"மழைவருது மழைவருது

நெல்லு வாருங்க

நான் போயி கெணத்துல விழுறேன்

என்னைப் புடிங்க"

சாயங்கால புழுதிக்காத்து

சூறாவளியாய் சுழன்றடித்தது;

சாணிப்பூசிய வாசலில்

சிறுவர்கள் குதுகலமாய்

வரவேற்றார்கள் கோடைமழையை!

மூணுபோகமா மழை இல்லை

ஆட்டு மாட்டுக்குத் தீனியில்ல

காடு கரம்பெல்லாம்

பாளபாளமாய் வெடிச்சு கெடக்குது;

ஊரைத்தாண்டி சிலபேரு

கரிசூளைக்கு மரம்வெட்டவும்,

செங்கல் சூளைக்குமாய்

திக்குக்கு ஒருத்தராய்

சிதறிக் கிடந்தார்கள்!

மதிய சோத்துக்காய்

பள்ளிக்கூடம் போன சிறார்களும்

வாழ்க்கைச் சுவடுகளை

முகத்தில் கிறுக்கிக்கொண்ட

பாட்டன் பாட்டிகளும்

ஒத்தைத் திண்ணையில்

ஏக்கத்தோடு காத்திருந்தார்கள்

இடிமுழக்கங்களோடு

கொட்டித்தீர்க்கும் பெருமழைக்காய்!

தெக்கத்தி மழை

சலசலனு கொட்டித்தீர்த்தது;

எரவானத்துத் தண்ணீர்

ஓலையைத்தாண்டி

தெறித்தது;

சிறிதுசிறிதாய் மண்வாசம்

வாசல்தாண்டி வந்தது

குடிசைக்குள்;

இதோ ஊரெல்லாம்

தெருவெள்ளம்;

காகிதக் கப்பல் சுமந்து

சென்றது;

கிழிந்த கோவணங்களின்

சிரிப்புச் சத்தங்களை!

சிலிர்த்துக்கொண்டு

ஓடிவந்தன மேய்ச்சல்

திரும்பிய காளைகள்;

கொட்டகையில் அகப்படாமல்

ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தன

சேங்கனைக் கன்றுகள்!

கோணியைப் போர்த்தியபடி

போராடிக்கொண்டிருந்தான்

பண்ணையாள் முனியன்;

வானம் வெளுத்துக்கொண்டிருந்தது!

களத்துமேடெங்கும்

ஈசல்கள்;

தும்பிகள் எல்லாம்

வட்டமடித்தது

இன்னொரு மழைக்காய்;

தலைக்கயிறை உருவிக்கொண்ட

கொம்பேறி மூக்கன்காளை

களத்துமேட்டை புழுதிக்காடாக்கியது

கூர்தீட்டிய கொம்புகளில்!

மந்தைவெளியானது

களத்துமேடு!

ஆத்தைத்தாண்டிய அந்த

மானாவரிக் கொள்ளையில்

சோளம் விதைக்கும் சத்தம்;

ஏர்முனைக்கு பின்னாலே

எசப்பாட்டு கேட்கும் சத்தம்;

குலச்சாமி பேரச்சொல்லி

தெம்மாங்கு பாடும் சத்தம்;

வானம்பார்த்த பூமியெல்லாம்

ஏர்முனையின் பாட்டுச்சத்தம்!

வெடித்த பூமியில்

சிலிர்த்து எழுந்தது

சிறுபுற்கள்;

பசுமையின் ஈரம்

அதோ அந்த சமவெளியெங்கும்

சிதறிக்கிடந்தது;

எங்கிருந்தோ சிறிதுசிறிதாய்

வந்து காதுக்குள் நுழைந்தது

சின்னஞ்சிறு சிட்டுக்குருவியின்

மெட்டுச்சத்தம்!

அதோ புழுதிக்காடும்

புஞ்சைக்காடும்

கண்ணுக்கெட்டும் தூரம்வரை

பச்சையாடை உடுத்திய

பசுஞ்சோலையாய்ப் படர்ந்து

நின்றது;

கும்பமாய் படர்ந்து விரிந்தது

சோளக்கதிர்கள்;

பறவைகளின் பாட்டுச்சத்தம்

சோளக்காடெங்கும் ஏகாந்தமாய்

எதிரொலித்தது!

சோளக்காட்டு பொம்மையின்

கிழிசல்கள் சொல்லியது

வாழ்க்கைத் துயரங்கள்

வலிகள் அத்தனையும்!

பறவைகள் கூடு திரும்பும்

சூரியன் மேற்கில் மறையும்

அந்திப்பொழுது சிறகை விரிக்கும்

நாங்கள் மட்டும் காத்திருப்போம்

ஊளையிடும் நரிகளை

காட்டுப்பக்கம் துரத்தும்வரை!

இதோ ஊரெல்லாம்

நரிகள்;

குருதி குடிக்கும்

ஓநாய்கள்;

மண்ணும் நிலமும்

வெட்டுப்பட்டு கிடக்கிறது

ஊரெங்கும்;

குடுவையில் மூச்சடங்கி

கெடக்குது அள்ளிக்குடித்த

ஆத்துத்தண்ணி;

சோளக்காட்டு பொம்மை

இதோ காவலுக்கு இருக்கிறது!

காங்கிரீட் மரங்களாய்

வளர்ந்து நிற்கும் மாளிகைகளில்!

இதோ காகிதக் கப்பல்கள்

திக்குத்தெரியாமல் முட்டிமோதி

தவிக்கிறது; கரைசேராத

ஏக்கத்தில்;

வழியெங்கும் வானுயர்ந்து

நிற்கிறது;

காங்கிரீட் காடுகள்!

Pin It