தர்ப்பை பிடிக்கிற கையில் பேனாவைக் கொடுத்தால் அது யார் குடியைக் கெடுக்கலாம் என்றுதானே ‘ப்ளான்’ போடும்? தர்ப்பை இனத்தைக் கொண்டுபோய் திவான் பதவியில் வைத்தாலும், அது இறுதியாக காலட்சேபப் புத்தியை விட்டுவிடுமா?

kuthoosi gurusamy 300இந்த விதமாக ஒரு மாதிரிக் கவலையுடன் எதை எதையோ ஆலோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

வம்புக்கார சிநேகிதர் ஒருவர் வந்தார். ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது சதா கேட்டுக் கொண்டேயிருப்பவர். அவர் 10 கேள்வி கேட்டால் நான் ஒன்றுக்குத்தான் பதில் சொல்வது வழக்கம். எப்படியாவது என் வாயைப் பிடுங்குவதில் அவருக்கு அலாதிப் பிரியம். அவரிடத்தில் நான் மௌன விரதப் போட்டி போட்டு தோற்காத சமயமே கிடையாது. ஆனால் இந்தத் தடவை அவர் என்ன பாடுபட்டாலும் சரி, வாயைத் திறப்பதே இல்லை என்று முடிவு செய்து கொண்டிருந்தேன். ஏனென்றால் எனக்கு யார் பேரிலேயோ மகாக் கோபம்! ஆத்திரம்! மன வேதனை! காந்தியார் உடல் யமுனைக் கரையில் (எனக்குத் தெரிந்த ஒரு இடத்தில்) எரிந்து கொண்டிருந்தது என் கண் முன்னாலேயே நின்று கொண்டிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் நண்பர் வந்தார்.

“என்னய்யா! குத்தூசி! முகம் மூணாம் பேஸ்து வைத்தவன் ‘ஏஸ்’ பிடியை இழந்துவிட்டு, கைத்துருப்பும் காலியாகி, எந்தச் சீட்டை இறங்குவது என்று யோசிக்கிறது போல இருக்குதே!” என்றார்.

மௌனம்!

“மகாத்மா காந்தியை ஒரு சண்டாளன் கொன்று விட்டானே! பார்த்தீரா? அயோக்கியப் பயல்! 79 வயது கிழவரைக் கொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?”

நான் வாய் திறக்கவில்லை. கசிந்த கண்ணீரை மட்டும் துடைத்துக் கொண்டேன்.

“அந்தச் சண்டாளப் பயல் ஆடு வெட்டுகிற வேலையிலிருப்பவனா, என்ன? ஆட்டை விட சாந்தமானவராச்சே மகாத்மா? கசாப்புக் கடைக்காரனுக்குக்கூட மனம் வராதே, அவர் மேல் கை வைக்க?”

மீண்டும் மௌனம். மெய் மட்டும் சிலிர்த்தது.

அந்தக் கிராதகன் - வாலியை மரத்தின் மறைவிலிருந்து கொன்ற ராமனைப் போல - கும்பிட்டுவிட்டு கொன்றிருக்கிறானே! அவன் வம்சம் அழியாதா? அவன் கூட்டம் ஒழியாதா? நினைக்க நினைக்க என் நெஞ்சு பதறுகிறதய்யா? படுபாவி! ஈனஜாதிப் பயல்! வெறிபிடித்த காண்டா மிருகம்! எருமைகூட ஒரு குழந்தையைக் கண்டால் விலகிப் போகும்! குழந்தைகளிலும் குழந்தையான கிழவரைக் கொல்ல எப்படித்தான் மனம் வந்தேதோ? இரக்கமென்ற ஒன்றில்லாத அரக்கன்!”

கண்ணீரை மறைப்பதற்காகக் குனிந்து கொண்டேன். பேசவில்லை.

ஏனய்யா, வாய் திறக்காமல் பொம்புளை மாதிரி அழுகிறீர்? .... சரி! உம்மை ஒன்று கேட்கலமென்றுதான் வந்தேன். அந்த மிலேச்ச ஜாதிப் பயல் ஒரு பார்ப்பானாமே! ‘விடுதலை’ பத்திரிகையில் போட்டிருந்ததே! நிஜந்தானா? மற்றப் பத்திரிகை எதிலுமே வரவில்லையே!”

மீண்டும் மௌனம் சாதித்தேன். என் கையிலிருந்த ‘பாரத தேவி’, ‘லிபரேட்டர்’ ‘சுதந்தர நாடு’ ஆகிய மூன்று பத்திரிகைகளையும் நீட்டினேன்.

“ஓஹோ! மூன்றிலும் போட்டிருக்கே! மற்ற களவாணிப் பயலுகள் (இவர் மதுரை ஜில்லாக்காரர்) பத்திரிகையில் போடலையே, ஏன் என்ன பித்தலாட்ட உலகமய்யா, இது? கொலைக்காரன் ஒரு துலுக்கராகவோ, சீக்கியராகவோ, வெள்ளையராகவோ, மற்றவனாகவோ இருந்தால் இந்நேரம் இந்த அயோக்கியப் பத்திரிகைகள் பட்டைச் சோறு பெரிசு எழுத்திலே போட்டிருக்காதா?

நான் வாய் திறக்கவே யில்லை.

“அது சரி! நீரென்ன, பேசா மடந்தையாகி விட்டீரோ? ஆமா!.... ‘பார்ப்பானெல்லாம் சுத்தப் பேடிகள்! கோழைகள், பின்புறமிருந்துதான் விஷமம் செய்வானே யொழிய எதிர்த்து நிற்க மாட்டான்,” என்றெல்லாம் சொன்னீரே, இதற்கென்ன சொல்கிறீர்? என்ன வீரத்தனத்துடன் காந்தியைச் சுட்டான் பாரும்?” என்று கம்பீரமாகக் கேட்டார்.

“ஓய் நிறுத்ததுங்காணும்! பலே வீரத்தைக் கண்டுவிட்டீர்! காந்தியைச் சுட்டுக் கொல்வதற்கு ரொம்ப வீரம் வேணுமோ? அதுவும் கிட்டே வருகிறபோது கும்பிட்டுவிட்டு, திருட்டுத் தனமாக ரிவால்வரை எடுத்துச் சுடுவதற்கு? பேடியிலும் கடைந்தெடுத்த பேடிகூட இதைச் செய்யலாமே! மிலேச்சப் பயல்! தர்ப்பை பிடிக்கிற கையில் ரிவால்வர் கிடைத்தால் யாரைச் சுடுகிறது என்பது எப்படித் தெரியும்? ஆடு மேய்த்த கூட்டத்திடம் ஆட்சியை ஒப்பித்தால் அது உருப்படவா போகிறது? இந்தக் காந்தியாரே ஒரு பார்ப்பானா யிருந்தால் அந்தப் பயல் இப்படிச் செய்திருப்பானா? நாசகாரப் பயல்! சதிகாரக் கும்பல்! நன்றிகெட்ட நரிக் கூட்டம்!”-

என்று எதை எதையோ என் ஆத்திரத்திலும் துயரத்திலும், முன் பின் யோசிக்காமல், அக்கம் பக்கம் பார்க்காமல் மவுண்ட்ரோடு மஹா விஷ்ணுவையும் மறந்துவிட்டு கொட்டிவிட்டேன்.

“பார்த்தீரா! உம்மைப் பேசச் செய்தேனா, இல்லையா? இவரிடம் உமது பாச்சா பலிக்காதையா! எவரிடம்? இதோ இவரிடம்!” என்று தன் மார்பைத் தட்டிக் காட்டிக் கொண்டே புறப்பட்டு விட்டார்.

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It