தோழர் குறிஞ்சி, புதுமலர் மகளிர் சிறப்பிதழுக்காக என்னை எழுதச் சொன்னபொழுது, இந்த வெளியீட்டிற்கு அவர் கடைப்பிடிக்கும் தரநிலை எனக்குத் தெரியும் என்பதால் நான் தயங்கினேன். ஆயினும் என்னை ஊக்குவித்து எழுதிட வைத்துள்ளார். இதில் உள்ள குறைகள் அனைத்தும் எனது, நிறைகள் இருப்பின் அவை அனைத்தும் தோழர் கண.குறிஞ்சி அவர்களுடையது.
புதுமலர் வாசகர்கள் பலரும் சட்டம் படித்தவர்களாகவோ சட்டம் அறிந்தவர்களாகவோ இருப்பீர்கள். இந்திய ஜனநாயகத்தில் அரசியல் சாசனமே அடிப்படைச் சட்டம். இந்திய அரசியல் சாசன நாள் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் அல்லது சட்ட தினம் எனப்படும் இந்நாள், ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நமது குடியரசுத் தலைவர் முதல் அரசாங்கத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வரை எல்லோரும் அன்று நமது அரசியலமைப்புச் சாசனத்தின் முகப்புரையைப் படித்து, அதன்படி நடப்போம் என்று உறுதிமொழி எடுப்பது வழக்கமாகி விட்டது. நமது நாட்டில் வாக்குறுதிகளுக்குக் குறைவில்லை. இதுவும் அதில் ஒன்று.
சத்தியமேவ ஜயதே / வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் முக்கிய முழக்கம். இதனால் நமது நாடும் மக்களும் உண்மையைத் தங்கள் நடவடிக்கைகளிலும் வாழ்விலும் கடைப்பிடிப்பார்கள் என்றும், தவறினால் அது குற்றமாகும் என்றும் கனவிலும் நினைக்க வேண்டாம். நீதிமன்றங்களிலும் மற்ற அலுவலகங்களிலும் தாக்கல் செய்யும் பிரமாண வாக்குமூலங்களிலேயே உண்மைக்குப் புறம்பான செய்திகள், தவறு என்று தெரிந்தும் கொடுக்கப்படுகின்றன. நமது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) அதன் புதிய வடிவமான பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற இரு குற்றவியல் சட்டங்களும் தவறான சாட்சியங்களை வழங்குதலையும், தவறான ஆதாரங்களை உருவாக்குதலையும் தண்டனைக்குரிய குற்றங்களாக்கியுள்ளன. ஆயினும் நம் பிரதமர் முதல் பல தலைவர்கள் எந்தவொரு குற்ற உணர்வுமின்றிப் பொய் பேசுவதையும், நம் நீதிமன்றங்கள் அவற்றைக் கண்டுகொள்ளாது தம் கடமையைச் செய்யாது வழுவுவதையும் காண்கிறோம்.
இன்றுவரை, புதிய குற்றவியல் சட்டங்கள் சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற வடிவிலேயேதான் உள்ளன. ஆங்கிலேயர்களைச் சரமாரியாகக் குறை கூறும் நாம், வாய்மையே வெல்லும் என்று தம்பட்டம் அடிக்கும் நாம், அவர்கள் நீதிமன்றங்கள் மூலம் எப்படி உண்மையை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதை கீழே குறிப்பிடும் ஒரு வழக்குடன் தெளிவாக்க விழைகிறேன்.
இங்கிலாந்தில் ஜெஃப்ரி ஹோவர்ட் ஆர்ச்சர் என்பவர் ஒரு பிரபல எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக (1969 - 1974) இருந்த அரசியல்வாதி. 1985-இல் ஆர்ச்சர், கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவரானார். இவர் மீது 'டெய்லி ஸ்டார்' (Daily Star) என்ற ஒரு செய்தித்தாள் நிறுவனம், இவர் ஒரு விபச்சாரிக்குப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியது. ஆகவே இவர் பதவி விலக வேண்டி வந்தது. 1987ஆம் ஆண்டில், ஜெஃப்ரி அந்தப் பத்திரிகை மீது அவதுறு வழக்குத் தொடுத்து நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றுப் பெரும் நஷ்டஈட்டுத் தொகையாக £500,000 பெற்றார். 1992-இல் லண்டனின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக வேட்பாளரானார். பிறகு 1987 அவதுறு வழக்கில் இவர் பொய் கூறியது நிரூபணமானதையடுத்து, நான்கு ஆண்டுச் சிறை தண்டனை பெற்று 1999-இல் பதவி விலகினார். பொய் சாட்சியம் அளித்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பெற்ற நஷ்டஈட்டையும் அபராதத்தையும் (£1.5 மில்லியன்) கொடுக்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடவில்லை.
ஆனால் நம் நாட்டில் சட்டங்களை மதிக்காது பொய்யான சத்தியப் பிரமாணங்களைத் தாக்கல் செய்து பதவிக்கு வருவதும், அதை நீதிமன்றங்களே கண்டும் காணாது அவர்கள் பதவிகளில் இருக்க உதவுவதும் இயல்பாக உள்ளது. நம் பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் தனது கல்வித் தகுதி பற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் முன்பு பொய்யான சாட்சியங்கள் அளித்துத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். இது உலகுக்கே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிந்தும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, அவர் கூற்றுக்கள் உண்மையானவையா என்று அறிந்து கொள்ளக் கூட நம் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையம் விடவில்லை. நீதிமன்றங்களும் உண்மைத் தகவல் அறிய உள்ள வாய்ப்புகளை ஆணையம் மறுப்பது சரி என்று கருதி, மக்கள் உண்மை அறியாது பொய் சொல்லும் அரசியல்வாதி பதவியில் தொடர வழிவகை செய்துள்ளது.
அரசு ஊழியர்கள் குற்றவியல் சட்டங்களில் கூறியுள்ள எந்தப் பிரிவை மீறினாலும், அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடையதாக இருந்தாலும், அதற்கும் அவர்கள் பணிக்கும் தொடர்பு இல்லை என்றாலும் தண்டிக்கப்படுவர். ஆகவே தனி ஒழுக்கம் கடைப்பிடித்து, இருதார மணமின்றிப் பெண்களை (தாய், மனைவி, சகோதரி, குழந்தைகள்) மதிப்புடன் நடத்த இவர்கள் கடமைப்பட்டவர்களாகிறார்கள். ஆனால் நமது அரசியல் தலைவர்களான, பெரும் செல்வந்தர்கள் இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டு முறையற்ற வாழ்க்கை வாழ்வதை இயல்பாகப் பார்க்கிறோம். முறையாக விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்து கொண்ட ஓர் அரசாங்கப் பணியாளர் மீது முன்னாள் மனைவி வழக்குத் தொடுத்தபொழுது, "அவர் இப்போது இருக்கும் மனைவியுடனும் உங்களுடனும் இருக்கட்டும்" எனக் கூறினார் மேதகு நீதிபதி. இது "Buy one take one free மாதிரி இருக்கே, why don't you consider? என்று அப்பெண்ணிடம் கேட்ட சோகம் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அன்று அந்தக் கேள்விக்குப் பதிலாக நான்:
"அவர் ஓர் அரசுப் பணியாளர் மட்டுமே, முதலமைச்சர் அல்ல. எனவே கூடா ஒழுக்கத்திற்காக அவர் இழுத்துச் செல்லப்பட்டுத் தனது வேலையை இழந்து விடுவார். அவர் இரண்டு பெண்களோடும் வாழ மாண்புமிக்க இந்த நீதிமன்றம் ஆணையிட முடியுமா?" என்று கேட்டேன்.
இவ்வாறு பெண்களின் நிலையைச் சிரிப்புக்கு இடமாக்கி நீதிமன்றங்கள் பல நேரங்களில் உணர்வற்ற முறையில் பேசுவதைக் காண்கிறோம். நமது அரசியலமைப்பு 'சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டத்தின் சமப் பாதுகாப்பு' என்று கூறும் தலையாய கோட்பாடு ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.
நான் தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் கல்பனா கருணாகரன் தன் பாட்டியின் சுயசரிதை குறித்து எழுதியுள்ள, 'அ வுமன் ஆஃப் நோ கான்சிக்வென்ஸ்' (A Woman of No Consequence) என்பதாகும். கல்பனாவின் அம்மா மைதிலி சிவராமன். அவர் இதற்கு முன்பே அவர்களின் பாட்டி சுப்புலக்ஷ்மி பற்றி 'பிராக்மென்ட்ஸ் ஆஃப் அ லைஃப்: அ ஃபேமிலி ஆர்க்கைவ்' (Fragments of a Life: A Family Archive) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவை இரண்டையும் படித்தாலே நமக்குப் பெண்களின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை விருப்பு வெறுப்பு, அவர்களின் மௌனமான போராட்டங்களை அறிய முடிகிறது. தங்களது சாதி மதத்திற்குள் மணமுடித்து வாழ்ந்தவர்களுடைய சுயசரிதையே மனதை நெகிழ்விக்கிறது. ஒரு நிமிடம் நான் என் வீட்டிற்குள் பார்த்தேன்.
ஆறு அல்லது ஏழு வயதில் திருமணம் செய்யப்பட்டு, அடுத்த வருடமே கைம்பெண் ஆகி, பிராமண சமூகத்தின் பிடியிலிருந்து ஒரு பெரியாரின் தொண்டரால் மீட்கப்பட்டு, டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரனால் வளர்க்கப்பட்டு, அவர்களையும் எதிர்த்து, கலப்புத் திருமணம் செய்து கொண்டு தன் காலில் நின்று, 73 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்குழந்தை போதும் என்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டு என்னை ஈன்றெடுத்து வளர்த்தவர்தான் என் அம்மா சீதாலட்சுமி அவர்கள்.
சீதாலட்சுமி என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னவை எல்லாம், "பெண்கள் படிக்க வேண்டும், தங்கள் கால்களில் நிற்க வேண்டும், பிறருக்கு உதவியாக வாழ வேண்டும்" என்பதே. அவர் தன் வாழ்வையும் அதன் அடிப்படையிலேயே வாழ்ந்தார். அவரைச் சுற்றியிருந்த பெண்களுக்கெல்லாம் எழுத்தறிவித்தார், கைவேலை ஏதாவது கற்றுக்கொடுத்துப் பொருள் ஈட்ட வழிவகை செய்து தந்தார்.
இன்றும் என்னை அணுகும் பல பெண்கள் படித்து வேலையிலிருந்தாலும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். B.Tech., MBA படித்து, ஐந்து இலக்க ஊதியம் பெறும் ஒரு பெண் நேற்றைக்கு என்னிடம் வந்தாள். தன்னுடன் வேலை பார்க்கும் சம கல்வியும், வேலையும் உள்ள ஒருவரைக் காதல் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்துள்ளாள். நேற்று அவள் கணவன் வெளியூருக்குச் சென்றுள்ளதால், அவனுக்குத் தெரியாமல் என்னிடம் ஆலோசனை கேட்க வந்ததாகச் சொன்னாள். அவள் எதிர்கொள்ளும் அவல வாழ்வைக் கேட்டபோது கல்வி அறிவு, வேலை, ஊதியம் என்று எதுவும் பெண்களை விடுவிக்காமல் இருப்பதன் காரணம் புரியாமல் ஒரு மலட்டுக் கோபம்தான் வந்தது. ஒவ்வொரு முறை அடி வாங்கி இரத்தக் காயங்களுடன் மருத்துவரிடம் சென்ற போதும், தான் தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள்தான் அவை என்று கூறி, மருத்துவர்கள் பல முறை கேட்டாலும் உண்மையைச் சொல்லாது கணவனைக் காட்டிக்கொடுக்காமல் காப்பாற்றியுள்ளாள். இது ஒரு விதிவிலக்கான வழக்கு இல்லை. குடும்ப கௌரவத்திற்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, தன்னை வேறு எவரும் தவறாக எண்ணிவிடக் கூடாது என்று பல ஏற்க முடியாத காரணங்களைக் கற்பித்துக்கொண்டு பல பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பெரியார்கள் வந்தாலும், சுயமரியாதை பற்றிக் கற்பித்தாலும் பெண்கள் இன்னும் பின்தங்கியே இருக்கிறார்கள். வீட்டிலும், பணியிடங்களிலும் மற்ற இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பிற்குப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
மேலும் வீட்டில் பெண்களின் பாதுகாப்பிற்குக் குற்றவியல் சட்டங்கள், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, வரதட்சணை வாங்குவதைத் தடுக்க, மனைவியைக் கொடுமைப்படுத்துவதைத் தடுக்க, அவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்க, குடும்ப வன்முறையிலிருந்து தடுக்க என்று பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013, முறைசார் மற்றும் முறைசாராப் பணியிடங்களில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. எந்தவொரு பெண்ணும் பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு உட்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில், பெண்கள் வேலை செய்யும் அனைத்துப் பணியிடங்களிலும் உள் புகார்கள் குழு (ICC - Internal Complaints Committee) ஏற்படுத்தப்பட்டு, அந்தக் குழுக்களில் ஒரு வெளி நபரையும் நியமித்து, அவை அமைதியான முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான பாதுகாப்புடன் விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க வழிவகுக்கிறது. விவசாயம், கட்டட வேலை, சாலை அமைக்கும் வேலை போன்ற முறைசாராப் பணிகளில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு, இந்தச் சட்டத்தில் மாவட்டம்தோறும் மாவட்டப் புகார்க் குழுக்கள் (DCC) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெண்களைக் கண்ணியத்தோடு அணுக வேண்டும் என்பதற்காக அவர்கள் மேல் புகார் ஏதும் இருப்பினும், அவர்களை அவர்களது வீட்டில் வைத்து விசாரிக்கவும், பெண் காவலர்களால் மட்டும் கைது செய்யவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையங்களும் மகளிர் நீதிமன்றங்களும், தேசிய மற்றும் மாநிலப் பெண்கள் ஆணையங்களும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிட "ஒரே நிறுத்த மையம்" (One Stop Centre) திட்டம் என்று பலவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கூறிய பல சட்டங்கள் பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர் பலரின் நலனுக்காகவும் இயற்றப்பட்டிருப்பினும் மக்கள் இன்றும் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமலும், நியாயம் நீதி மறுக்கப்பட்டும், பல போராட்டங்களுடன் வாழ்வதுதான் நடைமுறையாக உள்ளது. இது மாறவேண்டும் என்றால் பொது வாழ்க்கையில் சுத்தமாக, பொய்களைத் தண்டித்து, விருப்பு வெறுப்பற்ற நீதி பரிபாலனைக்கு வழிகோலச் செய்தல் வேண்டும். இவை நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள பிரிவுகளின்படி நம் அரசாங்கத்தை நடத்திச் சென்றால்தான் முடியும்.
- சுதா ராமலிங்கம்