ஜனநாயகம், மக்களாட்சி போன்ற தற்கால நவீன அரசியல் சொல்லாடல்கள் கொண்டு ஆட்சிகள் நடைபெற்றாலும் கூட ஒவ்வொரு ஆட்சியும் காலத்தினாலும் மக்களாலும்  விமர்சனம் செய்யப்படுவது என்பது இயல்பாகவே உள்ளது. சில சமயங்களில் ஜனநாயகத்தைக் கூட பூர்ஷ்வா ஜனநாயகம், முதலாளித்துவ ஜனநாயகம் என்றெல்லாம் விமர்சனம் செய்வதை கண்டிருக்கிறோம்.  அந்த வகையில் ஜனநாயகம் என்பது காலம்காலமாக ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டுள்ள மக்களே ஜனநாயகத்தை புறந்தள்ளுபவர்களைக் காட்டிலும் கூடுதலாக விமர்சனம் செய்கிறார்கள். காரணம் அது மக்களின் முழுமையாக விருப்பத்திற்கு மாறானதாக கையாளப்படுகிறது.

இந்த கருத்தியலை தந்தை பெரியார் அவர்கள் 19.03.1968இல் விடுதலை நாளேட்டில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“சரியாகவோ தப்பாகவோ இந்தியாவில் ஜனநாயக ஆட்சி வந்துவிட்டது. ஆனால் கட்சி ஆட்சிகள் அதை சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றன? இதைப்பார்த்து மற்ற நாட்டார் என்ன நினைப்பார்? ஜனநாயக வாதிகள் வெட்கப்பட வேண்டாமா”?

ஆக ஜனநாயகத்தின் தோற்றம் ஏற்பட்டகாலம் முதலே அது மக்களின் விருப்பத்தை புறந்தள்ளி மக்களின் விருப்பத்திற்கு மாறானதாகவும் மிகச்சிலருக்கு லாபகரமானதாகவும் கையாளப்படுவதைக் காணமுடிகிறது.

ஜனநாயக ஆட்சியின் சிறப்பம்சங்களாக உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை மக்களுக்கு முழுமையாக கிடைக்காத நிலையிலேயே தான் மக்கள் ஜனநாயகத்தின் சிறப்பம்சங்களைப் பெறுவதற்காக தங்கள் குரலை உயர்த்துகின்றனர்.  தத்துவ மேதையான அரிஸ்டாட்டில் ஜனநாயகம் பற்றிக் குறிப்பிடுகையில் “வழிதவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெறுவதே ஜனநாயகம்” என குறிப்பிடுகிறார். ஆனால் ஜனநாயகமே தடம்மாறி வழிதவறுவதே  விமர்சனத்திற்கான காரணியாக உள்ளது.

மன்னராட்சி எனப்படும் பெரும்பான்மையான மனுநூல் ஆட்சியாளர்களும் அவர்களின் கொடுங்கோன்மையிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்ட மக்கள் காலனியாதிக்க ஆட்சியில் சிக்கித்தவித்து பின்னர் அதிலிருந்து மீண்டு மக்களாட்சி எனும் ஜனநாயக ஆட்சிப்பாதையிலே தங்களை நிலைப்படுத்திக்கொண்டார்.  நவீன நாகரீக ஆட்சிமுறை தளமாக ஜனநாயக ஆட்சி அதன் கடமைகளை மக்களுக்குச் சரிவர ஆற்றாத போதும், ஜனநாயகமே மக்களை ஒடுக்குகிறபோதும் மக்கள் பின்னோக்கிய பாசிச ஆட்சிமுறைகளுக்கும் தற்போதைய ஜனநாயக ஆட்சிமுறைக்கும் இடையிலான வேறுபாடுகள் ஏதும் பெரியதாக இல்லை என்கிற முடிவை நோக்கி நகர்கின்றனர். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துகிற ஆட்சியான ஜனநாயக மக்களாட்சி நம் நாட்டில் மறைமுக ஜனநாயகமாக விளங்குகிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். குறைவான மக்கள் தொகை கொண்டிருந்த கிரேக்கத்தில் நேரடி மக்களாட்சி நடைபெறுகையில் மக்களே நேரடியாக ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கவும், அகற்றவும், கேள்வி கேட்கவும் முடிந்தது. ஆனால் மறைமுக மக்களாட்சி ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட நபராக விளங்குவதையும், அவர்கள் மக்களுக்கு விரோதமாகச் செயலாற்றும் போது பிரதிநிதியை கூட அகற்றுவதற்கான நடைமுறைகள் இல்லாமல் இருக்கும் அமைப்பு முறைகளால் ஜனநாயகம் விழுங்கப்படுவதை மக்கள் உணர்கின்றனர்.

இந்திய ஜனநாயகத்தை நிறுவிய முக்கியமான தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் இடையிலேயும்கூட ஜனநாயகம் பற்றிய ஒத்தகருத்து இருந்ததில்லை. கிராமங்களின் பழமைவாத சூழலையும் அங்கே நிலைகொண்டிருந்த வர்ண பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் மாற்றுவதற்கான செயல்திட்டத்தை விரும்பாத காந்தியார் கிராமங்களின் நிலையை  பழைய நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருவதையே ஜனநாயகமாகக் கருதினார். இந்த கருத்தை காந்தியின் அரசியல் வாரிசாகவும், மேலைநாட்டு நாகரீகத்தை உள்வாங்கிய நேருகூட ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் காந்தியாரின் கிராமங்கள் பற்றிய கண்ணோட்டத்திற்கு நேரெதிரான சிந்தனையைக் கொண்டிருந்தார். நவீன சாதனங்களும் நகர நாகரீக மாற்றங்கள் தான் கிராமங்களைப் பாகுபாடுகளிலிருந்து விடுதலையடையச் செய்யும் எனவே ஜனநாயக அரசு வேண்டுமெனில் சமூகம் ஜனநாயகமாக்கப்படவேண்டும் என்ற உறுதியான கருத்தை முன்வைத்தார்.

சமூகத்தில் ஜனநாயகம் முழுமையாக பரவாததினால்தான் ஜனநாயகத்தின் கூறுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவைகள் பெயரளவிற்கு எழுத்துக்களில் மட்டுமே இடம்பெற்றுவிட்டது. கருத்து சுதந்திரமும், தங்களின் உணவு, உடை, இருப்பிட சுதந்திரமும் கூட ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் போதுதான் சுதந்திரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற வினா எழும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சமூக நீதி கொள்கைகள் புறந்தள்ளப்பட்டு வலியோர் மட்டுமே கல்வியும், வேலைவாய்ப்பும் பெறமுடியும் என்ற நிலையிலேயே சமத்துவம் பற்றிய வினா எழும். இன்றளவும் மாறாத ஆண்டான் அடிமை நிலை, பிறப்பினால் ஏற்றத்தாழ்வு பாகுபாடு போன்ற பழமைவாதம் பரவிக்கிடக்கும் சூழலில் தான் சகோதரத்துவம் பற்றிய கேள்வி எழும் இந்த மூன்று கேள்விகளும் ஒன்றிணைந்தே ஜனநாயகத்தை சந்தேகிக்கச் செய்துவிடுகிறது.

ஜனநாயகத்தின் சிறப்புகள் ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களில்தான் ஒளிந்திருக்கிறது. அவை மக்களுக்கு பூரணமாகக் கிடைக்காத காலம்வரை ஜனநாயகம் என்பது வெற்றுக் கூச்சலாகவும் சொல்லாடலாகவும் மக்களின் சிந்தனையில் நிலைகொண்டிருக்கும்.

“சுதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும் அயோக்கியத்தனமுமாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் ஜாதிக்கு நலத்தையும், சௌகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் இது ஜனநாயகமா? பித்தலாட்ட நாயகம், அயோக்கிய நாயகம், ஜாதி நாயகம் என்பதுதான் பொருந்தும்.”

(விடுதலை 15.10.1954)

Pin It