kuthoosi gurusamy 300மேளக் கச்சேரி!

பாட்டுக் கச்சேரி!

நாட்டியக் கச்சேரி!

விகடக் கச்சேரி!

- இவைகளைப் போலவே தமிழ் நாட்டில் இன்னொரு புதிய கச்சேரியும் வந்துவிட்டதாகப் பொதுமக்கள் குதூகலப்பட்டிருக்கின்றனர்!

அதுதான் பேச்சுக் கச்சேரி!

“டேய்! சினிமாவுக்குத்தான் டிக்கெட் கிடைக்கலையே! என்ன செய்யலாம்? எங்கேயாவது பாட்டுக் கச்சேரி இருக்கிறதா? பேப்பரிலே பார்த்தியா? அல்லது அதோ அந்தச் சுவர்ப்பக்கம் போய்ப் படித்துப் பார்!”

“நான் பேப்பர் படிப்பாளியல்ல, சுவர்படிப்பாளியப்பா! அதிலுள்ள சங்கதிகளே என் அறிவுக்குப்போதும்! மயிலாப்பூரிலே நல்ல பாட்டுக் கச்சேரி ஒண்ணு இருக்குது! ஆனால் மொட்டப்பயல் யாரோ பாடுகிறானாம்! அது சுகமில்லை! மேரீஸ் ஹாலில் பொம்பிளைப் பாட்டுக் கச்சேரி நடக்குது. ஆனால் பாட்டுதான் சுகமேயொழிய, உருப்படியைப் பார்த்தால் நல்லா யிருக்காது! ஒரே கருப்பு!”

சரி! அப்படியானால் இப்போ எங்கே போகலாம்?”

“கடற்கரையிலே ஏதாவது “மீட்டிங்” இருந்தாலும் போகலாம்! அங்கே யும் நல்ல உருப்படிகள் பேசினால் தான் கேட்க நல்லாயிருக்கும்! கண்டதுகளெல்லாம் பேசினால்?”

“கண்ட பேச்சையெல்லாம் கேட்பதென்றால் எனக்குக் கூடப் பிடிப்பதே யில்லை! போனமாசம் இந்த இவர் பேசினார்! அடாடா! என்ன அடுக்கு! என்ன அலங்காரம்! என்ன அழகு! போடாபோ! அந்த மாதிரி இனி எவண்டா பேசப்போறான்?”

“அடடே! இருடா! அதோ பார்! வால்போஸ்டர்! இன்னைக்கி பீச்சிலே ராஜாஜி பேசுறாருடா! போவமா?”

உனக்குத்தான் அவர் கட்சியே பிடிக்காதே! அவர் பேச்சை ஏன் கேட்கணும்?”

பேச்சுக் கேட்பதிலே கட்சி -கிட்சி எல்லாம் என்னடா? ஏதோ புது ஆளாயிருக்கணும்! பழைய ஆட்களையே கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போயிடுத்துடா! ஆச்சாரியார் பேச்சுக் கேட்டு 10 வருஷமாச்சுடா!”

“நான் கூடத்தாண்டா! சில சங்கதியெல்லாம் எப்படியோ தள்ளி கிட்டே போயிடுது! வைஜயந்திமாலா டான்ஸ் கச்சேரி பார்த்துக்கூட 2 வருஷமாச்சு! பாகவதர் பாட்டுக் கச்சேரி கேட்டு கிட்டத்தட்ட 4 வருஷமாகப் போவுதுடா!”

“சரி! ராஜாஜி பேச்சுக் கச்சேரிக்குப் போவமா?”

“கச்சேரியா?”

“அடடே! கச்சேரிகளைப் பற்றியே பேசினீல்ல! அதே வார்த்தை எனக்கும் வந்துட்டுது!”

“பேச்சுக் கச்சேரி” என்று வாய் தவறிக் கூறிய இளைஞன் மீது தவறில்லை! கிட்டத்தட்ட பொதுக் கூட்டம் என்பதே பெரும்பாலான மக்களுக்குப் பொழுதுபோக்காக ஆகிவிட்டது! “பார்க்கிலோ, ஆற்றங் கரையிலோ, கடற்கரையிலோ, மைதானத்திலோ - மாலை நேரத்தில் உல்லாசமாகப் பொழுது போக்கும்போது, எவனோ பேசித் தொலைகிறானே அதையும்தான் காதில் போட்டுவைப்போமே, என்று நினைப்பவர்கள் தாம் 100-க்கு 95 பேர்!

இல்லாவிட்டால் ஒரு புரட்சி வீரர் தேர்தலில் வெற்றி பெற்ற மதுரையில் ஆச்சாரியார் பேச்சுக்கும் ஒரு லட்சம் பேர் எப்படி வருவார்கள்? வந்தாலும் இறுதிவரையில் பொறுமையாக எப்படிப் கேட்டுக் கொண்டிருப்பார்கள்?

சென்னைக் கடற்கரையில் ஆச்சாரியாருக்கும் ஒரு லட்சம் பேர் வருகிறார்கள் என். எஸ். கிருஷ்ணனுக்கும் வருகிறார்கள்! காங்கிரஸ் எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் வருகிறார்கள்!

பொதுக்கூட்டத்திற்கு வருகிறவர்களெல்லாம் பேச்சைக் கேட்டு, அதன்படி நடப்பதென்றால் இந்த நாடு இந்நேரம் “குட்டிச்சுவரா” கப் போயிருக்காதா? ஏதோ கேட்டோம், கை தட்டினோம்! வீட்டுக்குப் போனோம்! சாப்பிட்டோம்! தூங்கினோம் - என்று இருப்பதனால்தான் இந்த நாட்டை எந்த நீள் செவியன் ஆண்டாலும் நமது மக்கள் அசல் காந்தி சீடர்களாக இருந்து, சகித்துக் கொண்டிருக்கிறார்கள்!

தமிழ்நாட்டில் மாபெரும் இரத்தப் புரட்சி என்றால் என்ன பொருள் தெரியுமா? “கருப்புக்கொடி” காட்டுதல்!

ஏதோ, சினிமாக் கொட்டகைக்கு முன்பு “க்யூ” வரிசையில் நின்று கொண்டிருப்பதைவிட இந்த அளவாவது வீரம் வந்திருக்கிறதே! வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததிகளாகிய நாம் பெருமைப்பட வேண்டியது தான்! மைனாரிட்டிக் கட்சி ஆட்சி புரிகின்ற இவ்வேளையில் தமிழ் மக்களின் வீராவேசத்தைக் கண்டால், அடாடா! மயிர்க்கூச்செறிகிறது! ஜோன் ஆஃப் ஆர்க்! சிவாஜி! நெப்போலியன்! லெனின்! பூ! பூ!! இவர்களெல்லாம் என்ன புடலங்காய் வீரர்கள்! வீரர்களின் தோள், போருக்காகத் தினவெடுக்கும்,” என்று தமிழ் நூல்களில் படித்திருக்கிறேன்! இது என்ன பிரமாதம்? இன்று தமிழர் களின் உள்ளங்கைகளே தினவெடுத்துக்கிடக்கின்றனவே! எதற்கு? கூட்டத்தில் கைதட்டுவதற்கு!

(குறிப்பு:- அது சரி! உன் அடுத்த பேச்சுக் கச்சேரி என்றைக்கு?” - என்று கேட்காதீர்கள்!)

- குத்தூசி குருசாமி (29-04-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It