நல்ல நேரம் - கெட்ட நேரம் இராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி எனப் பிரித்து மக்களின் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிறது இந்த ஜோதிடமும் பஞ்சாங்கமும் என்பதனைப்  படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை யாருமே சிந்திப்பதில்லை என்பது வேதனையாக இருக்கிறது!

உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டும் என்பது நிதர்சனமான உண்மை. இதை அனைவரும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

ஆனால்,

இந்த 24 மணி நேரத்தில் எங்கு இருந்து வந்தது இந்த நல்ல நேரமும்! கெட்ட நேரமும்! என, ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கும்போது, 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் மட்டுமே நல்ல நேரமும் கெட்ட நேரமுமாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆக, “ஒரு நாளில் 1.30 மணி நேரம் மட்டும் நல்ல நேரம்! 1.30 மணி நேரம் மட்டும் கெட்ட நேரம்!” இதை நினைத்து சிரிப்பதா? சிந்திப்பதா?

நிச்சயம் சிந்தித்துத் தான் ஆக வேண்டும். காரணம், ஒரு நாளைக்கு 24 மணி நேரம், அதில் 3 மணி நேரம் நல்ல நேரம், கெட்ட நேரம். என்றால் 365 நாளைக்கு என்ற கேள்வி எழுகிறது...

365 X 1.30 = 547 மணி நேரம். அதாவது, 547.5 மணி நேரம் இராகு காலமும், எமகண்டம் நேரம் 547.5 மணி நேரமும் மொத்தம் (1095) மணி நேரம் ஓர் ஆண்டில் வீணாக்கப்படுகிறது.

சிந்திக்க வேண்டும்! ஒரு மனிதனுக்கு அவசியமானது உணவு, உடை, இருப்பிடம் மட்டுமா? இல்லை, இந்த வரிசையில் ‘நேரமும்’ அவசியமான ஒன்று தான்.

ஆக, அந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதனைப் பொருத்துத்தான் நம்முடைய வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது.

நம்முடைய குடும்பச் சூழ்நிலை நம்முடைய வறுமை நிலைக்குக் காரணம் என்ன? என்பதனை அறிந்து அதற்கு மாற்று வழி என்ன என்பதனைக் கண்டறிந்து அதற்கானத் தீர்வை காண்பதே பகுத்தறிவு! அதை விட்டுவிட்டு இதற்கு காரணம் “நம்முடைய கெட்ட நேரம் என நம்புவது என்பது எவ்வளவு வெட்கக்கேடானது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?”

“எல்லாம் போனவர்க்கும் எதிர்காலம் உண்டு”

நல்ல நேரம், கெட்ட நேரம் கணிக்கப்பட்டது சரி எனில், எல்லா நாடுகளிலும் நேரம் ஒன்று போல் உள்ளதா? சரி! அப்படி கணிக்கப்பட்ட எமகண்டத்தில் எந்தவித நல்ல காரியங்களும் நடைபெறுவது இல்லையா? இல்லை, நல்ல நேரம் என கணிக்கப்பட்ட நேரத்தில் எந்தக் கெட்ட காரியமும் நடைபெறுவது இல்லையா? ஒவ்வொரு நாட்டிற்கும் காலங்கள் மாறுபடுகின்றது! வித்தியாசப்படுகின்றது! என்பது உண்மை.

இந்தியாவில் 8 மணி என்றால் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 2.30 மணி நேர வித்தியாசத்துடன் 10.30 மணி என இருக்கும் போது நல்ல நேரமும் கெட்ட நேரமும் எப்படி உண்மையாக இருக்கும்?

இந்தியாவில் பகல் என்றால் அங்கே இரவு; இந்தியாவில் இரவு என்றால் அங்கே பகல். அப்புறம் எப்படி ‘இராகுகாலமும், எமகண்டமும்’ ஒன்றாக அமையும்.

ஒரு நாளைக்கு ‘எமகண்டம்’ என்பவை 1.30 மணி நேரம் !

கிழமை                இராகுகாலம்    குளிகை              எமகண்டம்

ஞாயிறு               04.30 - 06.00       03.00 - 04.30       12.00 - 01.30

திங்கள்                07.30 - 09.00       01.30 - 03.00       10.30 - 12.00

செவ்வாய்          03.00 - 04.30       12.00 - 01.30       09.00 - 10.30

புதன்    12.00 - 04.30       10.30 - 12.00       07.30 - 09.00

வியாழன்           01.30 - 03.00       09.00 - 10.30       06.00 - 07.30

வெள்ளி              10.30 - 12.00       07.30 - 09.00       03.00 - 04.30

சனி       09.00 - 10.30       06.00 - 07.30       01.30 - 03.00

அதை, ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளைக்கும் எப்படி பிரித்துக் காட்டி இருக்கிறார்கள் என்பதனைப் பாருங்கள். 

இவர்கள் சொல்லும் இந்தக் கெட்ட நேரத்தில் உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறந்திருக்கலாம். கெட்ட நேரம் உண்மையானால், அந்த குழந்தைகள் அனைத்தும் இறந்து அல்லது  ஊனமுற்று அல்லவா பிறந்து இருக்க வேண்டும்? அந்தக் கெட்ட நேரத்தில் சாலைகளில் எத்தனையோ வாகனங்கள் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படியானால், அந்த வாகனங்கள் அனைத்தும் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் அல்லவா?

சரி,

அப்படியென்றால், மற்ற நேரங்களில் அதாவது நல்ல நேரத்தில் பிறந்த குழந்தைகள்அனைத்தும்  ஊனம் இல்லாமல் அல்லவா இருக்க வேண்டும்? சரி பரவாயில்லை! நல்ல நேரத்தில் பயணிக்கும் கார்கள், விமானங்கள், பேருந்துகள், இரயில்கள்  போன்ற அனைத்து  போக்குவரத்து வாகனங்களும்  விபத்துக்கு உட்படாமல்  அல்லவா இருக்க வேண்டும்? அப்படி நடப்பது போன்று தெரியவில்லையே?

இவைகளின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன?

இரண்டு பேர் பேசிக் கொள்கிறார்கள். “நல்ல காரியங்கள்” கெட்ட நேரத்தில் செய்யக்கூடாது என்றால் நான் ஒரு சந்தேகம் கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லுங்கள் என்றாராம். அவர் சரி கேளுங்கள் என்றார்.

அவர் ஒரு நிகழ்வைக் கூறுகிறார்.

‘‘ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றை எட்டிப் பார்க்கிறது.அப்போது, தவறிப் போய் உள்ளே விழுந்துவிடுகிறது. (தமிழகத்திலும் மற்ற இடங்களிலும் தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்து கொண்டுதான் உள்ளது).                                                       நானும் மற்றவர்களும் பார்த்துக் கூச்சலிட்டோம். ஓடிப்போய் கீழே உள்ள குழந்தையைக் காப்பாற்ற முனைகிறோம்.அது நல்ல காரியம் தானே” என்று நண்பர் கேட்டார். ஆம், நிச்சயம் நல்ல காரியம் தான் என்றார். அவரும், அப்போது ஒருவர் குறுக்கிட்டு, இப்போது ராகுகாலம் இது கெட்ட நேரம், கெட்ட நேரத்தில் எந்தவித நல்ல காரியமும் செய்யக்கூடாது என்று சொல்லி ராகுகாலம் முடிந்த பிறகு காப்பாற்றலாம் என்று சொல்பவரின் கருத்தைக் கேட்டு காப்பாற்றாமல் நின்றுவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியுமா? இவ்வாறு நல்ல நேரமும் கெட்ட நேரமும் பார்த்துத் தீயணைப்பு வீரர்கள் அவர்கள் பணியைச் செய்தால் அவர்களால் ஆபத்தில் உள்ள ஒருவரைக் காப்பாற்ற முடியுமா? நல்ல நேரமும் கெட்ட நேரமும் பார்த்து ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டால் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியுமா? ஒருவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுவிட்டது, அதனால், அவர் உடலில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறுகிறது. அவருக்கு உடனே இரத்தம் ஏற்றப்பட வேண்டும் என்று டாக்டர் சொல்லும் போது,

இல்லை, அவருக்குக் கெட்ட நேரத்தில் விபத்து ஏற்பட்டுவிட்டது.இராகுகாலம், எமகண்டம் எல்லாம் முடிந்த பிறகு அவருக்கு இரத்தம் ஏற்றுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல்

“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது”

இந்த இடத்தில் பிறரிடம் பலன் எதிர்பார்க்காமல் அவருக்கு உதவலாம் என்று தான் நினைக்க வேண்டுமே தவிர நேரத்தைப் பார்த்தோ (பலனைப் பார்த்தோ) ஒரு செயலைச் செய்யக் கூடாது. நாம் நேரத்தைப் பிரித்துப் பார்க்கலாம்.அது முன்பகல், பிற்பகல் என்று பிரிக்க வேண்டுமே தவிர இராகுகாலம், எமகண்டம் என்று பிரிக்கக் கூடாது.

அப்படி நல்ல விதமாகப் பிரித்தால் தான் நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து நம்முடைய வாழ்க்கையில் வாழ, வளர வெற்றியோடு இருக்க முடியும்.

நம்முடைய வெற்றிக்கு இந்தப் பழமொழி

“பகுத்தறிவு ஓர் இயல்பான உணர்வு - அது

அதிகம் இருந்தால் பேரறிஞன்.”       

Pin It