டாக்டர்கள் நாஸ்திகர்கள்! டாக்டர்களை நாடுகிறவர்கள் பரம நாஸ்திகர்கள்!

kuthoosi gurusamy 263கடவுளாகப் பார்த்து இன்னாருக்கு இன்னசமயம் இன்ன நோயைத் தர வேண்டும் என்று முடிவுசெய்து (“அவனன்றி ஓரணுவும் அசையாது!”) அதன்படியே நடத்தி வரும்போது, அவன் கட்டளையை மீறி நோயைப் போக்கிக் கொள்கிறவனைப் போன்ற கடவுள் துரோகி சந்திர மண்டலத்தில் கூட இருக்க மாட்டான்!

“அப்படியானால் தற்கொலை செய்து கொள்கிறவன்தான் உண்மையான ஆஸ்திகனா?”, என்று சிலர் கேட்கலாம்.

அதுவும் சரிதான் என்றே தோன்றுகிறது! எப்படியாவது விரைவில் கடவுளின் பாதார விந்தத்தை அடைவதுதானே பக்தனின் லட்சியமாக இருக்க வேண்டும்?

விஞ்ஞானம் என்பதே நாஸ்திகந்தான்! செத்துப் போகிறவனைப் பிழைக்க வைக்க முயல்வது நாஸ்திகமல்லவா?

“என்னடா அற்பப் பயல்களா! நான் பார்த்துச் சாக வைப்பது, நீங்கள் பிழைத்துக் கொள்வதா? இருக்கட்டும்! எவனாவது ஒருவனை விட்டு அணுகுண்டு செய்யச் சொல்லி, ஆயுசு ஓமம் செய்தவர்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள், பாவமே செய்யாதவர்கள், புண்ணியமே செய்யாதவர்கள் - ஆகிய எல்லோரையும் சேர்த்து லட்சம் லட்சமாக கூண்டோடு கைலாசத் துக்கு (அல்லது வைகுண்டத்துக்கு அல்லது அந்தந்த மதக்கடவுளின் சொந்த ஊருக்கு) அனுப்பி விடுகிறேன்!”,- என்று கடவுள் நிச்சயம் கோபத்தோடு தானிருப்பார்!

உலகம் விஞ்ஞானத்தைக் கட்டிக்கொண்டு அழுதாலும், பாரத புத்திரர்கள் மட்டும் அவ்வளவு கவலைப்படுவதில்லை. மற்றச் சங்கதிகளில் விஞ்ஞானத்துக்கு மதிப்பு வைத்தாலும் சாக்காடு விஷயத்தில் மட்டும் மதிப்பு வைப்பதே கிடையாது.

கிராமாந்திரங்களில் இன்றும் பார்க்கலாம்! ஒருவருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டு உயிர்போய்விடும் போலிருப்பதாக வைத்துக் கொள்வோம். விஞ்ஞான வசதி பெற்ற நாடுகளாயிருந்தால் அந்தப் பேர்வழியின் உயிரை எப்படிக் காப்பாற்றுவதென்று துடியாய்த் துடிப்பார்கள். செயற்கைப் பிராண வாயு செலுத்திப் பார்ப்பார்கள். க்ளூகோஸ் இஞ்செக்ஷன் கொடுப்பார்கள். என்னென்னமோ செய்து பார்ப்பார்கள்.

ஆனால் பாரத புத்திரர்கள் எப்படித் தெரியுமா? நாளைக்குச் சாகிறவனை இன்றைக்கே கொன்று விடுவார்கள்!

படுக்கையில் கிடக்கிறவன் மேல்மூச்சு வாங்குவான். மிரண்ட பார்வைபார்ப்பான். உடனே வீட்டுப் பெண்கள் ஒப்பாரி வைத்து அழத் தொடங்கி விடுவார்கள்! அழும் ஓசை கேட்டு பக்கத்துவீட்டு - எதிர்வீட்டுத் தாய்மார்கள், பாட்டிமார்களும் வந்து விடுவார்கள்! “அடேயப்பா! போய்ட்டியாடா?” - என்று அலறியடித்து நோயாளி மீதே விழுவார்கள்! ஒப்பாரி மாநாடு தீவிரமாக ஆரம்பமாகிவிடும்!

“ஏய், யாரடா அங்கே? பச்சை மட்டையும் மூங்கிலும் வாங்கியாடா! பண்டாரத்தையழைத்து வாடா! ஏய், சாம்பிராணி! விறகும் வரட்டியும் சுடுகாட்டுக்கு அனுப்பியாச்சா? எவ்வளவு நாழி? சொல்லி அரைமணி நேரமாச்சே!” -இப்படிச் சில பெரியவர்கள்!

“அவ்வளவுதான், நமக்குக் கொடுத்து வச்சது! அழுது என்ன செய்கிறது? மச்சானுக்குத் தந்தி கொடுத்திங்களா? ஆகட்டும்! சீக்கிரம் ஆகட்டும்! மண்டூருக்கு ஆள் அனுப்பியாச்சா? நாளைக் காலையிலாவது எடுத்துவிட வேண்டாமா? முனிசிபாலிடிக்காரன் தொல்லை குடுக்கப் போரான்! ஹூம்! ஹூம்! மளமளன்னு வேலை நடக்கட்டும்! தம்பீ! இப்படி வா! கால் பக்கம் பிடி! தெற்கு வடக்காகத் தூக்கிப் போடுவோம்!” - இந்த மாதிரி ஒரு சில பெரியவர்கள்!

இவ்வளவையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் படுத்திருப்பான், நோயாளி! மயக்கத்தில் படுத்திருந்தாலுங்கூட இவ்வளவையும் கேட்டதும் உடனே உயிர் போய்விடும்! சாயந்திரம் போக வேண்டிய உயிர் காலையிலேயே போய் விடும்! பிழைக்க வேண்டிய உயிர்கூட இவ்வளவு பெரிய கலாட்டாவைக் கண்டு, “ஓஹோ! நான் இந்த உடலுக்குள் இருப்பதே இந்தக் கும்பலுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கு! ஒழிந்து போவதே நல்லது!” - என்று நினைக்கும்!

எட்டையாபுரத்துக்கு 10 மைல் தொலைவிலுள்ள ஆத்தனூர் என்ற கிராமத்தில் சென்ற 3-ந் தேதியன்று 5 வயதுக் குழந்தையொன்றை இறந்து விட்டதாகக் கருதி சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்களாம்! அங்கே சென்றவுடன் புதைக்கப் போகும் சமயத்தில் திடீரென்று அக்குழந்தை தண்ணீர் கேட்டதாம். பிறகு வீட்டுக்குக் கொண்டு வந்தார்களாம்! (இதே மகாபாபம் என்று கருதி சுடுகாட்டிலேயே அடித்துக் கொல்லாததன் காரணம், இந்தியன் பினல் கோடு சட்டம்!) பிறகு மாலை 3 மணி வரையில் அக்குழந்தை தன் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாம். அதன் பிறகுதான் மீண்டும் மாண்டு விட்டதாம். நள்ளிரவில் “இறந்த” இக்குழந்தையை அதிகாலையில் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்களாம். அதன் பிறகு 8 மணி நேரம் பிழைத்திருந்திருக்கிறது!

சுடுகாட்டுக்குக் கொண்டு போவதில் எவ்வளவு அவசரம் பார்த்தீர்களா?

ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டியவர்களை அவசரமாகச் சுடுகாட்டுக்கு அனுப்புவதில் மகா நிபுணர்கள், பாரதமாதா புத்திரர்கள்! டாக்டருக்கு ஆள் அனுப்ப வேண்டியதற்குப் பதிலாக வெட்டியானுக்கு ஆள் அனுப்புவதில் பலே சூரர்கள் தமிழ் மாதா புத்திரர்கள்! மருந்துக்கு ஆள் அனுப்புவதற்குப் பதிலாக வரட்டிக்கு ஆள் அனுப்புவதில் மகா நிபுணர்கள், திராவிட மாதா புத்திரர்கள்!

குத்தூசி குருசாமி (08-10-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It