kuthoosi gurusamy“ஏண்டாப்பா, மந்திரிகள் மாதிரி சதா ஊர் சுற்றிக் கொண்டேயிருக்கே! ஏதாவதொரு வேலையைப் பார்க்கக் கூடாதா? சுத்த சோம்பேறியாயிருக்கிறியே! மற்றவர் உழைப்பில் இப்படி உடலை வளர்க்கிறாயே, வெட்கமாயில்லையா?”

“இந்தாப்பா! இந்த மாதிரி பேசுறதை இண்ணையோட விட்டுடு, நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன்; இனிப் பொறுக்க முடியாது. இனி நீ என் பேச்சுக்கு வரக் கூடாது!”

“டேய்! என்னடா சொன்னே? உன் பேச்சுக்கா? அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டியோ, நீ? உன்னை படிக்க வச்சு, துணி மணி வாங்கிக் கொடுத்து, இத்தனை வருஷமா வளர்த்து எருமைக்கடா மாதிரி ஆக்கினது யார் என்பதைக்கூட மறந்துட்டுத்தானே இப்படிப் பேசுறே? மானங்கெட்ட பயலே! சுத்த உதவாக்கரை!”

“போதும்! நிறுத்தப்பா! யாரைப் பார்த்து உதவாக்கரைங்கிறே! நான் சினிமாவிலே சேரப் போறேன், தெரியுமா? நான் பெரிய நடிகரானப்புறம் என்கிட்டே வந்து தொங்கப் போறே! “என் மகன்தான் இவன்” என்று நீ அப்போ சொல்வே!” “அடாடா! எவ்வளவு பெரிய நிபுணர் இவர்? சினிமாவிலே சேரப் போறாராமில்லே, சினிமாவிலே! என்ன யோக்யதையடா இருக்கு உனக்கு சினிமாவிலே சேர? புத்தியிருக்கா? நல்ல படிப்பிருக்கா. அல்லது நடிப்பாவது இருக்கா? ஒண்ணுமே இல்லியேடா!”

“அதனாலேதான் பெரிய நடிகராகலாமென்ற நம்பிக்கையிருக்கு! தெரியுமா? நாலாவது வரையிலே நீ படிக்க வச்சிருக்காட்டிப் போனா, நிச்சயம் லட்சம் லட்சமாச் சம்பாதித்திருப்பேன்! இப்போ இந்தப் படிப்புத்தான் இடைஞ்சலாயிருக்கு, தெரியுமா?”

“படிப்பா? சுத்த தற்குறியா இருக்கனு மூங்கிறியா? ரொம்ப சரி! உன்னைப்போல் ஒரு முட்டாளை நான் பார்த்ததேயில்லையடா! நீ எங்கேயாவது ஒழிஞ்சு போனாலும் நிம்மதியாயிருப்பேன். உன்னைக் காணும் போதெல்லாம் என் வயிறு வேகுதுடா! கிராப்பு வேறே! ஷர்ட் வேறே! இதிலெல்லாம் குறைச்சலில்லே! ஒரு தம்பிடிக்குப் பிரயோஜன மில்லாட்டிப் போனாலும் வீண் ஜம்பத்திலே மட்டும் குறைவைக் காணோம்! அது சரி! நீ என்னதான் நினைச்சுக் கிட்டிருக்கே? சொல்லித் தொலையேண்டா!”

“நானா? சினிமாவிலே சேர்ந்த பணம் சம்பாதிச்சுகிட்டு அப்புறம் மந்திரியாகப் போகிறேன்.”

"மந்திரியாகவா? இதென்னடா, கிறுக்கா பிடிச்சிருக்கு, உனக்கு?”

“கிறுக்கல்லப்பா, கேளு! இந்தக் காலத்திலே எல்லாத் தலைவர்களை விடவும் ஜனங்களிடத்திலே அதிக செல்வாக்கிருக்கிறவர்கள் யார் தெரியுமோ? சினிமா நடிகர்கள்தான்! நாளைக்கு வருகிற தேர்தலிலே, நல்ல சினிமா நடிகரில் நாலு பேர் காங்கிரஸ் பேராலே தேர்தலுக்கு நின்றால், அவர்களை எதிர்த்து எந்த தியாகி அல்லது பணக்காரன் நின்றாலும் ஜெயிக்க முடியுமா? நல்லா யோசித்துப் பார்!

“அப்படியா? சரி! ஜெயிக்கிறதாவே வச்சிக்கோ! ஜெயிச்சா மந்திரியாகி விட முடியுமோ?”

“ஆகா! பணமிருக்கே, பணம்! அதைவீசி எறிஞ்சா மந்திரி வேலை தானே வருது! நம் நாட்டுக்கு அரசியல் சட்டம் வகுக்கிறதுக்காகப் போன ஆசாமிகள் பெயரெல்லாம் உனக்குத் தெரியுமல்லோ?”

“மந்திரியா வருவதுண்ணா அவ்வளவு சுளுவாப் போச்சுண்ணா நினைக்கிறே? நல்ல படிப்பு வேணும்! தெரியுமா?” “அதுதான் தப்பு! நீ அந்தக் காலத்து மந்திரிகளை நினைச்சுகிட்டுப் பேசுறே!” இதெல்லாம் எதுவுமே இல்லாட்டித்தான் மந்திரியாக முடியும். இந்தக் காலத்திலே! தெரியுமா? பிற்காலத்திலே மந்திரியா வரப்போகிற உன் மகனை நீ இப்படி “உதவாக்கரை” ண்ணும் “சோம்பேறி” யிண்ணும் திட்டுறியே!”

“அடெ, சே! விளையாட்டுக்காகத் திட்டினா, நிஜமுண்ணா நினைச்சுக்கிட்டே! (அடியே! உன்னைத் தானே!) தம்பிக்கு ஓவல்டின் கொண்டாந்து கொடு டீ! என் சட்டைப் பையிலேயிருந்த மூணு ரூபா எடுத்தாந்து கொடு! ஏதோ புது சினிமாப் படம் வந்திருக்காம்! தம்பி! போயிட்டு வர்றியாடா? பத்திரமா பார்த்துப் போ! நடு ராத்திரியிலே வர்றபோது தனியா நடந்து வராதே! ஏதாவது மோகினி கீகினி பிடிச்சுக்கப்போவது! ரிக்ஷாவிலே ஏறிவா! அடியே இவன் வந்தப்புறம் திருஷ்டி சுற்றிப் போடுடீ! நான் கடைக்குப் போகணும், நாழியாச்சு!”

(சினிமா நடிப்புக்கும் மந்திரி வேலைக்கும் தகுதியோ, திறமையோ தேவையில்லை என்று இந்த “உதவாக்கரை” நம்பியிருப்பதைப் பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்களோ, அறியேன், அம்பலவாணா!)

- குத்தூசி குருசாமி (24-4-50)

Pin It