பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்ட நவீனத்துவம் என்பது சர்வதேச அளவில் மாபெரும் பண்பாட்டுப் பாதிப்புகளை உருவாக்கியது.
மனிதனின் அன்றாட வாழ்க்கையை பகுத்தறிவு ரீதியாக அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு நவீனத்துவம் பிரதான பங்கு வகித்தது.
மேற்கிலிருந்து வீசிய நவீனத்துவத்தின் காற்று இந்தியாவுக்குள் வீசத் தொடங்குவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது பிரிட்டிஷ் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிகளாகும்.
இந்தியாவுக்குள் புழங்கிய சமூக மதிப்பீடுகள், சமூக நடவடிக்கைகள், மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்று இந்தியாவின் பண்பாட்டு முகம் மாபெரும் மாற்றங்களை அடைந்தது.
இந்தியாவின் வரலாறுகளை எழுதத் தொடங்கிய பிரிட்டிஷ்காரர்கள் தாங்கள் நுழைந்த பிறகுதான் வரலாறு என்பதே எழுதப்படுவதாகக் கருத வைத்தார்கள். பிரிட்டிஷ்காரர்கள் நுழைவதற்கு முன்னால் இருந்த கலைகள் கைவினைகள் ஆகியவற்றை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தவை (prehistoric) என்று இந்தியர்களை நம்ப வைத்தார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாகத் தொடங்கிய ஓவிய சிற்ப பள்ளியை "மதராஸ் கலை கைவினைப்பள்ளி" என்று பெயர் சூட்டினார்கள். இந்தியாவின் கலை மரபை, நுண்கலை (Fine art), கைவினை (Craft) என்று இரண்டாகப் பிரித்தார்கள். இதற்கு முன்னால் இந்தியாவில் கைவினை மரபுதான் இந்த மண்ணின் கலை மரபாக இருந்தது.
பிரிட்டிஷ்காரர்கள் நிறுவிய ஓவிய கலைப் பள்ளிகளில் இந்தியாவில் முன்னரே பழக்கத்தில் இருந்த கலைப் படைப்பு மரபுகளை கைவினை மரபுகள் என்று சொன்னார்கள். பிரிட்டனில் இருந்து இந்திய மண்ணிற்கு கொண்டுவரப்பட்டு ராயல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் சொல்லிக் கொடுத்த ஓவியர் சிற்பக் கலை நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்வதற்கு நுண்கலை என்று பெயர் கொடுத்தார்கள்.
இப்படி இரண்டாகப் பிரித்தது மட்டுமல்லாமல், நுண் கலை என்பதை மேலே வைத்து , கைவினை மரபு என்பதைக் கீழே வைத்தார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டுக்குள் இருந்த கலையிலும் இலக்கியத்திலும் மேலைநாட்டில் இருந்து வந்தவை அனைத்தையும் உயர்வானவை என்றும், இந்த மண்ணிற்கு உரித்தான பண்புக் கூறுகள் இரண்டாம் தரமானவை என்றும் மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
இன்றைய நாளில் நாம் சந்திக்கும் நரகமயமாதலின் ஆரம்பப் புள்ளியாக நவீனத்துவம் என்பது இந்தியாவிலிருந்து பல்வேறு பிரதேசங்களில் இருந்த பண்பாட்டுகளுக்குள்ளும் ஊடுருவி மேலை மயப்படுதலே நாகரிக மயப்படுத்துதல் என்று நம்ப வைத்தது.
பிரிட்டிஷ் ஆட்சியில் பல்வேறு பிரதேசங்களும் பிரிட்டிஷ்காரர்களின் புதிய புதிய பண்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன.
ராஜாராம் மோகன் ராய், மகாத்மா ஃபுலே போன்ற பல்வேறு சீர்திருத்தக்காரர்கள் இந்திய மண்ணில் இருந்த பல்வேறு சரியை கிரியைகளை பகுத்தறிவின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து அவற்றை மாற்றி அமைக்க முயன்றார்கள். ஓர் எடுத்துக்காட்டாக கணவன் இறந்தவுடன் அவனைச் சிதையில் ஏற்றிய நெருப்பில் விதவையான அவனது மனைவியும் விழுந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற சடங்கு கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இந்தப் பழக்கம் மாபெரும் உயிர்க் கொலைக்கு அழைத்துச் செல்கிறது என்ற காரணத்தினால் இந்தியாவுக்குள் நுழைந்த நவீன சிந்தனையின் பெயரால் பிரிட்டிஷ் காரர்களால் சட்டத்தின் மூலமாக நிறுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் ஒரே மாதிரியான தீவிரத்துடன் சுதந்திரம் சமத்துவம்&சகோதரத்துவம் ஆகியவை விவாதிக்கப்பட்டன.
இந்தியாவின் தெற்குப் பகுதியில் இருந்த தொன்மையான பண்பாட்டுக்குச் சொந்தமான தமிழ்ப் பண்பாட்டிலும் கூடப் பல்வேறு விவாத தீப்பொறிகளை நவீனத்துவ காற்று பலமாக வீசி பகுத்தறிவு ரீதியான விவாதங்களைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.
பிரிட்டிஷ்காரர்கள் மெக்காலே கல்வி முறையின் மூலமாகவும், மதராஸ் ராஜதானியில் முதல் முதலாக நிறுவிய கலை மற்றும் கைவினைப் பள்ளி போன்றவற்றின் மூலமாகவும் மாபெரும் பண்பாட்டு மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள்.
தமிழின் தொன்மையான திருக்குறள் போன்ற பல்வேறு நூல்கள் சுவடிகளிலிருந்து அச்சு வாகனம் ஏறின. சுவடிகளும், கல்வி அறிவும் மேட்டுக்குடி மக்களின் கையில் இருந்த ஒரு காலகட்டத்தில் அச்சுப் புத்தகங்கள் அறிவைச் சகலருக்கும் கிடைக்கும் வழியில் பரவலாக்கின.
இந்தியா முழுவதும் பரவிய கிறித்துவ மதம் கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குக் கிடைக்காமல் இருக்குமாறு செய்யப்பட்ட ஏற்பாட்டை முறியடித்தது. இந்து மதத்தில் இருந்து
கிருத்துவ மதத்துக்கு மாறிய அனைவருக்கும் கல்வி அறிவு புகட்டப்பட்டதின் காரணமாக தமிழ்நாட்டின்பல்வேறு கலைகளும் இலக்கியங்களும் மாபெரும் சவால்களைச் சந்தித்தன.
தமிழகத்தில் தோன்றிய ஜஸ்டிஸ் கட்சி, தந்தை பெரியாரின் தலைமையில் வளர்ந்த திராவிடக் கட்சி ஆகியவை நவீனத்துவம் முன்னெடுத்த பகுத்தறிவின் பெயரால் வாதுக்கு அழைத்தன.
இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா முழுவதுமிருந்த எந்த பல்வேறு மொழி சார்ந்த மக்களும் அவரவர்களின் பண்பாட்டு அடையாளங்களுக்கு அதிகமான சேதம் வந்து விடாதபடிக்கு மேலை நாகரிகத்தின் நவீனத்துவ சிந்தனையை அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்துக் கொண்டார்கள்.
எனவே உலகம் முழுவதும் பரவி இருந்த சர்வதேச நவீன சிந்தனை என்பது இந்தியாவுக்குள் நுழைந்த போது இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசமும் அந்த நவீனச் சிந்தனையை அதற்கு ஏற்ற மாதிரி மாற்றி வடிவமைத்துக் கொண்டது.
எனவேதான் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்த நவீன சிந்தனை, இந்தியாவில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஏற்ற மாதிரியான ஒரு நவீனத்துவச் சிந்தனையாக மாறியது. இதைத்தான் நான் "பிரதேச நவீனத்துவம்" (Regional Modernism) என்று குறிப்பிடுகிறேன்.
பிரதேச நவீனத்தும் என்பது தமிழ்நாட்டுக்குள் ஒரு விந்தையான வடிவத்தை எடுத்தது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக தமிழ் இலக்கியத்தில் நவீனத்துவம் எப்படி நுழைந்தது என்பதைக் கொஞ்சம் ஆராயலாம்.
மேலைநாட்டில் இருந்த டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் போன்ற கவிஞர்களும், அறிவுஜீவிகளும் இந்தியாவின் தத்துவ சிந்தனையின் மீது சற்று ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் கவிதைகளிலும் இலக்கிய படைப்புகளிலும் நவீனத்துவம் என்ற பெயரில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
எடுத்துக்காட்டாக, ஓசை ஒழுங்கோடு கூடிய, இலக்கணச் சுத்தமான, மரபு கவிதைகள் மிகவும் பிற்போக்கானவை என்று தமிழ்நாட்டின் நவீனவாதிகளாக தன்னைச் சொல்லிக் கொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
இலக்கியத்தில், குறிப்பாகக் கவிதையில் அமெரிக்காவின் வால்ட் விட்மன் போல தாங்கள் எழுதுவதாகச் சொல்லி வசன கவிதை என்பதை முன் வைத்தார்கள்.
இந்தக் காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி வைத்த சீர்திருத்தச் சிந்தனைகளையும், திராவிடர் கழகம் முன்வைத்த அரசியல் கருத்துக்களையும் அரசியல் தளத்தில் எதிர்கொள்ள முடியாத உயர்சாதி இந்துக்களான பிராமணர்கள் இலக்கியக் களத்தில் வேறு விதமாக எதிர்கொண்டார்கள்.
நா. பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா, க. நா. சு போன்ற பலரும் "எழுத்து" போன்ற இலக்கிய இதழ்களின் மூலமாக “தமிழ் மரபார்ந்த இலக்கியங்கள் அவற்றின் ஓசை ஒழுங்கின் காரணமாகக் கலைத்தன்மை குறைந்து விடுகிறது” என்று விமர்சனம் செய்தார்கள்.
திராவிடச் சிந்தனையாளர்கள், மற்றும் அயோத்திதாசர் பண்டிதர் போன்றவர்கள் தமிழன் என்ற அடையாளத்தை அரசியல் காரணத்திற்காக மகத்துவப்படுத்திக் கட்டமைத்தார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெரும் காப்பியங்களை மகத்துவப்படுத்தி கம்பராமாயணம் பெரியபுராணம் போன்றவற்றை பின்னுக்குத் தள்ளினார்கள். திராவிட, தலித் சிந்தனையாளர்கள் தமிழ்ப் பாரம்பரியத்தை மகத்துவப்படுத்துவதை ஓர் அரசியல் செயல் திட்டமாக மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கினால் இந்து மதம் முன்வைத்த சனாதன சிந்தனைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் போக்கிலிருந்து பொது சிந்தனையை விடுவிப்பதற்குப் பிற்போக்கு சக்திகள் நவீனத்துவம் என்பதைக் கையில் எடுத்துக் கொண்டன.
புதுக்கவிதை என்பதின் பெயரால் ஒரு நவீனப் போக்கு போல முன்வைத்தவர்கள், வேதாந்த விசாரங்களையே தங்களுடைய, நவீனக் கவிதைகளாக எழுதினார்கள். முதுகெலும்பில்லாத தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் "கலை, கலைக்காக " எனும் கருத்தை ஏற்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆனால் தமிழ் மரபின்படி ஆதி அழகியல்வாதியான தொல்காப்பியர் " இழும் எனும் மொழியால் விழுமியது நுவலல் " எனும் கருத்தைத்தான் முன் வைத்திருந்தார்.
கவிதையில், ஓவியத்தில் கலைத்தன்மைதான் பிரதானமானதே தவிர, அதில் அரசியல் கலப்பது என்பது கலைத் தன்மையை அழித்துவிடும் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. கவிதைகள் அரசியல் கருத்துக்களைப் பேசத் தொடங்கினால் அது தன்னுடைய கலை தன்மையை இழந்து விடுகிறது என்று பேசப்பட்டது.
இவ்வாறாகத் தமிழ்நாட்டில் திரண்டு எழுந்த பகுத்தறிவு சிந்தனை இயக்கமான திராவிடச் சிந்தனையை நவீனத்தின் பெயரால் பிராமணர்கள் எதிர்கொண்டார்கள்.
எனவே தமிழ் இலக்கியப் பரப்பில் நவீனத்துவம் தமிழ் மண்ணில் இருந்த பண்பாட்டு அடையாளங்களுக்கு ஏற்ப திரிபுகளை அடைந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமான ஒரு நவீனத்துவம் இங்கே கட்டமைக்கப்பட்டது. இதனைத் தான் நான் “பிரதேச நவீனத்துவம்” என்று குறிப்பிடுகிறேன்.
இதற்கு முன்னால் 1930, 40&களில் பிரிட்டிஷ்காரர்களும் பிரெஞ்சுகாரர்களும் தங்களுடைய காலனித்துவ பலத்தைக் கூட்டுவதற்காக பல்வேறு சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். சமூக முன்னேற்றம் என்பதின் பெயரால் பிரிட்டிஷ்காரர்கள் இந்திய மண்ணில் இருந்த பல்வேறு பிரிட்டிஷ் எதிர்ப்புச் சக்திகளை முறியடிக்கத் தொடங்கினார்கள். நவீனத்துவம் என்பது மனிதகுல முன்னேற்றத்திற்கானது என்பது முன்வைக்கப்பட்ட போது, இந்தியாவிலிருந்த பல்வேறு பிரதேசங்களிலும் நவீனத்துவம் என்பது மேல்நாட்டுத்தனம் என்று புரிந்து கொள்ளப்பட்டது.
மேல்நாட்டவர்களைப் போல உடை உடுத்துவது, மேல் நாட்டவர்கள் போன்ற உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது போன்ற போக்குகள் முன்னேற்றத்தோடு தொடர்பு படுத்தி புரிந்து கொள்ளப்பட்டன.
இவற்றுக்கு மாற்று கொண்டு வருகிறோம் என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் அவரவர்களின் பண்பாட்டுக் கூறுகளுக்கு மறுபடி திரும்பிச் செல்லும் ஒரு போக்கும் உருவாயிற்று.
திராவிடச் சிந்தனையாளர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களை மகத்துவப்படுத்தத் தொடங்கினார்கள். இதே நேரத்தில் பழமையை மகத்துவப்படுத்துகிறோம் என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் சனாதனம் மேலும் பலமாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தி அகிம்சை என்பதைத் தனது தேச விடுதலைக்கான ஆயுதமாக ஏந்திய அதே நேரத்தில், தன்னுடைய சொந்தப் பங்காளி சகோதரர்களையே போரில் கொல்வதில் எவ்விதத் தவறும் இல்லை என்று வன்முறைக்கு வாதாடும் பகவத் கீதையையும் தனது ஆதார நூலாகக் கைக்கொண்டார் என்பதைக் கவனிக்க வேண்டும். இதனை வன்மையாக எதிர்கொண்ட டாக்டர் பி ஆர் அம்பேத்கர் போன்றவர்கள்தான் சர்வதேச அளவில் முன்னெடுத்து வைக்கப்பட்ட நவீன சிந்தனைகளை பேசினார்கள் என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். இதனால்தான் இன்றைக்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் நிஜமான ஒரு நவீன இந்தியாவைக் கனவு கண்ட நவீன இந்தியாவின் சிற்பி என்று பாராட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தோன்றிய நவீனத்துவம் என்பது சர்வதேச அளவில் கொண்டு வரப்பட்ட உலகத் தழுவிய ஒரு நவீனச் சிந்தனையின் திருத்தப்பட்ட ஒரு வடிவம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய போக்கினைத்தான் பிரதேச நவீனத்துவம் என்று குறிப்பிடுகிறேன்.
- இந்திரன்