ஒருமுறை 5 பேர் கொண்ட குழு ஒரு இஸ்லாமியரை அடித்துக் கொன்றது. கொன்று விட்டு 5 பேரில் ஒருவரான சாவர்க்கர் கூறியது, ‘அவனை அடித்துக் கொன்ற அந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள்’

மேற்கண்ட தகவல் இராகுல் காந்தி மார்ச் முதல் கிழமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலண்டனில், இலண்டன் வாழ் இந்தியாவைச் சார்ந்தவர்களிடம் பேசியது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இலண்டன்வாழ் இந்தியாவைச் சார்ந்தவர்கள், செய்தியாளர்கள், இங்கிலாந்து நாடாளுமன்றம் ஆகிய பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இராகுல் காந்தி உரையாற்றி இருக்கிறார். அவர் பேசிய பெரும்பாலான கருத்துகள் இந்திய ஒன்றியத்தை, ஒன்றியத்தில் நடக்கும் ஆட்சியைத் திறனாய்வு செய்வதாக இருந்தது.

இந்திய ஒன்றியத்தில் எதிர்க்கட்சியைச் சார்ந்த தலைவர்களை அச்சுறுத்துவது, இஸ்ரேலில் இருந்து இந்தியாவைப் பாதுகாப்பதாகக் கூறிப் பல ஆயிரம் கோடிச் செலவு செய்து வாங்கப்பட்ட பெகாசஸ் மென்பொருளைத் தவறுதலாகப் பயன்படுத்தி உள்நாட்டில், தனக்கு எதிரானவர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்பது இந்திய சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

ஊடகங்கள், நீதித்துறை, பல்வேறு அரசு சாரா அமைப்புகள், நாடாளுமன்றம் ஆகியவற்றை ஆர் எஸ் எஸ், பாஜக கைப்பற்றியுள்ளது. பெரும்பாலான இந்திய ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்து அல்லது தனக்கான நண்பர்களின் மூலமாக ஊடகத்தின் பங்குகளை வாங்கிக் கைப்பற்றித் தனதாக்கிக் கொள்வது போன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகிறது ஆர்எஸ்எஸ் பாஜக அரசு. சிறுபான்மை மக்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை உடைக்கிறார் மோடி. இந்திய நாடு பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றும் உங்களின் கருத்தை வலுக்கட்டாயமாகத் திணித்தால் அது எதிர்வினை ஆற்றும் என்றும் எச்சரித்து இருக்கிறார் இராகுல் காந்தி.

பிபிசி யின் தாக்குதலைக் கண்டித்திருக்கும் அவர், அவருக்கு இணக்கமான செய்தியாளர்களுக்குப் பரிசும் கௌரவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளங்கள் அவரின் நண்பர்களான ஓரிருவருக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

வெறுப்புணர்வு, வன்முறை, பொதுமக்கள் மீது தாக்குதல் ஆகியவை மாநில அரசுகளின் துணையோடு நடைபெற்று வருகின்றன எனப் பேசி இருக்கும் இராகுல் காந்தியை இந்தியாவில் உள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராகுல் காந்தியை இத்தாலி நாட்டுக்காரர் எனச் கூறியிருப்பது கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

இவர்களின் போக்கு இப்படித்தான். மோடிக்கு எதிராகப் பேசினால் இந்தியாவின் தேச விரோதிகள் என்றும், ஆர்எஸ்எஸ்க்கு எதிராகப் பேசினால் அவர்கள் வெளிநாட்டுக்காரர் என்றும், வெளிநாட்டில் போய் பேசினால் இந்தியாவை விமர்சனம் செய்து விட்டார் என்றும் நாடாளுமன்றத்தில் அவையை நடத்தவிடாமல் ஆளுங்கட்சியினரே போராடுவது எந்த வகை சனநாயகம் என்று தெரியவில்லை.

- பா.மு.உவைசு

Pin It