை ஏற்றுக் கொண்டாலும், சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தை பிறந்த இடமாக இவர்; சொல்லவில்லை. அதேபோல் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் இவர் குறிப்பிடவில்லை. இடிபாடுகளுக்கு மேல் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். சிக்கலுக்குரிய இடம் நீண்ட காலமாகவே இரு பிரிவினராலும், பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். கட்டடம் முசுலீம்களின் வழிபாட்டுத் தலம் என்பதையும் அது பாபரால் கட்டப்பட்டது என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்.

       கானின் மனதைப் புரிந்துகொள்ள அவர் முசுலீம்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் முகாமையானது: நபிநாயகர் ஒரு கட்டத்தில் எதிரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அவருடைய நெருக்கமான ஆதரவாளர்களே இதை மோசமான விட்டுக்கொடுப்பு என்கிறார்கள். ஆனால் குரான் அதைத் தெளிவாக வெற்றி எனக் குறிப்பிடுகிறது. குறுகிய காலத்தில் அது மெய்ப்பிக்கப்பட்டது. ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் மெக்காவிற்குள் முசுலீம்கள் வெற்றியாளர்களாக நுழைந்தார்கள். இந்நிகழ்ச்சியைக் கூறி விட்டுத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் படியும் 1992 வீழ்ச்சிபோல் மீண்டுமொரு வீழ்;ச்சி வந்தால் முசுலீம்கள் எழுந்திருக்க முடியாது என்றும் முசுலீம்களை ஆற்றுப்படுத்த வழிதேடுகின்றார். இது நீதிபதி கானின் நிலை மட்டுமன்று. ஒட்டுமொத்த முசுலீம்களின் மனநிலையும் இதுவே. கையறு நிலை, இனி என்ன செய்வதென்ற திகைப்பு. தீர்ப்புக்குப் பின் முசுலீம்களிடையே நிலவிய அமைதி - இக்கட்டான இச்சூழலைத்தான் சொல்லாமல் சொல்கிறது. இது ஏறத்தாழ முள்ளிவாய்க் காலுக்குப் பின்னாலான ஈழத் தமிழர்களின் மனநிலையை ஒத்தது.

       ஆங்கிலேயர் கால நிகழ்வுகள்! ஆங்கிலேய நீதிமன்றத் தீர்ப்புகள்! இந்தியர் ஆட்சிக்கால நிகழ்வுகள். இந்திய நீதிமன்றத் தீர்ப்புகள். பண்டிட் சவகர்லால் நேரு, வல்லப பந்த், கே.எம்.முன்சி, அத்வானி, இராசீவ் காந்தி, நரசிம்மராவ், கல்யாண் சிங் என நீளும் பட்டியல் ஒருபுறம். கே.கே.கே. நாயர், பீர்சிங் கே.எம். பாண்டே, சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா என நீளும் பட்டியல் மறுபுறம்; தொகுத்துப் பார்த்தால் இது மனுநீதியின் மறுகட்டமைப்பு என்பது புரியும். இதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சிறுபான்மை மக்களுக்குத் தேசிய இனங்களுக்கு நீதி கிடைக்கவே கிடைக்காது. மனுநீதியில் பார்ப்பானுக்கு ஒரு நீதி என்பதை நாமறிவோம். பாபர் மசூதித் தீர்ப்பு மனுநீதித் தீர்ப்புத்தானே? அத்துமீறி நுழைந்தவர்கள், கொடிய வன்முறையாளர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்டவர்களின் நிலம் அவர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஊமையாக்கப்பட்டுள்ளனர். மீறி வாய் திறந்தால் பயங்கரவாதியாகப் படம் பிடிக்கப்படுவார்கள்.

       அன்று மனுவாதிகள் தங்களை எதிர்த்தோரை அரக்கர்களாகக் கட்டமைத்தனர். இன்றும் அவர்கள் வழிவந்த புதிய மனுவாதிகள் தங்களை எதிர்ப்போரைப் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், மாவோயிசுட்டுகள் எனப் புது பட்டம் சூட்டி வன்முறையை ஏவுகின்றனர். அன்று கடவுளும், மதமும், மக்களைக் கட்டி வைக்கப் பயன்பட்டன. இன்று கட்சிகளும் தேர்தல்களும் மக்களை ஏமாற்றப் பயன்படுகின்றன. இப்படி ஒப்புமையை நீட்டிக் கொண்டே போகலாம். புரிந்து கொள்ள வேண்டியது இந்தியக் கட்டமைப்பையும், அதன் அதிகார வர்க்கத்தையும், இவற்றைத் தூக்கி எறியாமல் யாருக்கும் விடுதலை இல்லை என்பதையும் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் இதை உணர்ந்து கை கோக்க வேண்டும். குறிப்பாகச் சிறுபான்மை முசுலீம்கள் போராடும் அனைவ ரோடும் இணைய வேண்டும். இல்லையெனில் மசூதி இடிப்புக்களும் இராமர் அவதாரங்களும் தொடரவே செய்யும்.

Pin It