நீங்கள் கடந்து முப்பது வருடங்களாக நவீன தமிழ் இலக்கியக் களத்தில் படைப்புச் செயல்பாடுகளுடனும், பெண்ணியச் செயல்பாடுகளுடனும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே உங்கள் படைப்புகளிலும், களச் செயல்பாடுகளிலும், பெண், பெண்சார்ந்த கலாச்சாரம், கற்பு போன்ற விஷயங்களில் முற்றிலும் புதிய பார்வையில் இயங்கியவர் நீங்கள். இன்றைய சூழலில் தமிழின் கலாச்சார தளத்தில் ‘கற்பு’ என்கிற அம்சம் கடுமையான விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. ஒரு பெண்ணியச் சிந்தனையாளரான நீங்கள் இந்தத் தருணத்தில் உங்கள் கருத்துக்களை முன் வைப்பதுதானே முறையானது?

இன்றைய சூழலில் பாசனம் செய்யத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள். கடல் பொங்கியதால் எல்லாவற்றையும் இழந்து வாழ்க்கையை மீண்டும் உருவாக்கத் தத்தளிக்கிறார்கள் ஒரு பகுதி மக்கள். அடிப்படை வசதிகூட இல்லாமல் தடுமாறுகிறார்கள் பல லட்சம் பேர்கள். அரசியல் நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை காற்றில் பறந்தபடி. இந்தக் காலகட்டத்தில் நாம் விவாதித்தே ஆகவேண்டிய விஷயம் ‘கற்பு’ என்று இருப்பது வீடு பற்றி எரியும்போது விறகைப் பிடுங்கும் வக்கிர குணத்தை மட்டும் அல்ல, நாடே எரியும்போது வயலின் வாசித்த நீரோத்தனத்தையும் பிரதிபலிக்கிறது.

தமிழ் நாட்டுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. பெண்ணின் உடலை விட்டால் பார்க்கவும் பேசவும் விவாதிக்கவும் வேறு விஷயம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் பள்ளியில் படித்த நாளிலிருந்து கண்ணகி கற்பில் சிறந்தவளா, மாதவி கற்பில் சிறந்தவளா என்பது பேச்சுப் போட்டிகளின் முக்கியப் பொருளாக இருந்து வருகிறது. ஜெயகாந்தனின் கதையில் கல்லூரி மாணவி சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவனுடன் நெருங்கிப் பழக நேர்ந்து, அவள் தாய் அவளைக் குளிப்பாட்டிப் புனிதப் படுத்தியதுதான் அறுபதுகளின் புரட்சி. அந்தக் கதைக்கான எதிர்வினைகளில் அந்தப் பெண் தீக்குளித்து எரிந்து போவது போலவும், இன்னும் பலவகைகளில் வதைபடுவது போலவும் கதைகள் எழுதிய பின்தான் தமிழ் மனங்களின் உத்வேகம் தணிந்தது. ஜெயகாந்தனே குற்றவுணர்வு தாங்காமலோ என்னவோ அந்தப் பெண் கங்காவைப் பலவாறு அலைக்கழித்துக் கடைசியில் கங்கையில் - வேறு புனித நதி இருக்கிறதா என்ன? - மூழ்கடித்தார். அதுவும் போதாது என்று ஒரு படம் வேறு எடுத்து, ‘கங்கா புனிதமானவள் புனிதமானவள்தான்’ என்று முழங்கினார். கற்பின் காவலாளர்களும் நிம்மதி அடைந்து, பெரு முலைகளும் குறைந்த ஆடைகளும் உள்ள நடனமாடும் பெண்களைத் திரையில் இரட்டை அர்த்தப் பாடல்களுக்கு ஆடவிட்டு, அவர்களைச் சின்னங்களாக்கி, பின்னர் பெண்ணில் உடலை, காது, கண், உதடு, மார்பு, வயிறு, தொடை என்று பிட்டுப்பிட்டுக் காட்டி உவகை அடைந்து, அதிலும் திருப்தியுறாமல் பெண் வயிற்றில் பம்பரம் ஓட்டி, ஆம்லெட் போட்டு பண்பாடு காத்தனர். பெண்ணின் உடலை கசாப்புக் கடையில் தொங்கவிடும் வெறும் அறுபட்ட சதைப்பிண்டங்களாகக் காட்டிய, ரசித்த பண்பாட்டுக் காவலர்கள்தான் பெண்ணின் கற்பு பற்றியும் பேசுவார்கள். காரணம் ஒரு பக்கம் பெண் உடல் வெறும் பண்டம். பரிமாறி, படைத்து, சுவைக்கும் பண்டம். இன்னொரு பக்கம் அது புனிதம். பூசை, பூ. இந்தப் பண்பாட்டு முரண்பாடுதான் மீண்டும் மீண்டும் கற்பு என்ற விவாதத்தை எழுப்பியபடி இருக்கிறது. தமிழ்ப் பெண்ணின் கற்பு என்ற விவாதப் பொய்கையில் முடிந்தபோதெல்லாம் முங்கி எழுந்து மனக்கறைகளைக் கழுவிக்கொள்ளும் பண்பாட்டுச் செயல்பாடாகி விட்டது இது.

இந்தக் கற்பு குறித்த விவாதம் எழுவதற்குக் காரணம் பெண்ணின் உடல் குறித்த ஆதங்கத்தால் அல்ல. ஆணின் விந்து குறித்த மமதையால்தான். ஓர் ஆணின் விதைகள் எங்கும் சிதறலாம். ஆனால் அவன் விதைநிலமாகத் தேர்வு செய்யும் பெண் புனிதம் காக்காவிட்டால் அவன் சந்ததியின் புனிதம் என்ன ஆவது? ஏனென்றால் இவன்தான் அப்பன் என்று பெண்ணால் சுட்டிக் காட்டப்படுபவன் அவன். அது மட்டுமே அவன். ஒரு பெண் இவன் சந்ததிகளை உருவாக்க முன்வராவிட்டால் விதைகளைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான் இவன். இந் நிலையைத் தவிர்க்க அவன் செய்ய வேண்டிய முதல் செயல் பெண் உடலைக் கோட்டையாக்கி வெற்றி கொள்வதுதான். வெற்றி கொண்டபின் ஆக்கிரமிப்பு. அதன்பின் அதிகாரம். ஒரு தந்தைவழி சமுதாயத்தில் இதுதான் ரீதி.

திருமணம் செய்துகொள்ளாமலே செயற்கை முறையில் கருத்தரித்து, தாயாகப் பெண்கள் முனைந்துள்ள காலகட்டம் இது. ஏனென்றால் தாய்மை ஓர் உரிமை. ஒரு கட்டாயம் அல்ல. தன்னுடலை தனக்கே உரித்தான ஒன்றாக பெண்கள் நினைக்கும் சரித்திர காலம் இது. இந்த பயத்தில்தான் மீண்டும் கற்பு விவாதம். இதில் பெண்களே தன்னிலை விளக்கம் தரவேண்டும் என்று நினைப்பது பெண்களுக்கு பேசும் முன்னுரிமை தரும் நற்பண்பினால் அல்ல. தாங்கள் பேசாமல் தப்ப நினைக்கும் கயமையால்தான். விவாதகளத்தில் இறங்காமல் வெறும் விமர்சகராகஇருக்கும் சாமர்த்தியத்தால்தான். ஏனென்றால், இன்று கற்பு குறித்து பேசி எழுதிவிட்டு நாளை தன் சொந்த வாழ்க்கையிலேயே அது பூதமாய்க் கிளம்புமோ என்ற கோழைத்தனம்தான்.

Pin It